துக்ளக் தர்பார் விமர்சனம்

0
220

துக்ளக் தர்பார் விமர்சனம்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள்; இயக்கம்: டெல்லி பிரசாத் தீனதயாளன். வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ்.

துக்ளக் தர்பார் படமும் அரசியலைப் பின்னணியாக கொண்டிருந்தாலும் முழுமையான அரசியல் படமாக இல்லை. சிறுவயதில் தாய், தந்தையை இழந்த சிங்காரவேலன் (விஜய் சேதுபதி), தனது தங்கை மஞ்சிமா மோகனுடன் வாழ்ந்து வருகிறார். ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் ராயப்பன் (பார்த்திபன்). அரசியலில்  ஆர்வம் கொண்ட விஜய் சேதுபதி, ராயப்பனைப் போல ஆக வேண்டுமென ஆசை. எப்படியோ ராயப்பனை நெருங்கி, கவுன்சிலராகவும் ஆகிவிடுகிறார். இதற்குப் பிறகு, ராயப்பனும் சிங்காரவேலனும் சேர்ந்து ஒரு நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர். இதற்கிடையில் ஒரு சண்டையில் விஜய் சேதுபதிக்கு மண்டையில் அடிப்பட்டு வித்தியாசமாக நடந்து கொள்கிறார். அதே நேரத்தில் நில விவகாரம் தொடர்பான ஆவணங்களை யாரோ ஊடகங்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள். 50 கோடி ரூபாய் பணத்தையும் வைத்த இடத்தில் காணவில்லை. இதைச் செய்தது யார் எனத் தேட ஆரம்பிக்கிறார் ராயப்பன். அந்த நபர் யார், ஏன் இப்படிச் செய்கிறார் என்பது மீதிக்கதை.

படத்தில் விஜய் சேதுபதி, 2 வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். நடிப்பில் அந்நியன் விக்ரம், அமைதிப்படை சத்யராஜ் ஆகியோரை ஞாபகப்படுத்துகிறார்.

கதாநாயகியாக வரும் ராஷி கண்ணாவிற்கு அதிகம் வேலை இல்லை. அழுத்தமான தங்கை கதாபாத்திரத்தில் தங்கையாக வரும் மஞ்சிமா மோகன், வசனம் இல்லாமல் மௌனத்தில் அதிகம் பேசி இருக்கிறார்.
பார்த்திபன், தனக்கே உரிய டிரேட்மார்க்கான நக்கல் நையாண்டி வசனங்களுடன் நடித்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்.

கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சத்யராஜ், ஓட்டு மொத்த கைத்தட்டலை தட்டிச் செல்கிறார்.

பல படங்களுக்குப் பிறகு கருணாகரனுக்கு இந்தப் படத்தில் நிறையக் காட்சிகள் அமைந்துள்ளது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கூடுதல் பலம் சேர்க்கிறார் கருணாகரன்.

கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ஓகே.

அரசியலில் அட்டகாச கதையை மிக மிக ஜாலியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

மொத்தத்தில் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் துக்ளக் தர்பார் பொழுதுபோக்கு படம்.