தில்லு இருக்கிற ஹீரோ யாரும் கிடையாது! சண்டைக்காட்சிகளில் கூட டூப் போட்டு தான் நடிப்பார்கள்!! ‘தில்லு இருந்தா போராடு’ விழாவில் கே.ராஜன் அதிரடி பேச்சு!!!
அறிமுக இயக்குநர் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில், கே.பி.புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பி.பிரசாத் தயாரிப்பில், வனிதா விஜயகுமார், யோகி பாபு, ராஜசிம்மன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.
விஜய்திருமூலம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.சாயீ தர்ஷன் இசையமைத்திருக்கிறார். ஆண்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, எஸ்.கே.முரளிதரன், ஸ்ரீவிஜய், சதீஷ்காந்த் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். மின்னல் முருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். விஜயமுரளி மற்றும் கிளாமர் சத்யா மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். சோழிங்கர் எம்.குப்பன், ஜி.ஹரிபாபு, என்.சாய்பாபா, ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்களாக எஸ்.கே.முரளிதரன் மற்றும் எம்.மணிவன்னன் பணியாற்றியிருக்கிறார்கள். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தை ஆர்.பி. நியூ சினிமா சார்பில் ஆர்.பி.பாலா வெளியிடுகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகுநாதன், தயாரிப்பாளர் கே.ராஜன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய வனிதா விஜயகுமார், “இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பிக் பாஸ் முடிந்த பிறகு நான் நடித்த முதல் படம் இது தான். நான் எப்போதும் கதை கேட்க மாட்டேன். காரணம், நாம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறோம் அதற்கு எதற்காக முழு கதையையும் கேட்டு இயக்குநரின் நேரத்தை வீணக்குவது என்று நினைப்பேன். அதனால், என்னுடைய கதபாத்திரத்தை மட்டும் சொல்ல சொல்வேன். சிறிய நிறுவனமா அல்லது பெரிய நிறுவன்மா, இயக்குநர் யார், ஹீரோ யார் என்றெல்லாம யோசிக்க மாட்டேன். என்னை நம்பி, என்னை தேடி வரும் அனைவரும் எனக்கு பெரியவர்கள் தான், அவர்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன். அப்படி தான் இந்த படம் என்னை தேடி வந்தது. இந்த படத்திற்கு தலைப்பு வைப்பதற்கு முன்பு, என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பஞ்சாயத்து பரமேஸ்வரி என்று சொன்னார்கள், அந்த பெயர் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு மட்டும் அல்ல, என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் அந்த கதாபாத்திரம் மனதில் பதிந்து விட்டது. இப்போதும், அந்த படம் என்னவானது என்று கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
நான் நன்றாக ஓட்டுவேன், ரேஸர் போல் ஓட்டுவேன். ஆனால், டூ வீலர் ஓட்ட தெரியாது. ஒருமுறை முயற்சித்து வெறுத்து விட்டேன். ஆனால், இந்த படத்தில் நான் புல்லட் ஓட்ட வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். அதிலும் புடவை கட்டிக்கொண்டு ஓட்ட வேண்டும் என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. இருந்தாலும் படத்திற்காக ஓட்டியாக வேண்டும் என்பதால் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி எனது தோழின் கணவர் எனக்கு புல்லட் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். ஒரே ஒரு நாளில் புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டேன். ஆனால், புடவை கட்டிக்கொண்டு புல்லட் ஓட்ட மிகவும் கஷ்ட்டப்பட்டேன். இயக்குநர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்த படத்தில் எனக்கு மிகப்பெரிய அறிமுக காட்சி இருக்கிறது. இதுபோன்ற ஒரு அறிமுக காட்சி நடிகைகளுக்கு கிடைப்பது மிகவும் குறைவு.
கடவுள் மனிதர்கள் ரூபத்தில் தான் வருவார்கள் என்று சொல்வார்கள், அதுபோல் ஆர்.பி.பாலாவும் இந்த படத்தின் இயக்குநர் வாழ்விலும், படத்துக்குள்ளும் கடவுளாக வந்திருக்கிறார். அவர் வந்த பிறகு தான் இந்த படம் எதிர்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் மறைந்து போனது. இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம் இது. மிக சிறப்பான மெசஜ் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும்” என்றார்.
படத்தின் இயக்குநர் எஸ்.கே.முரளி பேசுகையில், “படத்தின் தலைப்பு போலவே நாங்கள் பல போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறோம். இந்த படம் இன்று வெளியாவதற்கு ஆர்.பி.பாலா தான் காரணம். நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான், சீக்கிரமே அஜித்தை வைத்து படம் எடுப்பேன், அதற்கு முன்பு இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன் அதை வந்து பாருங்க, என்று அவரிடம் சொன்னேன். அவர் படம் பார்த்துட்டு அழுதுவிட்டார். படத்தில் இருக்கும் அம்மா செண்டிமெண்ட் அவரை மிகவும் பாதித்துவிட்டது. அவர் அம்மாவை அதிகம் நேசிக்க கூடியவர் மட்டும் அல்ல அவர்களை தெய்வமாக வணங்க கூடியவர். தாய்க்கு பூஜை செய்கிற மனிதர் அவர். நான் பார்த்ததில், அம்மாவை வணங்க கூடிய ஒரு மனிதர் என்றால் அது ஆர்.பி.பாலா தான். அவர் தான் இந்த படம் வெளியாக பெரும் உதவியாக இருந்தார்.
இந்த படத்தில் நல்ல மெசஜ் ஒன்றை சொல்லியிருக்கிறோம். அது படிப்பு சம்மந்தப்பட்டது. நிச்சயம் இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் வகையில் படம் இருக்கும். அனைத்து தரப்பு மக்களையும் படம் நிச்சயம் கவரக்கூடியதாக இருக்கும். வனிதா விஜயகுமார் மேடம் படத்திற்குள் வந்ததும் படம் பெரியதாகி விட்டது. அவர் எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த படம் வெளியான பிறகு வனிதா விஜயகுமார் மேடம் மிகப்பெரிய இடத்துக்கு போவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகுநாதன் பேசுகையில், ”தில்லு இருந்து போராடினால் நிச்சயம் வெற்றியை தான் கொடுக்கும். அம்மா மீது பாசம் உள்ளவர் என்று சொன்னார்கள். இயக்குநருக்கு எம்.ஜி.ஆர் பெயர் வைத்ததாக சொன்னார்கள். நானும் அந்த எம்.ஜி.ஆரை நம்பி தான் இங்கே வந்தேன். 12 வயதில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, அவரை நம்பி இங்கு வந்துவிட்டேன். அவர் என்னை அரவணைத்து எனக்கு முதல் படம் கொடுத்தார் அது தான் ‘புதிய பூமி’, அன்று முதல் இன்று வரை நான் ஏறிக்கொண்டே இருந்தேனே தவிர இறங்கவில்லை. 300 படங்கள் தாண்டி விட்டது.
இங்க எல்லோருக்கும் தில்லு இருக்கு அதனால் தான் இப்படி ஒரு படத்தை பல போராட்டங்களை கடந்து வெற்றிகரமாக இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள், அதனால் இவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள். வனிதா விஜயகுமார் நடித்த அநீதி படம் பார்த்தேன். அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் அவங்களோட எண்ட்ரி பெண் ரஜினி, பெண் அஜித், பெண் விஜய், பெண் எம்.ஜி.ஆர் போல் டைனமிக்காக இருக்கும். பெரிய நடிகர்களின் படம் ஒரு பக்கம், ஒடிடி படங்கள் மறுபக்கம், மூன்றாவதாக மக்கள், ஒட்டி, சாட்டிலைட் என எல்லாத்துக்குமான படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படம் தான் ‘தில்லு இருந்தா போராடு’. சிறிய படம் எடுக்கிறவர்கள் தளர்வடைய கூடாது. அன்றில் இருந்து இன்று வரை நான் சிறிய படம் எடுத்து தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். சிறிய படங்களில் நான் பணம் சம்பாதித்திருக்கிறேன். இன்றும் சிறிய படம் தான் எடுக்கிறேன். எனவே, சிறிய படங்கள் எடுங்கள் தோற்க மாட்டீர்கள், ஜெயிப்பீர்கள். அந்த வகையில், இந்த படத்தை எடுத்த இவர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், ”போராட்டத்திற்கு தில்லு இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அநியாயங்களுக்கு எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். இன்று நாட்டில் பல அநியாயங்கள் நடக்கின்றன. எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காதீர்கள், எதிர்த்து போராடுங்கள்.
தில்லு இருக்கிற ஹீரோ யாரும் கிடையாது. சண்டைக்காட்சிகளில் கூட டூப் போட்டு தான் நடிப்பார்கள். சினிமா ஹீரோக்கள் உண்மையான வீரர்கள் அல்ல, போலியான வீரர்கள், அவர்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம். எம்.ஜி.ஆர் எல்லோரையும் உயர்த்தினார், எல்லோரையும் வாழ வைத்தார். இயக்குநர் எம்.ஜி.ஆர் ரசிகர் என்று சொன்னார்கள், நிச்சயம் அவர் தோல்வியடைய மாட்டார். ஆனால், படத்தை வெளியிடுபவர் அஜித் ரசிகர் என்று சொன்னார். அது தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அஜித் போல் அதிர்ஷ்ட்ட சாலி இங்கு யாரும் இல்லை. ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுவார், பொதுமக்களை சந்திக்க மாட்டார், முதலமைச்சருக்கு பாராட்டு விழா என்றால் வர மாட்டார், அப்படி வந்தாலும் என்னை வற்புறுத்தி அழைத்தார்கள், என்று சொல்வார். அப்படி இருந்தும் இன்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவருடைய படத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்கள். அவர் நல்ல மனசு கொண்டவர் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், உங்கள் மீது உயிரை வைத்திருக்கும் ரசிகர்களை மதிக்க வேண்டாமா, அதை செய்யுங்கள்.
இந்த படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்துமே பிராமாதமாக இருந்தது. ஹீரோவாக நடித்திருப்பவர் நன்றாக இருக்கிறார், நன்றாக நடனம் ஆடுகிறார். இந்த படத்தை துணிச்சலாக தயாரித்த தயாரிப்பாளர், சிறப்பாக இயக்கிய இயக்குநர் என அனைவரும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.