தியேட்டரில் பொறி பறக்கும்! “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்

0
236

தியேட்டரில் பொறி பறக்கும்!  “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் கோலகலத்திற்கு தயாராகி வருகிறது. புத்தம் புதிய தோற்றத்தில் மிக இளமையாக சிம்பு கலக்கியிருக்கும் “ஈஸ்வரன்” பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்து பின்னணியில் ஒரு அசத்தலான கதையுடன் குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது…
ஈஸ்வரன் படத்தின் முதல் பொறி என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான். ஒரு முறை, ஜோசியர் ஒருவர் எங்கள் குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் என்று கூறிய சம்பவத்தின் தாக்கம்..  அதனால் என் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள்.. அது கதையாக என்னுள் ஈஸ்வரனாக உருவானது. இதை நடிகர் சிம்புவிடம் கதை சொல்ல வாய்ப்பு வந்தபோது , நான் ஒரு பழிவாங்கும் கதையை வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு பழிவாங்கும் கதை மேல பெரிய ஈர்ப்பு இல்லை. பிறகு இந்த கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அட்டகாசமான கம்பேக்காக இருக்கும் என நம்பினார். உடனே ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பில் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஒத்துழைப்பால் தான் படத்தை வேகமாக முடிக்க முடிந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இது  எனக்கு நான்காவது படம். அவருடன்  பணியாற்றும் போது எப்போதும் பிரம்மிப்பாகவே  இருக்கும். இத்தனை சாதனைகளுக்கு பிறகும் மிகவும் எளிமையாக இருப்பார். என்னுடைய படங்கள் வேகமாக படப்பிடிப்பு முடிவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணம் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான். படப்பிடிப்பு என்றாலே எனக்கு
ரொம்ப பிடிக்கும். அதுனால வேகமாக ஓடிக்கிட்டு இருப்பேன்.
படத்தின் தரம் குறைய கூடாது என்பது மட்டும் தான் குறிக்கோள் ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான வகையிலும் அதே நேரத்தில் தரத்திலும் சிறந்த படங்களை தர வேண்டும். இந்தப்படம் திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சி தரும். சிம்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக, குடும்பங்களோடு கொண்டாடும் படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் பொறி பறக்கும் அனுபவத்தை தரும். படத்தை ரசிகர்கள் ரசிக்க நானும் ஆவலோடு வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன் என்றார்.

மாதவ் மீடியா தயாரித்திருக்கும் “ஈஸ்வரன்” படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். சிம்பு, நித்தி அகர்வால் நாயகன் நாயகியாக நடிக்க பாரதிராஜா, ஸ்டன் சிவா  மிக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 14,2021 உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.