தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தப்பிக்க, கொஞ்ச காலத்துக்கு கார்த்திக் நரேனை சினிமா பற்றி படிக்க அனுப்பலாம் – மீரான் முகமது
21 வயதில் ‘துருவங்கள் பதினாரு” என்கிற ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை கொடுத்து ஆச்சர்யப்பட வைத்த கோயமுத்தூர் இளைஞர் கார்த்திக் நரேனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது தமிழ் சினிமா. இந்த வயதில் இப்படி ஒரு மூளைக்கார பையனா என்று வியந்தது.
இயக்குனர் கவுதம் மேனன் நரேனைக் கூப்பிட்டு “நான் பணம் போடுகிறேன் நீ படம் இயக்கு தம்பி” என்றார். ‘நரகாசுரன்’ உருவாச்சு.
கவுதம் மேனனுக்கு ‘நரகாசுரன்’ மேல நம்பிக்கை இல்லையா, அல்லது மேனன்கிட்ட பணம் இல்லையான்னு தெரியல நரகாசுரன் கிடப்பில கிடக்கான்.
அச்சச்சோ ஒரு திறமையான இளைஞனின் படைப்பு இப்படி படுத்துக் கிடக்கே என்று பதைபதைத்துப் போனவர்கள் பலபேர்.
அதன்பிறகு வந்தது ‘மாஃபியா”. அண்டர்கிரவுண்ட் உலகத்தை வேற லெவலில் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்தால் வழக்கமான தாதா கதைகளில் இருந்து காட்சிகளை எடுத்துப்போட்டு மாஃபியா கதை சொன்னார். ஏற்கெனவே நஷ்டத்துல இருந்த லைகாவுக்கு கூடுதல் நஷ்டத்தையும், கொஞ்சம் வேகமாக வளர்ந்து வந்த அருண் விஜய்க்கு ஒரு வேகத் தடையை போட்டது மாஃபியா.
அடுத்து ‘நவரசா’ என்ற அந்தாலஜி படத்தில் ‘புராஜக்ட் அக்னி’ என்ற கதையை இயக்கினார். அதில் ஒரே இடத்தில் நின்று கொண்டு அரவிந்த்சாமியும், பிரசன்னாவும் பேசிக் கொண்டே இருப்பார்கள். கதைதான் புரியாது. கேட்டா கிறிஸ்டோபர் நோலன் படம் மாதிரி பார்க்க பார்க்கத்தான் புரியும்றாங்க.
இப்போது ‘மாறன்’, ஏற்கெனவே ‘ஜெகமே தந்திரம்’ மூலம் கார்த்திக் சுப்புராஜ் தனுசுக்கு ஒரு பெரிய பள்ளத்தை தோண்டி தள்ளியிருக்க… இப்போதைக்கு கார்த்திக் தன் பங்கிற்கு அடுத்த பள்ளத்தை தோண்டி இருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கார்த்திக் நரேன் இயக்கப்போகும் படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. அதான் பயமா இருக்கு.
பேசாமல் கார்த்திக் தம்பியை கொஞ்ச காலத்துக்கு சினிமா பற்றி படிக்க அனுப்பலாம். அப்போதான் பல தயாரிப்பாளர்கள் தப்பிக்க முடியும்.
நாலு இங்கிலீசு சினிமா புத்தகம் படிச்சிட்டு, நாலு ஹாலிவுட் படம், கொரியன் படம் பார்த்துட்டு எடுக்குறதில்ல சினிமா… அது மனதின் அடி ஆழத்தில் இருந்து வருவதுன்னு தம்பிக்கு யாராவது சொன்னால் நல்லது.
மீரான் முகமது முகநூல் பதிவு
நன்றி: மீரான் முகமது