”தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்த முயற்சி நடக்கிறது” ; ‘சல்லியர்கள்’ நிகழ்வில் இயக்குநர் வ.கவுதமன் அதிர்ச்சி தகவல்
இயக்குநர் வ.கவுதமன் பேசும்போது, “சல்லியர்கள் திரைப்படமாவதற்கு முன்பே கிட்டு என்னிடம் இந்த கதையை கூறினார். ஒருவகையில் என்னுடைய மகன் தமிழ் கவுதமன் இந்த படத்தின் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேறு தோற்றத்தில் இருந்ததால் உடனடியாக இதற்கு மாற முடியவில்லை. கதையாக கேட்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் படமாக பார்த்தபோது, குறிப்பாக இரண்டாம் பகுதியை பார்த்து முடித்தபோது எனக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பெண் ஒரு பேயை போல நடித்துள்ளளார். திரையில் இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய நடிகையும் அந்த நடிப்பை வழங்கியிருக்க முடியுமா என தெரியவில்லை. நடிப்பால் நம் மனதை உறைய வைத்து விட்டார்.
பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என பாரதியார் சொன்ன அந்த வார்த்தைகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தம். அந்த கருத்தை தான் இந்த படம் சொல்லுகிறது. போராட்டத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்றும் மருத்துவர்களை கூட அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான்.. அதுதான் இந்த படத்தின் கருப்பொருள்.. காப்பாற்றுபவன் கடவுளுக்கு சமமானவன். அந்த கடவுளையே அழிக்க நினைக்கிறான் எதிரியான சிங்களவன் ஆனால் அவனையும் காப்பாற்ற நினைக்கும் இனம் தான் நம் தமிழினம். மேதகு பிரபாகரனால் வளர்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். இந்த படைப்பை தமிழினம் உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும்
பேசாப்பொருளை பேசுவது தான் படைப்புக்கு பேரழகு. அதை இந்த படம் பேசுகிறது. 15 வருடங்களுக்கு முன்பே ‘சந்தனக்காடு’ தொடர் மூலமாக வீரப்பன் வாழ்க்கையை எந்த சமரசமும் இன்றி அரசுகளின் அச்சுறுத்தலை எல்லாம் எதிர்கொண்டு நிஜத்தை மட்டுமே துணிச்சலாக கூறியிருந்தேன். அது இன்றும் பேசப்படுகிறது. அதே சமயம் இன்று வீரப்பனை பற்றி பல பொய்யும் புனைக் கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் கூட அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கொடுக்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை. வீரம் செறிந்த ஈழப் போராட்டத்தை ஒரு படமாக எடுப்பதற்கு முன்னோட்டமாகவே சந்தனக்காடு தொடரை எடுத்தேன். சந்தனக்காடு போலவே இந்த உலகத்தை முழுக்க அதிர வைக்க இன்னும் படைப்புகள் ஒரு நாள் வரும். அதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்.
இன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட சதவீத தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்தும் ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சண்டை போட்டவன், கொன்று குவித்த சிங்களவன் இன்றும் ஒற்றுமையாக இருக்கிறான்.. ஆனால் சிதறி ஓடிய நம் கூட்டம் இன்னும் தங்களுக்குள் பகை வளர்த்து பிரிந்தே கிடக்கிறது. பொய்யை உண்மையாக்குகிற ஒரு சூழலை இனி தமிழினம் அனுமதிக்க கூடாது” என்று கூறினார்.