தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது: ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

0
176

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது: ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை, சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஊரடங்கு குறித்து நிறைய வதந்திகள் வருகின்றன. குரூரமான மனப்பான்மை உள்ளவர்களால்தான் இத்தகைய வதந்திகளை பரப்ப முடியும். இன்னும் தீவிரமான கட்டுப்பாடுகள் குறித்து இன்று சில அறிவிப்புகள் வரும். ஆனால், அது ஊரடங்கு அல்ல. திருமண நிகழ்வுகள், உணவகங்கள், துக்க நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த இடங்களில் இன்னும் தீவிர கட்டுப்பாடுகள் வரும். இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது. மால்கள் உள்ளிட்டவற்றில் முகக்கவசம் அணியாவிட்டால் வாடிக்கையாளர்களை நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கூட்டமாக அனுமதித்தால் முதலில் அபராதம் விதிப்போம். அடுத்த தடவை மூடிவிடுவோம். இது சிரமம் ஏற்படுத்துவதற்காக அல்ல, ஒழுக்கத்தைக் கொண்டு வருவதற்காகத்தான். இதுதவிர, அன்றாட கொரோனா தடுப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும். இவையெல்லாம் செய்தால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். மாநகராட்சிக்கு சொந்தமாக 240 விளையாட்டுத் திடல்கள் உள்ளன. அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுவதுமாக அவற்றை மூடவும் முடியாது. மக்கள் கட்டுப்பாடுகளுடன் வெளியில் செல்ல வேண்டும். சென்னையில் வீடு, வீடாக பரிசோதிக்க 11 ஆயிரத்து 500 பேர் களத்தில் உள்ளனர். தினமும் அறிகுறி உள்ள 500 பேரை இத்தகைய சர்வே மூலம் கண்டறிகிறோம். சென்னையில் கொரோனா கேர் சென்டர்களை பொறுத்தவரையில் 12 ஆயிரத்து 600 படுக்கைகள் உள்ளன. அதில், 1,104 பேர் தான் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை முழுதும் 20 ஆயிரம் பேர் இப்போதைக்கு சிகிச்சையில் உள்ளனர். இதில் 80% பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். மீதம் உள்ளோர் அரசு, தனியார் மருத்துவமனைகள், கேர் சென்டர்களில் உள்ளனர். சென்னையில் இதுவரை தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படவில்லை” என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.