தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி பிரிவு : உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து சமரச முயற்சி

0
93

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி பிரிவு : உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து சமரச முயற்சி

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல டைரக்டரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.

இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.

அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார்.

பிறகு தனுசும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொள்கிறார்கள் என கூறப்பட்டது. சினிமா கிசுகிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

இதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

“எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, ​​நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்,” என்று கூறியிருந்தார்.

அவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த போது இரு வீட்டிலும் சற்று தயங்கினார்கள். தனுசை விட ஐஸ்வர்யா 2 வயது மூத்தவர் என்பதால் அந்த திருமணம் சரியாக இருக்குமா என்று நினைத்தார்கள். ஆனால் தனுசும், ஐஸ்வர்யாவும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் 2004-ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு முதல் குழந்தை யாத்ரா, 2010-ல் 2-வது குழந்தை லிங்கா பிறந்தனர். 2020-ம் ஆண்டு வரை அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாகவே சென்று கொண்டு இருந்தது. அதன்பிறகுதான் அவர்களின் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

நடிகர் தனுஷ் இந்தி படங்களில் நடிக்க தொடங்கியவுடன் அவர்களின் கருத்து வேறுபாடு அதிகரிக்க தொடங்கியது. மற்ற நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகியதால் ஐஸ்வர்யா கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2 மகன்களுடன் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ்- ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை முடிவுக்கு கொண்டுவர உறவினர்களும், நண்பர்களும் கடந்த சில மாதங்களாக ஓசையின்றி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். இருவரையும் அழைத்து பேசினார்கள். ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

தனுசின் சகோதரர் டைரக்டர் செல்வராகவன் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், ‘கோபத்தில் இருக்கும்போது தயவு செய்து எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். 2 நாட்களுக்கு அமைதியாக விட்டு விடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். சரியானபடி ஓய்வு எடுங்கள்.

2 நாட்களுக்கு பிறகு உங்களிடையே ஏற்பட்ட பிரச்சினை தானாகவே மறைந்துவிடும். அல்லது பிரச்சினைக்கு சரியானபடி தீர்வு காண்பதற்கான மனநிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்” என்று கூறி இருந்தார்.

தனுஷ்-ஐஸ்வர்யாவை சமரசம் செய்யும் வகையில் இந்த பதிவை அவர் வெளியிட்டு இருந்தார். ஆனால் இதற்கும் பலன் கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு முதலில் தனுசும், பிறகு ஐஸ்வர்யாவும் அடுத்தடுத்து தாங்கள் பிரிவதாக டுவிட்டர் பதிவை வெளியிட்டபோது அவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தனுசையும், ஐஸ்வர்யாவையும் சமரசம் செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

தனுஷ் தற்போது ஐதராபாத்தில் வாத்தி படப்பிடிப்பில் இருக்கிறார். அவரை தொடர்பு கொண்டு உறவினர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் தனுஷ் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் அவரிடம் தொடர்ந்து பேசி அவரது முடிவை மாற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.

ஐஸ்வர்யாவை பொறுத்தவரை தனது பாதையில் தொடர்ந்து பயணிக்க தீர்மானமாக மன உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீண்டும் தனுசுடன் சேர்வது சந்தேகம்தான் என்று அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் கருதுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாகவே தனுஷ்- ஐஸ்வர்யா இடையே அதிருப்தி நிலவியதை அவரது நண்பர்கள் நன்கு அறிவார்கள். தனுஷ் பல்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் அவரை நெருங்க முடியாத நிலையில் அவரது தோழர்களும் உள்ளனர்.

ஐஸ்வர்யா தினமும் யோகா, உடற்பயிற்சிகள் செய்யும் வழக்கம் கொண்டவர். தனது தந்தையை போன்றே ஆன்மிகத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. எனவே தொடர்ந்து ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்ட அவர் தீர்மானித்து இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ள போதிலும் சட்ட ரீதியாக பிரிவார்களா என்பதில் எந்த உறுதியான தகவலும் இல்லை. அந்தளவுக்கு போக மாட்டார்கள் என்று இரு குடும்பத்து உறவினர்களும், நண்பர்களும் கருதுகிறார்கள்.

யாத்ரா, லிங்கா இருவரும் தற்போது ஐஸ்வர்யாவின் பராமரிப்பில் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் ஐஸ்வர்யாவே வளர்ப்பார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

அடுத்தடுத்து நடத்தப்படும் சமரச முயற்சிகளில் தனுஷ்- ஐஸ்வர்யா மனதில் மாற்றம் ஏற்பட்டால் இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரம் நேற்றும், இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தனுஷ் ரசிகர்கள் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.

அதே போன்று ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் இடப்படுகின்றன.

இதற்கிடையே ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடுகிறார்கள். அவர்கள் ரஜினி தைரியமாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநரும், நடிகர் விஜய்யும் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இந்த செய்தி கனவாகவோ, பொய்யாகவோ இருக்கக்கூடாதா என்ற ஆசை இருக்கிறது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் நமக்கும் கீழே இருப்பவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு என கண்ணதாசன் எழுதியிருப்பார்.

தி.நகரில் பர்ஸை தொலைத்துவிட்டு திருவல்லிக்கேணியில் தேடக்கூடாது. வாழ்க்கையை தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டும். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது ஒரு நலம்விரும்பியின் குரல், இன்னும் சொல்லப்போனால் ஒரு ரசிகனுடைய குரல்” என கூறியுள்ளார்.