தனுஷின் வாத்தி படப்பிடிப்பு துவங்கியது : படக்குழு வெளியிட்ட அப்டேட்
நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பு துவங்கியதாக படக்குழு, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால், அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது தனுஷை வைத்து ‘மாறன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார். இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் தே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ‘வாத்தி’ படத்தின் பூஜை கடந்த 3-ம் தேதி நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், படத்தின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் கல்லூரி மாணவர் போன்ற கெட்டப்பில் தோன்றியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கல்லூரி மாணவர் கெட்டப்பில் தோன்றியுள்ள இந்தப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், தனுஷின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்தநிலையில், அடுத்ததாக ‘வாத்தி’ படப்பிடிப்பும் துவங்கியுள்ளதால், அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.