தனுஷின் கர்ணன் திட்டமிட்டபடி வெளியாகும்! தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவிப்பு!!

0
64

தனுஷின் கர்ணன் திட்டமிட்டபடி வெளியாகும்! தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 3,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1459 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்கள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவிகித இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ளலாம் என தமிழக அரசு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 100% இருக்கைகளுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. நாளை தனுஷின் கர்ணன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நாளை மறுநாளிலிருந்து 50% இருக்கைகள் உடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நம்மிடம் பேசிய கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “கர்ணன் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியிடப்படும்.50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசு உத்தரவால் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை” என்றார்.