‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு..! ‘ஒரு நடிகராக எனக்கு சில அற்புதமான அனுபவங்கள் இருந்தன’ – ‘சியான்’ விக்ரம்

0
146

‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு..! ‘ஒரு நடிகராக எனக்கு சில அற்புதமான அனுபவங்கள் இருந்தன’ – ‘சியான்’ விக்ரம்

‘சியான்’ விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வந்த தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு செய்யப்பட்டது. படப்பிடிப்பின் நிறைவு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து படக்குழுவினர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வெகு விரைவில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட இயக்குநர்களுள் ஒருவர் பா.ரஞ்சித். அறிமுக நாயகர்களை வைத்து படங்களை இயக்க ஆரம்பித்த இவர், தற்போது உச்ச நடிகர்களுடன் கைக்கோர்த்து திரையுலகில் முன்னேறி வருகிறார். மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை கொடுத்ததற்கு பிறகு இவர் இயக்கி வந்த படம், தங்கலான். ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்க முக்கிய வேடங்களில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டிகரோன், ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் உள்ளனர்.

தங்கலனுக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு கிஷோர் குமார், எடிட்டிங் செல்வா ஆர்.கே, சண்டைக்காட்சிகளுடன் ஸ்டன்னர் சாம். 2024 ஆம் ஆண்டு திருவிழா தேதியில் பிரமாண்டமான திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன், உலகம் முழுவதும் உள்ள மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்படும்.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு, நேற்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படப்பிடிப்பு 118 நாட்களாக நடைப்பெற்று வந்துள்ளது. கடந்த மே மாதம் எதிர்பாராத வகையில் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதால் அவர் சில நாட்கள் ஓய்வில் இருந்தார். இதனால், தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. படப்பிடிப்பின் நிறைவு நாளில் படக்குழுவினர் தாங்க எடுத்த செல்ஃபிக்களையும் படத்தில் நடித்த அனுபவங்களையும் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

தங்கலான் படத்திற்காக படக்குழுவினர் உடல் எடையை குறைப்பது, உடல் தோற்றத்தை மாற்றிக்காெள்வது என பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். கதை, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய காலக்கட்டத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோலார் தங்க சுரங்கத்தை சுற்று இந்த கதை சுழல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித்தின் பிற படங்களில் இடம் பெற்ற சாதிய அடக்குமுறைகள் குறித்த காட்சிகளும் வசனங்களும் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் படத்தின் ஹீரோ விக்ரம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதனுடம் இரண்டு புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

படப்பிடிப்பின் முதல் நாளில் எடுத்த போட்டோவையும் கடைசி நாளின் போது எடுத்த போட்டோவையும் பகிர்ந்துள்ள அவர், ‘‘ஒரு நடிகராக எனக்கு சில அற்புதமான அனுபவங்கள் இருந்தன. இது ஒரு அற்புதமான பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பதிவின் மூலம் பா.ரஞ்சித்திற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். மிகவும் அற்புதமாக மனிதர்களுடன் இப்படத்தில் பணிபுரிந்ததாகவும் இந்த படத்தின் மூலம் தனக்கு உற்சாகமான அனுபவங்கள் கிடைத்ததாகவும் விக்ரம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

தங்கலான் படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் இனி நடைபெற உள்ளது. இதையடுத்து, டப்பிங் உள்பட பிற போஸ்ட் ப்ரெடக்ஷன் பணிகளும் நடைபெறும். இப்படம், விக்ரமின் சினிமா வாழ்கையிலேயே மிகவும் பெரிய படமாக இருக்கும் என ரசிகர்களால் பேசப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல விருது விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டுள்ளது. படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என பேசப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. பெரிதாக ஃபேன்டசி பட பாணியில் உள்ள கதைகளில் நடித்திராக சூர்யா, இந்த படம் மூலம் அப்பேற்பட்ட கதையில் நடித்து புதுமை காட்ட இருக்கிறார். இந்த படத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். தங்கலான் படமும் கங்குவா படமும் ஒரே நாளில் (2024 பொங்கல்) ரிலீஸாகலாம் என பேசப்படுகிறது.