‘சூர்யா 41’ படத்தில் இணைந்த இரண்டாவது கதாநாயகியாக
நடிகர் சூர்யாவின் 41-வது படத்தில், மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளார்.
நந்தா, பிதாமகன் படங்களுக்குப்பிறகு 18 வருடங்கள் ஆனநிலையில், 3-வது முறையாக நடிகர் சூர்யா – இயக்குநர் பாலா கூட்டணி இணைந்துள்ளனர். ‘சூர்யா 41’ என்று தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது.
நடிகர் சூர்யா, ஜோதிகாவின் ‘2டி’ எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டி, தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மலையாள நடிகையான மமிதா பைஜூ என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். கடந்த 2017-ல் ‘ஹனி பீ 2’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், ‘ஆப்ரேஷன் ஜாவா’, ‘கோ கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் சோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘சூப்பர் சரண்யா’ படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து சூர்யாவின் 41-வது படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இணைந்துள்ளார்.