சிக்கலில் ஐஸ்வர்யா ராய்: – பனாமா பேப்பர்ஸ் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்

0
145

சிக்கலில் ஐஸ்வர்யா ராய்: – பனாமா பேப்பர்ஸ் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்

பனாமா பேப்பர்ஸ் வழக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று அவர் நேரில் ஆஜராகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இன்றைக்கு அவர் விசாரணைக்கு ஆஜராகுவார் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை ஜெர்மனி ஊடகம் ஒன்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு செய்வதற்கும் பொருளாதாரத் தடைகளை மறைத்து சொத்துகளை வாங்குவதற்கும் வசதி செய்து கொடுப்பதுதான் இந்த பென்செக்கா நிறுவனத்தின் பணி என்ற விவரம் வெளிவந்தது.

இதுதொடர்பாக ஒரு கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தின. இவற்றை, 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 107 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் இவற்றை ஆய்வு செய்தனர்.

இதில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்துகளைக் குவித்திருப்பது தெரிய வந்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தம்பி ஷாபாஸ் ஷெரீப், மகள் மரியம் ரஷ்ய அதிபர் புடின், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரன், கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி, உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், அரசியல்வாதிகள், பல நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும் இந்த பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் சிக்கின.

இந்நிலையில், இந்த ஆவணங்கள் அடிப்படையில் அந்தந்த நாடுகளில் இருக்கும் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் அமலாக்கத்துறை, பனாமா பேப்பர்ஸ் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரணை நடத்துகிறது.