சபாபதி விமர்சனம் :
சபாபதி அனைவரையும் தியேட்டருக்கு திரளாக வரவழைத்து சபாஷ் போட வைத்து அசத்தும்
ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்து ஆர்.ஸ்ரீனிவாசராவ் இயக்கியிருக்கும் படம் சபாபாதி.
இதில் சந்தானம்,எம்.எஸ்.பாஸ்கர், பிரீத்தி வர்மா, புகழ், சாயாஜி ஷிண்டே, லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன்,வம்சி, உமா பத்மநாபன், ரமா, முத்து ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை-சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு-பாஸ்கர் ஆறுமுகம், எடிட்டிங்-லியோ ஜான் பால், பி.ஆர்.ஒ-நிகில்.
திக்குவாய் குறைபாடு கொண்ட அப்பாவியான சந்தானம் ரிடையரான தன் தந்தை எம்.எஸ்.பாஸ்கரின் வற்புறுத்தலின் பேரில் வேலை தேட ஆரம்பிக்கிறார்.தன் எதிர் வீட்டில் வசிக்கும் பள்ளி தோழியான பிரீத்தி வர்மாவை காதலிக்கும் சந்தானம் வேலை கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நம்பிக்கையில் வேலை தேட ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு இன்டர்வியூவிலும் தான் படும் அவமானங்களால் மனம் வெறுத்து போகிறார். இதனிடையே தேர்தலில் களம் இறங்கும் அரசியல்வாதி சாயாஜி ஷிண்டே தான் வெற்றி பெற பண பட்டுவாடா கொடுக்க ஆறு பெட்டிகளில் பணத்தை வண்டியில் எடுத்து வர சொல்கிறார். எதிர்பாராத விதமாக வண்டி விபத்து ஏற்பட 20 கோடி கொண்ட ஒரு பெட்டி மட்டும் சந்தானத்தின் மேல் வந்து விழ மற்ற அனைத்து பெட்டிகளும் வண்டியோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகிறது. குடி போதையில் இருக்கும் சந்தானம் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார். இந்த விபத்தை கேள்விப்படும் சாயாஜி ஷிண்டே டென்ஷனாகி பணப்பெட்டியை தேடுகிறார். இந்து தேடுதல் வேட்டையில் சந்தானம் மாட்டினாரா? விதியால் சந்தானம் எப்படி தப்பித்தார்? இறுதியில் வேலை கிடைத்ததா? காதலியை கைப்பிடித்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
சந்தானம் உறக்கப் பேசக்கூடியவராகவும், துடிக்குத்தனமாகவும், கவுண்டர் அடிப்பதில் வல்லவராக இருப்பது தான் இதுவரை வந்த படங்களில் அவரது பலமாகக் கருதப்படுகிறது. ஆனால் சபாபதியில் அப்பாவி குணம் கொண்டு வெள்ளேந்தியாக சொல்வதை நம்பும் கேரக்டர் முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறது. பேசுவதற்கு ஏங்கி திக்கு திணறி தடுமாறும் இடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதோடு, நல்ல கதாபாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பு இவரது கேரியரில் வரவேற்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.முதல் பாதி நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டையும், இயலாமையையும் காட்டி, தந்தை எம்.எஸ்.பாஸ்கர் இவரிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது சிரிப்பு மழையில் நனைய வைக்கிறது. சந்தானத்துக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கும் இடையேயான நட்புறவு நேர்த்தியாகவும் சில இடங்களில் தடுமாறினாலும் அவர்களின் பாச நல்லுறவு கட்டமைக்கப்பட்ட விதம் சுவாரஸ்யமாக உள்ளது. இரண்டாம் பாதியில் முற்றிலும் மாறுபட்டு சந்தானம் பணப்பெட்டியை காப்பாற்றவும்,தொலைந்தவுடன் தேடுதல் வேட்டையில் அதகளம் பண்ணுகிறார். இந்த படத்தில் தான் சந்தானம் தன்னாலும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் கணபதியாக எம்.எஸ்.பாஸ்கர் வேலையில்லாமல் இருந்தால் வீட்டில் மனைவி மதிக்கமாட்டார் என்ற பயம், மகனை நல்ல வேலையில் சேர்த்து விட வேண்டும் என்ற ஆவல், மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கவலை இவையெல்லாம் சேர்ந்து அவரை கறாரான பிடிவாத குணம் கொண்ட நபராக மாற்றுவதும், மகனை கண்டிக்க நினைத்து தானே அவனிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது என்று ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைத்து வாழ்ந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் எப்படித்தான் நடித்தாரோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.
சாவித்தியாக பிரீத்தி வர்மாவிற்கு இந்த படத்தில் அவ்வளவாக வேலை இல்லை என்றாலும், முடிந்தவரை வந்து விட்டு போகிறார்.
குக் வித் கோமாளி புகழ் படத்தில் குவாட்டருக்கு ஏங்கும் நண்பராக சில காட்சிகள் என்றாலும் மனதில் பதிந்து விடுகிறார். அரசியல்வாதியாக சாயாஜி ஷிண்டே, வம்சி, மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன்,உமா பத்மநாபன், ரமா, முத்து என்று நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்கள் படத்திற்கு பலம்.
சாம் சிஎஸ்ஸின் பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன, அதே சமயம் பின்னணி ஸ்கோர் காட்சிகளுக்கு கூடுதல் மதிப்பை சேர்க்க உதவுகிறது.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும், இயக்குனரின் விருப்பத்திற்கு கேற்றவாறு நல்ல அளவில் உதவியிருக்கிறது.
சந்தானம் என்றால் நகைச்சுவை இருக்கும் என்று நம்பி வரும் ரசிகர்களுக்கு இந்தப்படம் இரண்டும் கலந்த கலவையாக காமெடி, காதல் ப்ளஸ் அரசியல் நெடி கலந்து கலகல என்று கொடுத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஐந்து நாட்களில் விதி நுழைந்து அவனது வாழ்க்கையை புரட்டி போடும் சுவாரஸ்யமான திரைக்கதையை கையில் எடுத்து பின்னர் அரசியல்வாதியிடம் மாட்டி கொள்வது, பணப்பெட்டியால் பிரச்னை, அதனை தேடி ஒடுவது என்று விறுவிறுக்க கொடுத்து இறுதியில் ஊனம் ஒரு குறையல்ல நல்ல எண்ணம், செய்கை உள்ளம் கொண்டவருக்கு என்றுமே தானாக நல்லது நடக்கும் என்பதை திறம்பட கூறியுள்ளார் இயக்குனர் ஸ்ரீனிவாசராவ். நன்றாக படபடவென்று பேசக்கூடிய சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் எப்படி பேசாமல் சாதிப்பாரோ அதே போல் தான் இந்தப் படத்தில் சந்தானமும் பேச முடியாமல் திணறும் கதாபாத்திரத்தில் சாதனை படைத்திருக்கிறார். முதல் காட்சியில் வரும் விதியின் விஎஃப்எக்ஸ் மற்றும் காந்த குரல் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
மொத்தத்தில் ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் சபாபதி அனைவரையும் தியேட்டருக்கு திரளாக வரவழைத்து சபாஷ் போட வைத்து அசத்தும்.