சக்ரா விமர்சனம்

0
310

சக்ரா விமர்சனம்

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து சக்ரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.எஸ். ஆனந்தன்.

இதில் விஷால், ஷ்ரத்தா கபூர், ரெஜினா காசென்ட்ரா, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா,மனோபாலா, ஷ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-பாலசுப்பிரமணியம், இசை-யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டிங்-தியாகு, சண்டை-அனல்அரசு, கலை-எஸ்.கண்ணன், இணை இயக்குனர்-விஜய்ஆனந்த், உடை-சத்யா, பல்லவி சிங், ஜெயலட்சுமி சுந்தரேசன், பாடல்கள்-மதன்கார்க்கி, கருணாகரன், தயாரிப்பு மேற்பார்வை-அண்டனி சேவியர், பிஆர்ஒ- ஜான்சன்.

சென்னையில் சுதந்திர தினத்தன்று ஐம்பது வீடுகளில் தனிமையில் வாழும் வசதியான முதியோர்களை குறிவைத்து இரண்டு நபர்கள் பைக்கில் வந்து ஏழு கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். இதில் ராணுவ அதிகாரியான விஷாலின் வீடும் ஒன்று. அவரின் பாட்டியான கே.ஆர்.விஜயாவை அடித்து விட்டு நகைகளோடு, மறைந்த விஷாலின் தந்தை வாங்கிய அசோக சக்ரா விருதையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் போய் விடுகின்றனர். இதனையறிந்து சென்னைக்கு வரும் விஷால் தன் காதலியும் போலீஸ்; உயர்அதிகாரியுமான ஷ்ரத்தா கபூருடன் சேர்ந்து கொள்ளையர்களை பிடிக்க வியூகம் அமைக்கிறார்.இவரால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடிந்ததா? அவர் யார்? எதற்காக இந்த கொள்ளைகளை நடத்தினார்? இறுதியில் விஷால் தந்தையின் சக்ரா விருதை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

விஷால் மிடுக்கான மிரட்டலான ராணுவ அதிகாரியாக அசத்தலான ஆக்ஷன் காட்சிகளிலும், சாமர்த்தியமான யூகங்களாலும் விசாரணையை நடத்தி ஆச்சர்யமான உண்மைகளை கண்டு பிடித்து சாதுர்யமாக நடித்திருக்கிறார்.
போலீஸ் உயர் அதிகாரியாக ஷ்ரத்தா கபூர் முதலில் அதிரடியாக வந்து இடையே காட்சிகளில் வேகம் குறைந்து இறுதியில் சண்டை காட்சியோடு தன் பங்களிப்பை முடித்துக்கொள்கிறார்.

வில்லியாக ரெஜினா காசென்ட்ரா தோல்வியே பிடிக்காத பிடிவாத குணம் கொண்ட அழுத்தமான கதாபாத்திரத்தில் புத்தியை மட்டுமே பயன்படுத்தி வெல்ல துடிக்கும் ஆக்ரோஷமான பெண்ணாக களமிறங்கி ஜெயித்திருக்கிறார்.

ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா,மனோபாலா மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஷ்ருஷ்டி டாங்கே என்று அத்தனை பேரும் சிறிய பங்களிப்போடு வந்து போகிறார்கள்.

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் வலு சேர்கிறது.

எழுத்து இயக்கம்:- எம்.எஸ்.ஆனந்தன். வீட்டில் அன்றாட வேலைகளுக்கும், பழுதான உபகரணங்களை சரி செய்வதற்கும் வேலையாட்களை அனுப்பி உதவி செய்யும் செயலியால் ஏற்படும் விபரீத விளைவுகள், கொள்ளையடித்தவைகளை மீட்க போலீஸ் நடத்தும் விசாரணைகள், மீண்டும் இது நடைபெறாமல் தடுக்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகள், கண்டுபிடிக்கும் திடுக்கிடும் தகவல்கள், அதற்கு காரணமானவர்களை சுற்றி வளைத்து பிடிக்கும் தந்திரம் என்று விறுவிறுப்பாக செல்கிறது கதைக்களம். முதலில் டிஜிட்டல் இந்தியாவின் செயல்பாடுகளை குறை சொல்லி பின்னர் திரைக்கதை வேறு பாதையில் பயணித்து குடும்ப தகராறில் கொலை வெறியோடு செயல்பட்டு அனாதையாகி வாழ்க்கையில் விரக்தியடையும் பெண் பணத்தை சம்பாதிக்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தன் தம்பிகளோடு சேர்ந்து கொள்ளையடிப்பதை சிறப்பான காட்சிகளோடு கையாண்டிருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன்.

மொத்தத்தில் சக்ரா ஒரு துப்பறிவாளன்.