சக்ரா ரிலீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் – உண்மை வெல்லும் என விஷால் கருத்து

0
288

சக்ரா ரிலீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் – உண்மை வெல்லும் என விஷால் கருத்து

நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகி நாளை வெளியாக உள்ள திரைப்படம் ‘சக்ரா’. இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ‘சக்ரா’ படத்தின் கதையை இயக்குநர் ஆனந்தன் ஏற்கனவே தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரிப்பில் படம் வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த முறை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ளதால் ‘சக்ரா’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என டிரைடண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, சக்ரா திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் ஆனந்தன் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என விஷால் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஆனந்தன் தெரிவித்த கதையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்காத நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டால் தங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் ஆனந்தன் போட்ட ஒப்பந்தத்தை அறிந்தே உள்நோக்கத்துடன் விஷால் படத்தை தயாரித்தாரா என்பது மேற்கொண்ட விசாரணையில் தான் உறுதி செய்ய முடியும் என தெரிவித்தார்.

மேலும், சக்ரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டால் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். படம் வெளியான நாள் முதல் மார்ச் 5-ம் தேதி வரையிலான வசூல் குறித்து மார்ச் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து குறித்த நாளில்‘சக்ரா’ திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் நடிகர் விஷால் உண்மை வெல்லும் என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆமாம், எப்போதும் போல தடைகளை எதிர்கொண்டேன். எப்போதும் எனக்கு உண்மையாக இருந்தேன். என்னுடைய தொழிலுக்கு உண்மையாக இருந்தேன்.. திரைத்துறை தொடர்பான எல்லாவற்றுக்கும் உண்மையாக இருந்தேன்..

தடை இப்போது நீக்கப்பட்டது.. நாளை சக்ரா படம் உலக அளவில் வெளியிடப்படுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் சக்ரா திரைப்படத்துக்கு சிறந்த நாளாக இருக்கும். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, திரைப்படத்தில் பங்கேற்ற அனைவரின் விருப்பத்துக்கு ஏற்றவகையில் சரியான நேரத்தில் தடையை நீக்கி உத்தரவிட்ட மதிப்பிறக்குரிய உயர் நீதிமன்றத்துக்கு நன்றி. உரிய கால அட்டவணையின்படி படத்தை வெளியிடுகிறோம். உண்மை வெல்லும்” இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.