கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் – தியேட்டர்கள் மூடல்? ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!
தற்போது நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை கோர தாண்டவம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால், தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது. ஏற்கனவே பல தியேட்டர்கள் வணிக வளாகங்களாகவும், குடோன்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாற்றப்பட்டு விட்டன.
மேலும், இனி சினிமாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியாமல், திரைத்துறை வல்லுநர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், பெருவாரியான ரசிகர்களும், பொதுமக்களும் தங்களது கவனத்தை சினிமா தியேட்டர்களின் பக்கம் இருந்து வெப்தொடர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பக்கம் எளிதில் திருப்பிவிட்டனர். காரணம், சினிமா தியேட்டர்களின் நிலை மற்றும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம். இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கின்றன.
விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய 5 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஓடிடியில் வெளியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் பீட்சா படத்தின் 3-ம் பாகத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மோகன் கோவிந்த் இயக்கி உள்ளார். அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்திலும், பவித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி ஆகிய படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இன்று யார் வேண்டுமானாலும், தங்கள் செல்போன் மூலம் கூட திரைப் படம் உருவாக்கி, அதை ஓடிடி தளத்திலோ அல்லது யூடியூப்பிலோ வெளியிட முடியும். சினிமா படத் தயாரிப்பு மாதிரி இல்லாமல், இதற்கான செலவினங்கள் மிகவும் குறைவு. அதனால்தான் முன்னணி நடிகர், நடிகைகள் ஓடிடி தளங்களுக்கான படங்களில் நடிக்கவும், தயாரிக்கவும் முன்வருகின்றனர். இனிவரும் காலங்களில் மக்கள் பொழுதுபோக்கும் இடம் சினிமா தியேட்டராக இருக்காது என்றும், பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த ஓடிடி தளத்துக்குத்தான் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். ஒவ்வொரு ரசிகரும் தங்களது ஹோம் தியேட்டரின் மூலம் புதிய சினிமாக்களை விரும்பி பார்த்து ரசிப்பார்கள். இது தான் யதார்த்தம், மறைக்கமுடியாத உண்மை கூட.