குரூப் விமர்சனம்
வபாரர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில்; வெளிவந்துள்ள படம் குரூப்.
இதில் துல்கர் சல்மான், இந்திரஜித் சுகுமாரன், ஷோபிதா துலிபாலா, சன்னி வைனே, சைன் டாம் சாக்கோ, பரத், சுரபி லட்சுமி ஆகியோர் நடிக்க படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- கதை-ஜிதின் கே.ஜோஸ், திரைக்கதை,வசனம்-கே.எஸ்.அரவிந்த் மற்றும் டேனியல் சயூஜ் நாயர், ஒளிப்பதிவு-நிமிஷ் ரவி, இசை-சுசின் ஷ்யாம், எடிட்டிங்-விவேக் ஹர்ஷன், இணை இயக்குனர்- வினி விஸ்வா லால், உடை-பிரவீன் வர்மா, ஒப்பனை-ரோனக்ஸ் சேவியர், தயாரிப்பு நிர்வாகி-தீபக் பரமேஸ்வரன், பிஆர்ஒ-ஜான்சன்.
1969ல் தன் தந்தையின் வற்புறுத்தலால் மெட்ராஸில் உள்ள இந்திய விமானப்படையில் பயிற்சிக்காக கோபிகிருஷ்ணா சேருகிறார். அங்கே கெடுபிடி, கண்டிப்பு பிடிக்கவில்லையென்றாலும், அங்கிருக்கும் பொருட்களை திருட்டுத்தனமாக விற்று ஜாலியாக ஊர் சுற்றி பயிற்சியை முடித்துக்கொண்டு 1970ல் பம்பாய் செல்கிறார். பம்பாயில் உயர் அதிகாரி அவருக்கு பொருட்களின் வரவு செலவு கணக்கை பார்த்து கொள்ளுமாறு பொறுப்பை தர, அதிலும் பல ஊழல்கள், ஏமாற்று வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கிறார். இறுதியில் உயர் அதிகாரி இதை கண்டுபிடித்து கணக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை போட, உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேருகிறார். உடல்நிலை காரணம் காட்டி விடுமுறை எடுத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு செல்கிறார் கோபிகிருஷ்ணா. அதன் பின்னர் கோபிகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் போலீஸ் மூலம் விமானப்படை அலுவலகத்தில் தெரிவிக்கப்படுகிறது.
1974ல் சுதாகர குரூப் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு கோபிகிருஷ்ணா தன் நர்ஸ்காதலியை மணந்து கொண்டு பெர்ஷியா செல்கிறார். அங்கே பத்து வருடங்கள் நன்றாக சம்பாதித்து சுகபோகமாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கிறார். பெர்ஷியாவில் தன் பெயரில் 8 லட்சத்திற்கு காப்பீடு செய்து கொண்டு மீண்டும் கேரளா வருகிறார். தன் நண்பர்கள் மூன்று பேருடன் கூட்டு சேர்ந்து காப்பீட்டு பணத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார். தன் உருவ சாயலில் இருக்கும் நபரை தேடி கண்டுபிடித்து இறந்ததாக கணக்கு காட்டி பணத்தை வாங்கி பங்கு போட்டு தருவதாக மூன்று நண்பர்களுக்கு ஆசை வார்த்தை கூறி சம்மதிக்க வைக்கிறார்.அதன்படியே லிப்ட் கேட்கும் சார்லி என்ற நபரை கடத்திச் சென்று கொலை செய்து காரில் வைத்து எரித்து விடுகின்றனர். போலீஸ் விசாரணையில் அது சுதாகர குரூப் என்று நண்பர்கள் சொல்ல, நம்ப மறுக்கும் போலீஸ் ஆதாரங்களை திரட்டி அவர்களை கைது செய்கிறது. ஆனால் சுதாகர குரூப் மட்டும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை? எங்கே சென்றார்? என்ன ஆனார்? தப்பித்து எங்கே போனார்? என்பதே புர்pயாத புதிராக மர்மம் நிறைந்த கதையின் முடிவு.
துல்கர் சல்மான் போலீசையும், ஊரையும் ஏமாற்ற கோபிகிருஷ்ணா, சுதாகர குரூப் என்ற பெயர்களிலும், பலவித தோற்றங்களில் போலீசிடம் மயிரழையில் தப்பித்து ஒடுவதுதாகட்டும், தன் உறவினர்களிடம் தஞ்சம் புகுந்து நயமாக பேசி காரியத்தை சாதிப்பதாகட்டும், தன் மனைவிக்கு மட்டும் உயிரோடு இருப்பதை மறைமுகமாக தெரிவித்துவிடுவதாகட்டும், எல்லோரையும் நோட்டம் பார்த்து தகுந்தாற் போல் பேசி தனக்கு சாதகமாக பயன்படுத்தி பணத்தை அபகரிப்பதாகட்டும்,வெளிநாடுகளிலும் பணக்கார செல்வந்தர்களை தன் வசப்படுத்துவதாகட்டும், கில்லாடியாக நயவஞ்சக வலையில் பணத்தாசை காட்டி மாட்டிவிட்டு தப்பித்து கொள்வதாகட்டும் உண்மையான குற்றவாளி குரூப்பின் கதையில் கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
படம் முழுவதும் முதன்மை கதாபாத்திரத்தில் வரும் போலீஸ் சூப்பிரண்டென்ட் கிருஷ்ணதாஸாக இந்திரஜித் சுகுமாரன் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கணக்கிட்டு செல்லும் போது குற்றவாளியை நெருங்கினாலும் பிடிக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு கச்சிதம்.
துல்கரின் காதல் மனைவியாக ஷோபிதா துலிபாலா கணவரின் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்தும் அமைதியாக வந்து போகிறார். நண்பராக சன்னி வயனே, பாஸ்கரன் பிள்ளையாக ஷைன் டாம் சாக்கோ யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் அசால்டாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் பிசினஸ் பார்ட்னர் இசாக்காக பரத், சுரபி லட்சுமி ஆகியோர் மாறுபட்ட பாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.
70களில் தொடங்கி 2005 வரை மெட்ராஸ், பம்பாய், போபால், பெர்ஷியா கால கட்டங்களையும், போலீஸ் விசாரணை, சாட்சியங்கள், சம்பவங்களை தன் நேர்த்தியான காட்சிக்கோணங்களால் நம் கண் முன்னே நிறுத்தி கை தட்டல் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி.
சுசின் ஷ்யாமின் அசத்தல் ரகம்.
ஜிதின் கே.ஜோஸ் கதையை கே.எஸ்.அரவிந்த் மற்றும் டேனியல் சயூஜ் நாயர் திரைக்கதையமைத்து துல்லியமாக கொடுத்து அசத்தியுள்ளனர்.
விவேக் ஹர்ஷன் எடிட்டிங் முதல் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்.
2005ல் போலீஸ் சூப்பிரண்டன்ட் கிருஷ்ணதாஸ் ஒய்வு பெறும் போது தான் இன்னும் பிடிக்க முடியாத குற்றவாளி குரூப்பின் விசாரணை டைரி குறிப்பின் பின்னணியில் கதை தொடங்குகிறது. 70களில் தொடங்கும் முதல் பாதி கோபிகிருஷ்ணாவின் பார்வையில் படம் நகர்கிறது. அவரின் செயல்பாடுகள், சந்திப்புகள், திடீர் மரண அறிவிப்பு, அதன் பின் காதல், திருமணம், பெர்ஷியா பயணம் என்று துண்டு துண்டாக சொல்லப்படும் கதை. இரண்டாம் பாதியில் போலீஸ் சூப்பிரண்டன்ட் கிருஷ்ணதாஸ் பார்வையில் குரூப் எப்படியெல்லாம் தன்னிடம் இருந்து தப்பித்து சென்றான் என்று யூகித்து கணித்து சொல்வதைப்போலும், முதல் பாதியில் சொல்லாமல் விட்ட மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக சொல்லி புரியும்படி கதையமைத்து அதன் பின் எந்த நாட்டிற்கு சென்றிருக்கலாம் என்ற தகவல்களோடும் கதையை முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். இந்தப் படம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட தேடப்படும் குற்றவாளி குரூப் பற்றிய கதையில் குற்ற பின்னணி விசாரணையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் எந்த இடத்திலும் தோய்வு ஏற்படாமல் கச்சிதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.
மொத்தத்தில் சர்ச்சைக்கு பேர் போன இன்றும் பிடிபடாத குற்றவாளி பணத்திற்காக மர்மமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதை சொல்லும் படம் குரூப் அனைவரையும் கவரும்.