காடன் விமர்சனம்
ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்கும் காடன் படத்தை ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன்.
ராணா டக்குபதி, விஷ்ணு விஷால்,ஜோயா ஹுசைன்,ஷிரியா பில்கவுன்கர்,அனந்த் மகாதேவன்,ரகு பாபு,ரவி காலே, ஸ்ரீநாத்,ஆகாஷ்,சம்பத் ராம்,போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு: அசோக் குமார் ராஜி, படத்தொகுப்பு: புவன், தயாரிப்பு வடிவமைப்பு-கலை: மயூர் ஷர்மா, இசை: சாந்தனு மோயித்ரா, ஒலி வடிவமைப்பு: ரசூல் பூக்குட்டி, சண்டைக் காட்சிகள்: ஸ்டன் சிவா, ஸ்டன்னர் சாம், காஸ்டிங்: முகேஷ் சப்ரா, நிர்வாக தயாரிப்பாளர்: சுஷில் திர்வாத்கர், இணை தயாரிப்பாளர்: பாவனா மவுனிகா, பாடல்கள்: வனமாலி, நடனம்: நோபிள் பால், உடைகள்: கீர்த்தி கோல்வான்கர்-மரியா தாரகன், ரீ-ரிக்கார்டிங் மிக்சிங்: ரசூல் பூக்குட்டி, பிபின் தேவ், மக்கள் தொடர்பு-நிகில்.
ராணாவின் மூதாதையர் தங்களுக்கு சொந்தமான காட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட அவர்களுக்கு பின் ராணா அந்த காட்டில் யானைகளுக்கும், மரங்களுக்கும் காவலனாக இருக்கிறார். ராணாவை அந்த காட்டில் வாழும் மலைவாழ் மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். இதனிடையே மத்திய மந்திரி தன் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த காட்டில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்கமாடி குடியிருப்பை கட்ட நினைத்து அதற்கான வேலைகளில் இறங்கி ஆட்களை அனுப்பி காட்டை அழிக்க ஏற்பாடு செய்கிறார். இதையறிந்த ராணா டெல்லிக்கு சென்று நீதிமன்றத்தில் குடியிருப்பு தொடங்காமல் இருக்க தடை உத்தரவை பெறுகிறார். இதனால் மத்திய மந்திரி அதிகாரிகளை வைத்து சூழ்ச்சி செய்து ராணாவை சிக்க வைத்து மனநல காப்பகத்தில் அடைத்து மூன்று மாதம் சித்ரவதை செய்ய ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையே அந்த காட்டில் குடியிருப்பு கட்டும் இடத்தைச் சுற்றி யானைகள் வராமல் இருக்க பாதுகாப்பு அரணாக உயரமான மதில் சுவரை எழுப்பிவிடுகின்றனர்.இதனால் யானைகள் வழிதடம் இல்லாமல் மலைக்கிராமத்திற்குள் சென்று அட்டகாசம் செய்கிறது. காப்பகத்திலிருந்து வெளியே வரும் ராணா அதன் பின் யானைகளுக்காக போராடி காட்டை மீட்டாரா? குடியிருப்பு கட்ட முடிந்ததா? அதன் பின் நடந்தது என்ன? என்பதே மீதிக்கதை.
ராணா படித்த மலைவாழ் காடனாக தன் நடை, உடை, பாவனையில் விரைப்பாக வித்தியாசத்தை காட்டி தன் உயரத்திகேற்ற நடிப்பை வெளிப்படுத்தி காடுகளுக்கு காவலனாக சிறப்பாக நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் கும்கி யானை பாகனாக முதல் பாதியில் கலகலப்பும், காதலுமாக சுற்றி திரியும் நாடோடி இளைஞராக ஜாலியாகவும், இறந்த யானையைப் பார்த்து கண் கலங்கி அழும் காட்சிகளில் சோகத்துடன் கச்சிதமாக நடித்துள்ளார். ஆனால் கும்கி யானை இறந்த பின் அவரின் பாகமும் அரைகுறையாக முடிந்த மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
தீவிரவாதியாக ஜோயா ஹுசைன்,நிருபராக ஷிரியா பில்கவுன்கர் ஆகிய இருவரின் பங்களிப்பு படத்தில் குறைவு.
மற்றும் அனந்த் மகாதேவன்,ரகு பாபு,ரவி காலே, ஸ்ரீநாத்,ஆகாஷ்,சம்பத் ராம்,போஸ் வெங்கட் ஆகியோர் கொடுத்து வேலையை சரியாக செய்துள்ளனர்.
அசோக் குமார் ராஜியின் காட்சிக் கோணங்கள் காட்டின் அழகை அள்ளித்தந்ததோடு, யானைகளின் ஒட்டு மொத்த கூட்டத்தின் ஆக்ரோஷத்தையும், மலைகிராமத்தின் எழிலையும், டெல்லி ரோட்டில் நடக்கும் துரத்தலும் சண்டைக்காட்சியையும், மதில் சுவரின் பிரம்மாண்டத்தையும் சிறப்பாக காட்சிப்படுத்தி கை தட்டல் பெறுகிறார்.
சாந்தனு மோயித்ராவின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை ரசிக்கும்படியும் உள்ளது.
ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு சிறப்பம்சமாக நிச்சயம் பேசப்படும்.
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு. இயக்கம்- பிரபு சாலமன். அசாம் மாநிலத்தில் பாரஸ்ட் மேன் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்பட்ட ஜாதவ் அவர்களின் வாழ்க்கைப்போராட்டத்தையும், யானைகளுக்கான வாழ்வுரிமையையும் மீட்ட உண்மை சம்பவத்தை அடித்தளமாக அமைத்து இந்த படத்தை கடும் சிரத்தையுடன் இயக்கியுள்ளார் பிரபு சாலமன். இதில் காட்டை அழிக்காதீர்கள், யானைகளின் வாழ்விடத்தை மறித்து மனிதர்கள் ஆக்ரமிப்பதால் தான் உணவும், தண்ணீரையும் தேடி யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய நேரிடுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களுக்கு இதுவே காரணமாக அமையும் என்பதை ஆணித்தரமாக சொல்லி பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார் பிரபுசாலமன். வெல்டன்.
மொத்தத்தில் காடன் காட்டின் பாதுகாப்பிற்காக போராடும் முரட்டு வீரன்.