கர்ணன் விமர்சனம்

0
608

கர்ணன் விமர்சனம்

வி கிரேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கர்ணன் படத்தை எழுதி இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
இதில் தனுஷ், லால், நட்டி, ரஜிஷா விஜயன், கௌரி, லட்சுமி ப்ரியா, சுபத்ரா, யோகிபாபு, அழகம்பெருமாள், மதன், சண்முகராஜா, ஜி.எம்.குமார்,பூராம், ஜானகி இவர்களுடன் மண் சார்ந்த கலைஞர்கள் நடித்துள்ளனர்.
தொழில்நுட்;ப கலைஞர்கள்:-இசை- சந்தோஷ் நாராயணன்,ஒளிப்பதிவாளர்-தேனி ஈஸ்வர், ஆர்ட் டைரக்டர்-ராமலிங்கம், எடிட்டர்-செல்வா, சண்டை-திலீப் சுப்பராயன், பாடல்கள்-மாரி செல்வராஜ், யுகபாரதி, நடனம்-சாண்டி, தயாரிப்பு நிர்வாகி- வெங்கட் ஆறுமுகம்,  பிஆர்ஒ-ரியாஸ், டைமண்ட் பாபு.

பொடியன்குளம் கிராமத்தில் ராணுவத்தில் சேர மும்முரமாக முயன்று கொண்டிருக்கும் இளைஞன் கர்ணன்(தனுஷ்). இவருக்கு உறுதுணையாகயும், சமயத்தில் தோழனாகவும் இருப்பது தாத்தா எமராஜா(லால்).பக்கத்து கிராமமான மேலூரின் ஆதிக்கத்தால் பொடியன்குளத்திற்கு எந்தவொரு வசதியும் கிடைக்காமலும், பேருந்து இல்லாமல் வழியில் வரும் லாரி, மற்ற வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலையால் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலை இருப்பதால் பொடியன்குள கிராமத்திலிருக்கும் படித்த பெண்ணான கௌரிக்கு முதன் முதலாக கல்லூரிக்கு செல்ல மேலூர் பேருந்து நிறுத்துமிடத்திற்கு தன் தந்தையுடன் செல்ல மேலூர் இளைஞர்;களால் அவமானப்படுத்தப்படுகிறார். இதனை கேள்விப்படும் தனுஷ் மேலூர் இளைஞர்களை அடித்து விட, மேலூர் ஊர் தலைவர் அழகம்பெருமாள் பழி வாங்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனை அடுத்து அதே கிராமத்திலிருந்து பேருந்திற்காக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்ணிற்கு பேருந்தை நிறுத்தாமல் செல்ல கோபமடையும் தனுஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து பஸ்ஸை அடித்து நொறுக்கிறார். இதனால் ஈகோ மனப்பான்மை கொண்ட நட்டி தலைமையிலான போலீஸ் கிராமத்திற்குள் வந்து தனுஷை தேட பஸ்ஸின் உரிமையாளரின் சமாதானப் பேச்சால் ஒன்றும் செய்யாமல் போலீஸ் சென்று விடுகிறது. ஆனாலும் போலீஸ் நிலையத்திற்கு ஊர் பெரியவர்கள் வந்து கையெழுத்திடவேண்டும் என்று போலீஸ் சொல்ல அங்கே சென்ற ஊர் பெரியவர்களை அவமானப்படுத்தி அடித்து உதைக்கின்றனர். இதனை கேள்விப்படும் தனுஷ் போலீஸ்; நிலையத்தை துவம்சம் செய்து ஊர் பெரியவர்களை மீட்டு வருகிறார். இதனால் கொதிப்படையும் போலீஸ் ஆட்சி பின்பலத்துடன் ஊருக்குள் சென்று செய்த துஷ்பிரயோகம் என்ன? அதை தனுஷ் எவ்வாறு எதிர்கொண்டார்? அதன் பின் ஊர் மக்கள் தனுஷை எவ்வாறு கொண்டாடினார்கள்? என்பதைச்சொல்லும் நெத்தியடி க்ளைமேக்ஸ்.

அடுக்குமுறை, அதிகாரத்துவத்துவத்தை ஒடுக்கும் வீரம் கொண்ட கோபக்கார இளைஞர் கர்ணனாக தனுஷ் மெய்சிலிர்க்கும் இயல்பான நடிப்பாற்றலால் தனித்தன்மையோடு படத்தில் ஜொலிக்கிறார். இப்படத்திற்கு நிச்சயம் விருதுகளை அள்ளுவார்.

தாத்தா எமராஜாவாக லால் இவரின் வழிகாட்டுதலுடன் கர்ணன் எடுக்கும் முடிவுகள், அளப்பறைகள் என்று உற்ற தோழராக படம் முழுவதும் வந்து இறுதிக்; காட்சியில் மனதை பதற செய்யும் செயல் என்று யதார்த்தமான நடிப்பை கொடுத்து மனதில் நிற்கிறார்.

நடராஜன் என்கிற நட்டி போலீஸ் உயர் அதிகாரியாகவும், வில்லனாகவும் முக்கியமான கதாபாத்திரம் திறம்பட செய்திருக்கிறார்.

காதலியாக ரஜிஷா விஜயன் இவரை விட அக்காவாக வரும் லட்சுமி ப்ரியா, அம்மாவாக வரும் ஜானகி ஆகியோர் படத்தில் ஸ்கோர் செய்கின்றனர்.
மற்றும் ரஜிஷாவின் தோழி கௌரி, சுபத்ரா, கேரக்டர் ரோலில் யோகிபாபு, அழகம்பெருமாள், மதன், சண்முகராஜா, ஜி.எம்.குமார்,பூராம் ஆகியோருடன் கிராமத்து மக்கள் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கை தட்டல் பெறும் அளவிற்கு பங்களிப்பை தந்துள்ளனர்.

கண்டா வரச்சொல்லுங்க, தட்டான் தட்டான், மஞ்சனத்தி, உட்ராதீங்க ஆகிய பாடல்களால் அனைவரின் ரிங்டோனாக மாற்றிய சந்தோஷ் நாராயணனின் ஆக்ரோஷமான இசை படத்திற்கு பலம்.

ஒவ்வொரு ப்ரேமும் அருமையாக காட்சிப்படுத்தி கிராமத்து அழகை மாறாமல் ரொம்ப அழகாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

எடிட்டர் செல்வா படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். கிராமத்தையே செதுக்கி செட் என்று தெரியாக வண்ணம்  கொடுத்திருக்கும் கலை இயக்குனர் ராமலிங்கத்திற்கு பாராட்டுக்கள் நிச்சயம் கிடைக்கும்.

ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவில்லாத படம் என்பதால் சண்டையில் திலீப் சுப்ராயனின் திறமையை இதில் காட்சியிருக்கிறார். சாண்டியின் நடன அமைப்பு வித்தியாசமாக உள்ளது.

எழுத்து, இயக்கம்- மாரி செல்வராஜ். முதல் காட்சியில் தொடங்கும் சின்ன பெண்ணின் சாவு, போலீஸ் பிடித்து செல்லும் இளைஞரின் கை,கால்கள், கருப்பு துணியால் மூடிய தலை, அவரின் உருவத்தை சுவரில் வரைந்து காட்டும் மக்களின் எழுச்சி, ஏன் இந்த நிலை என்பதை விவரிக்கும் கதைக்களம். தொடரும் வாள் வீச்சில் வெற்றி, விளையாட்டில் சச்சரவு, பேருந்து நிறுத்தத்திற்காக எடுக்கும் முயற்சிகள், அடித்து நொறுக்கும் காட்சிகள் என்று படம் மெதுவாக நகர்வதை கழுதையின் கால் கட்டுண்டு மெதுமாக குதித்து குதித்து செல்வது போல் முதல் பாதியில் காட்டி, அதன் பின் கழுதையின் கால்கள் விடுவிக்க பட்ட பிறகு வேகமெடுத்து ஒடி மலை உச்சியில் நிற்கும் காட்சியைச் சொல்லிய விதமே இரண்டாம் பாதியின் கதையை சொல்லி விடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.அதன் பின் கிராமமே திரண்டு போலீசாருக்கு எதிராக களமிறங்க அவர்களுக்கு முன்னால் ஒரு சூப்பர் ஹீரோவாக நின்று போராட்டங்களை நடத்தும் இளைஞரை எவ்வாறு கிராம மக்கள் கொண்டாடுகின்றனர்? ஜெயிலுக்கு சென்ற பிறகும் பத்து வருடங்களாக அவரின் வருகைக்காக காத்திருக்கும் மக்களின் மனநிலை என்று ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க செய்த இயக்குனர் மாரி செல்வராஜின் பங்களிப்பு படத்திற்கு பெரிய பலம். இதனை ஒவ்வொரு காட்சியையும் கண்ணுக்குள் நிற்கும் அளவிற்கு கதைக்கேற்ப விலங்குகளையும், நாயகன் கர்ணன், அவனது காதலி திரவுபதி, ஊர் பெரியவர் துரியோதன், வில்லன் கண்ணபிரான் என்ற பெயரின் வலிமையான பாத்திரப்படைப்பை தந்ததோடு நேர்த்தியாக திறம்பட கையாண்டிருக்கும் விதம் அற்புதம். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக கர்ணன் திகழும் பல விருதுகள் கிடைக்கும் என்பது திண்ணம்.

மொத்தத்தில் வி கிரேஷன்ஸ் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரித்துள்ள கர்ணன், அசுர பலம் கொண்ட கர்ணன் மக்களால் கொண்டாடப்பட்டு அட்டகாசமான ஆக்ரோஷமான வெற்றியை அடைவான்.