கடைசி விவசாயி விமர்சனம்: சொகுசு வாழ்க்கையைத் தேடிச் செல்லும் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டி புத்துணர்ச்சியும், உத்வேகமும் கொடுக்கும் கிராமத்து அருசுவை அறுவடை படையல்

0
177

கடைசி விவசாயி விமர்சனம்: சொகுசு வாழ்க்கையைத் தேடிச் செல்லும் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டி புத்துணர்ச்சியும், உத்வேகமும் கொடுக்கும் கிராமத்து அருசுவை அறுவடை படையல்

ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன் சார்பில் ம.மணிகண்டன் தயாரிப்பில் விஜய்சேதுபதி வழங்கும் கடைசி விவசாயி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ம.மணிகண்டன்.
இதில் தெய்வத்திரு.நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்சல் ரெபேக்கா, டி.முனீஸ்வரன், ஜி.காளிமுத்து, சாப்ளின் சுந்தர், காளைப்பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்லி, ஒளிப்பதிவு-ம.மணிகண்டன், படத்தொகுப்பு-பி.அஜித்குமார், கலை இயக்குநர்-தோட்டாதரணி, பாடல்கள்-அறிவு, உடை-ம.மணிகண்டன், ஒலி-எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், சிகை-சரவணன், கலரிஸ்ட்-பாலாஜி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்-சிவா, விளம்பர வடிவமைப்பு-ஜெகன் மற்றும் சபா டிசைன்ஸ், முதன்மை நிர்வாகத்தயாரிப்பு-எம்.சிவகுமார், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

உசிலம்பட்டியில் உள்ள அய்யனார்பட்டி கிராமத்தில் வாழும் விவசாயி நல்லாண்டி, அவரின் மகன் விஜய்சேதுபதி.  முறைப்பெண் இறந்த துக்கத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு முருக பக்தனாக நாடோடியாக ஊர் சுற்றும் விஜய் சேதுபதி எப்பொழுதுதாவது தான் தந்தையை பார்க்க வந்து சென்று விடுவார். நல்லாண்டி எண்பது வயதை கடந்தாலும் விவசாயம் செய்துகொண்டு, மாடு மெய்த்து, கோழிகளை வளர்த்து தனி ஆளாக அனைத்து வேலைகளையும் சலைக்காமல் செய்து ஊரில் நல்ல பெரிய மனிதராக வலம் வருகிறார். கிராமத்தில் பல வருடங்களாக இருக்கும் ஆலமரம் மின்னல் தாக்கி கருகி போக, அனைத்து சுற்றுப்புறகிராம மக்களும் சேர்ந்து பதினைத்து வருடங்களாக குலசாமி கோயில் திருவிழா நடத்தாதது தான் இதற்கு காரணம் என்று முடிவெடுத்து ஊர் பெரியவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இதற்காக சுற்று வட்டார கிராம பெரியவர்களை அணுகி திருவிழாவிற்;கு தேவையான விவசாயத்தால் விளைந்த பொருட்களை சாமிக்கு படையலுக்கு தர அணுகுகின்றனர். பெரும்பாலோர் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு விற்று விட்டு விவசாயத்தை கைவிட்டு வாழ்வதை அறிகின்றனர். அதனால் விவசாயி நல்லாண்டியை அணுகி நெற்மணிகளை விளைவித்து கோயிலுக்கு படையல் கொடுக்குமாறு ஊர் பெரியவர்கள் சொல்ல அதற்காக தன் நிலத்தில் பயிரிட முற்படுகிறார் நல்லாண்டி. நிலத்தில் உழுது நாற்றை நட்டு காத்திருக்கும் போது, நிலத்தின் அருகில் மயில்கள் மூன்று இறந்து கிடப்பதை பார்த்து, அந்த மயில்களை தன் நிலத்தின் அருகே புதைத்து விடுகிறார். இந்த தகவல் போலீசிற்கு போக, விசாரணைக்காக நல்லாண்டியை அழைத்து வந்து மயில்களை நல்லாண்டி தான் கொன்றார் என்று காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் போட்டு விடுகின்றனர். இந்த வழக்கு நீதிபதி ரேய்சலிடம் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிக்கு நல்லாண்டி நல்லவர் தப்பு செய்யவில்லை என்பதை அறிந்தாலும் எஃப்ஐஆர் போட்டதினால் பதினைந்து நாள் காவலில் வைக்க உத்திரவிடுகிறார். அதற்குள் ஆவணங்களை சமர்பித்து நல்லாண்டியை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்த இடைப்பட்ட நேரத்தில் நிலத்தில் விளையும் பயிரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார்.சிறையில் இருக்கும் நல்லாண்டி தன் உறவினர்களிடம் நெற்பயிர்கள் வளர இயற்கை முறையில் உரம் தயாரித்து தெளிக்க சொல்கிறார். ஆனால் அவர்கள் கடையில் செயற்கை உர மருந்தை கலந்து அடிக்க, பயிர்கள் நாசமாகிவிடுகிறது. சிறையிலிருந்து விடுதலை பெறும் நாளில் பயிர்களை பார்க்க வரும் நல்லாண்டி பயிர்கள் வாடி நாசமாகிவிட்டதை அறிந்து அதிர்ச்சியாகிறார். அதன் பின் நல்லாண்டி எடுக்கும் முடிவு என்ன? கோயில் திருவிழாவிற்கு நெற்மணிகளை அறுவடை செய்ய முடிந்ததா? குலதெய்வ திருவிழா விமர்சையாக நடந்ததா? என்பதே மீதிக்கதை.

மாயாண்டியாக நல்லாண்டி முதியவர் கதாபாத்திரத்தில் விவசாயியாக செய்யும் வேலைகள் நிஜத்தில் நிகழ்வது போல் உள்ளது. தத்ரூபமாக இயல்பான சிந்தனை கலந்த முகம், கபடமில்லாத வெள்ளை மனது, தீர்க்கமான வெரித்த பார்வை, சட்டென்று எடுக்கும் முடிவு, ஒரு வரியில் பதிலடி கொடுத்து விட்டு நகர நம்மை சிந்திக்க வைத்து விடுவது,  வழக்கு மொழியில் பேசும் வசனம், மகனிடம் மனம் விட்டு பேசுவது, ஜட்ஜிடம் எப்பொழுதும் வீட்டுக்கு போகலாமா என்று கேட்பது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறந்து பயிர் வாடி விட போகிறது என்ற கவலை என செய்யும் ஒவ்வொரு சொல்லும் செயலும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். எந்த ஒரு அரசு அங்கீகார அட்டைகள், மின்சாரம், தொலைபேசி வசதிகள் இல்லாத யாரையும் எதிர்பார்த்து வாழாத வாழ்க்கை சொந்த உழைப்பால் வாழும் முதியவர் நல்லாண்டி.இத்தகைய காட்சிகள் எடுப்பதற்கு இயக்குனர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படம் வெளிவருவதற்கு முன் மறைந்த நல்லாண்டி அனைவரின் மனதை விட்டு அகலாத எப்பொழுதும் விவசாயி மாயாண்டியாக தடம் பதித்து வாழ்ந்துக் கொண்டிருப்பார்.

ராமையாவாக விஜய்சேதுபதி படத்தை பாதிக்காத கதாபாத்திரம், இவரின் பங்களிப்பு படத்திற்கு உதவவில்லை அதே போல் தடிகுழந்தையாக யோகிபாபு யானை உரிமையாளராக வருவதும் தேவையில்லாத ஒன்று. வியாபாரத்திற்கும், விளம்பரத்திற்கும் திணிக்கப்பட்டிருப்பதால் இவர்களின் கதாபாத்திரத்தை எடிட் செய்திருந்தால் இன்னும் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.

நீதிபதி மங்கையர்கரசியாக ரேய்ச்சல் ரெபேக்கா கிராமத்து வசீகர முகத்துடன் விசாரிப்பு, வசன உச்சரிப்பு, கண்டிப்புடன் கட்டளையிடுவது, அக்கறையாக நல்லாண்டியிடம் நடந்து கொண்டு இறுதிக்காட்சியில் உதவி செய்வது என்று நச்சென்று மனதில் பதிந்து சிறப்பாக நடித்துள்ளார். நிச்சயமாக நல்ல கதாபாத்திரங்கள் இவருக்காக காத்திருக்கின்றன. வெல்டன்.

உப்பு தோசையாக டி.முனீஸ்வரன், சொட்டையனாக ஜி.காளிமுத்து, மூக்கனாக சாப்ளின் சுந்தர், ஏட்டாக காளைப்பாண்டியன் என்ற ஒவ்வொருவரும் அவரவர் கிராமத்து கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்துள்ளனர்.

அறிவின் பாடல் வரிகளில் சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்லி இசை மனதை வருடிச் செல்கிறது. அதைவிட ஆரம்பத்தில் வரும் இரண்டு முருகன் பாட்டுக்கள் தேர்ந்தெடுத்து போட்டிருப்பது கதைக்கேற்ற ரம்மியத்தை கூட்டியுள்ளது.

கலை இயக்குநர்-தோட்டாதரணி கிராம சூழ்நிலையை அச்சுஅசலாக கண் முன் நிறுத்தியுள்ளார்.

பி.அஜித்குமார் மெதுவாக செல்லும் கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார்.

தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், உடை, ஒளிப்பதிவு, இயக்கம்-ம.மணிகண்டன். அத்துனை துறைகளையும் தானே செவ்வென கையிலெடுத்து கடைசி விவசாயி படத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ம.மணிகண்டன். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை இயற்கை எழிலை காடு, மேடு, மலை, நிலம், கிராமத்து வீடு, ஆடு, மாடு, மயில், யானை என்று அச்சு அசலாக காமிரா கோணங்களில் ரசிக்க ரசிக்க படம் பிடித்து சமபந்தி கிராமத்து விருந்து படைத்திருக்;கிறார். அத்தனையும் மனதையும், கண்களையும் விட்டு அகலாத காட்சிகள். கிராமத்து கிழவிகள், குள்ளமான பருவப்பெண், கிராமத்து பெரியவர்கள், கோயில் சிலைகள், பூஜைகள், வழுக்கைக்கு வைத்தியம் செய்து கொண்டிருக்கும் கிராமத்து இளைஞர், செயற்கை உரம் விற்கும் வியாபாரி, ரியர் எஸ்டேட் புரொக்கர்கள், கிராமத்து நீதிமன்றம்,அசத்தும் நீதிபதி, போலீஸ் ஏட்டு, விவசாயம் கற்று கொள்ளும் கைதி அத்துடன் கிராமத்து நக்கல் நய்யாண்டியுடன் சில காட்சிகள் என்று படம் முழுவதும் தன் திறமையான இயக்கத்தால் திறம்பட கையாண்டு முத்திரை பதித்து அசத்தலுடன் அமைத்துள்ளார் இயக்குனர் ம.மணிகண்டன். இப்படம் அனைவராலும் பேசப்படும் இவரின் கடின உழைப்பிற்கும், முயற்சிக்கும் விருதுகள் குவிக்கும். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன் சார்பில் ம.மணிகண்டன் தயாரிப்பில் விஜய்சேதுபதி வழங்கும் கடைசி விவசாயி கிராமத்து எளிய இனிய வாழ்க்கையை மறந்து சொகுசு வாழ்க்கையைத் தேடிச் செல்லும் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டி புத்துணர்ச்சியும், உத்வேகமும் கொடுக்கும் கிராமத்து அருசுவை அறுவடை படையல்.