என்னங்க சார் உங்க சட்டம் விமர்சனம்: புதுவித முயற்சி

0
282

என்னங்க சார் உங்க சட்டம் விமர்சனம்: புதுவித முயற்சி

பேஷன் ஸ்டியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் இணைந்து தயாரித்திருக்கும் படம் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு ஜெயராம்.

இதில் ஆர்.எஸ்.கார்த்திக், ரோகிணி, ஜூனியர் பாலைய்யா, தன்யா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், ஐரா, சுபா, கோபால், கயல் வின்சென்ட், ராகுல் தாத்தா, பகவதி பெருமாள், ரமேஷ், தாஸ் தீன், தனம், சாய்தினேஷ், விகாஸ், விஜயன், அபிநந்தன் ஸ்ரீனிவாசன், தண்டபாணி, அபிநயா, சந்தோஷ், மீரா மிதுன், அட்டகத்தி விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-அருண்கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், படத்தொகுப்பு-பிரகாஷ் கருணாநிதி, இசை-குணா பாலசுப்ரமணியன், கலை-டீஜே, ஆடை-திவ்யா லட்சணா, ஸ்வேதா ராஜு, பாடல்கள்-கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், முத்து, ரஞ்சித், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

புதுமுக இயக்குனர் தன்னிடம் உள்ள இரண்டு கதைகளை தயாரிப்பாளரிடம் சொல்ல அதில் எந்த கதையை தயாரிப்பாளர் எடுக்க முன் வந்தார் என்பதே கதையின் சாரம்சம்.

முதல் பாதி காதலும், காமெடியும் கலந்த ஜே.பி. (ஜெயராம் பிரபு) கதை. இதில் தன் வாழ்க்கையில் நடந்த காதல்  ஜாலிகள், தோல்விகள், கழட்டி விட்ட காதல், திருமணம் ஆகியவற்றை ஜே.பி தன் கற்பனையில் சொல்லியிருப்பதே படத்தின் துவக்கம். நான்கு பெண்களை வெவ்வேறு மதத்தை சார்ந்தவரை காதலித்து ஏமாற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை சொல்லி கழட்டி விட்டுவிட்டு இறுதியில் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பதே முதல் பாதியின் கதை.

இரண்டாம் பாதி  டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று நேர்காணலுக்கு அழைத்திருக்கும் ஆறு பேர் எவ்வாறு ஐந்து நடுவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதில் சொல்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை அடிப்படையாக கொண்ட திரைக்கதை. அதனுடன் இணைப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் சட்டத்தின் மூலம் தேர்வான இரண்டு வேறு சாதி அர்ச்சகர்கள், கோவிலில் நடக்கும் நேர்காணலுக்கு சென்று அங்கிருக்கும் பிராமண அர்ச்சகர்களிடம் போட்டி போட்டு அனைத்திலும் வெற்றி பெற்று யார் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே இரண்டாம் பாதியின் கதை.

ஜே.பி என்ற ஆர்.எஸ்.கார்த்திக் செய்யும் அளப்பறைகள், காதல் களியாட்டங்கள், தனக்கு பிடித்து விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்து சாதித்து கொள்ளும் ஏமாற்று பேர்வழி என்று பாதிப்படத்தில் இவரைச் சுற்றியே கதை நகர்வதால் அதற்கு தகுந்தவாறு நகைச்சுவையுடன் கலகலக்க வைக்கிறார்.

ரோகிணி அம்மாவாக வரும் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் வரும் பத்ரகாளி கேரக்டர் பவர்ஃபுல்லாக, ஆணித்தரமான, உறுதியுடன் முடிவு எடுக்கும் நடுவராக வந்து கை தட்டல் பெறுகிறார். இவர் எடுக்கும் சாதுர்யமான முடிவு தான் தகுதியான நபருக்கு வேலை கிடைக்கிறது. தன் பேரனுக்கு இட ஒதுக்கீடு பற்றி சொல்லி புரிய வைப்பது தெளிவான முயற்சி.

ஜூனியர் பாலைய்யா, தன்யா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், ஐரா, சுபா, கோபால், கயல் வின்சென்ட், ராகுல் தாத்தா, பகவதி பெருமாள், ரமேஷ், தாஸ் தீன், தனம், சாய்தினேஷ், விகாஸ், விஜயன், அபிநந்தன் ஸ்ரீனிவாசன், தண்டபாணி, அபிநயா, சந்தோஷ், மீரா மிதுன், அட்டகத்தி விஸ்வநாத் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் வித்தியாசமாக கதைக்களத்திற்கு கை கொடுக்கிறது.இவர்களில் சிலர் இரண்டு கதைகளிலும் வேறு கதாபாத்திரங்களில் வந்து போவது வித்தியாசமான முயற்சி.
அருண்கிருஷ்ணா ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு இரண்டு வெவ்வேறு கதைக்களங்களுக்கு உயிர் கொடுத்து உழைத்திருப்பது படத்தில் தெளிவாக தெரிகிறது.

குணா பாலசுப்ரமணியனின் இசை படத்திற்கு பலம் மட்டுமல்ல அந்த படத்திற்கு பாடல்கள் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இதில் பல்லாங்குழி பாடல் மற்றும் என் ஜீரக பிரியாணி ஆகிய இரண்டு பாடல்களை எழுதியிருக்கும் பத்திரிகையாளர் ஜெகன் கவிராஜின் வரிகள் படத்திற்கு ஹைலைட்ஸ் மட்டுமல்ல பாடல் வரிகள் அர்த்தமுள்ளதாகவும், ஆழமாகவும், அழகாகவும் இசைக்கேற்ப மனதை வருடிச் சென்று சூப்பர் ஹிட் பாடலாக சக்கை போடு போடுகிறது. இளம் கவிஞர் ஜெகன் கவிராஜ் இதுபோல் பல ஹிட் பாடல்களை கொடுத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

இந்தப் படம் டியுப்லக்ஸ் மூவியாக வந்துள்ளது. முதல் பாதி வேறு கதையாகவும், இரண்டாம் பாதி வேறு கதையாகவும் தந்து படத்தை முடித்துள்ளனர். முதல் பாதி 2கே கிட்ஸ் ரசிக்கும் வண்ணமும்,இரண்டாம் பாதி 90ஸ் கிட்ஸ் ரசிக்கும்  வண்ணமும் தந்துள்ளது சிறப்பம்சம்.

முதல் பாதி ஜாலி என்றால் இரண்டாம் பாதி ஜாதி, இடஒதுக்கீடு, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆவது பற்றியதாக ஆழமாக பல கிளைக்கதைகளாக செல்கிறது. அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையே அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டும் என்றும், அந்த பதவியை கிடைக்கப்பெற்றவர்கள் வருங்காலத்தில் தன் சொந்தங்களுக்கு வழி வகை செய்யாமல், அந்தந்த சமூகத்திலேயே மிகவும் பின் தங்கிய மற்றவர்களுக்கு தகுதி இருந்தால் விட்டு கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை பத்ரகாளி கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரபு ஜெயராம்.

அதே சமயம் அரசு அங்கீகாரம் பெற்று சான்றிதழ் கிடைக்கப்பெற்ற வேறு சாதியினர் அர்ச்சகராக தேர்ந்தெடுக்கப்பட என்னென்ன இன்னல்களையும், அவமானங்களையும் பட வேண்டி இருக்கிறது என்பதைக் கூறியதோடு, அர்ச்சகர்களுக்கு உள்ளேயும் பல பிரிவுகள், பிரச்சனைகள் இருப்பதும், அவர்களிடமும் வறுமை இருக்கிறது என்பதை எடுத்துரைத்துள்ளார்.

ஆக இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கிய என்னங்க சார் உங்க சட்டம் பலவித கோணங்களில் பலவித மனிதர்களின் நிலைமையை அலசி ஆராய்வதோடு புதுவித முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சீரியஸான கதைக்களத்தை முதல் பாதியில் கொடுக்காமல் காதல் நகைச்சுவை கலந்து கொடுத்து, இரண்டாம் பாதியை சமூகப் பிரச்னையை பலவித கேள்விகளோடு பதிலையும் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வெல்டன்.