எஃப்டிஐஐ-யின் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமனம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு
புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இத்துறையின் அமைச்சராக உள்ள அனுராக் தாக்கூர், நடிகர் மாதவன் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்துக்கள். உங்களின் அனுபவம் மற்றும் கடுமையான தொழில்தர்மம் இந்த நிறுவனத்துக்கு பயன்படும் என்பதை உறுதியாக நம்புகிறேன். உங்களின் அனுபவம் நல்லபடியான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிலுக்கு நடிகர் மாதவன் தனது பதிவில், “உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எனது சிறப்பான உழைப்பை கொடுப்பேன்” என உறுதியளித்துள்ளார்.
Thank you so very much for the honor and kind wishes @ianuragthakur Ji. I will do my very best to live up to all the expectations. 🙏🙏 https://t.co/OHCKDS9cqt
— Ranganathan Madhavan (@ActorMadhavan) September 1, 2023