எஃப்ஐஆர் திரைப்படத்தை தடை செய்யக்கோரி புகார்!

0
146

எஃப்ஐஆர் திரைப்படத்தை தடை செய்யக்கோரி புகார்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’.  இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். ‘கிருமி’ புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

எப்.ஐ.ஆர். திரைப்படம் தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில், இந்த திரைப்படத்தை உடனடியாக தடை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தடா ரஹீம், “எப்.ஐ.ஆர் திரைப்பட ட்ரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்போல் சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், இத்திரைப்படத்தை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். ஏற்கெனவே, எப்.ஐ.ஆர். திரைப்படம் மலேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதால், அந்த சமூக இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே, துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியான காட்சிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் படத்தை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் எச்சரித்திருந்தது. எப்.ஐ.ஆர் படத்தை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப் போகிறேன்” என்றார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.