உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்துக்கு தடையில்லை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘மாமன்னன்’. கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இதன் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வரும் 29-ம் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரின் அந்த மனுவில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏஞ்சல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாவும், படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், அதுவே தனது கடைசி படம் என்று கூறி உள்ளார் என்றும் தயாரிப்பாளர் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், ஒப்பந்தப்படி மீதமுள்ள 20% படப்பிடிப்பிற்கு, உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்றும், எனவே, மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் நாளை மாமன்னன் வெளியாகவுள்ள நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது ரெட் ஜெயினட் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிட்டெட் கூட்டு நிறுவனம் மூலம் ‘மாமன்னன்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும், ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டும்தான், அதுவும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திடம்தான் என்றும் வாதிட்டார். மேலும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பாட்னர் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘மாமன்னன்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். அதோடு ‘ஏஞ்சல்’ திரைப்படத்தில் நடித்து தருவது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.