உண்மையிலேயே என்னை அடி வெளுத்து விட்டான்! – விஷால்
தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி” திரைப்படம். படவெளியீட்டை ஒட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் விஷால் பேசியதாவது:
என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.
நீண்ட நாட்கள் கடந்து பத்திரிகை நண்பர்களான உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.
எனிமி தீபாவளிக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு இந்த தயாரிப்பாளர் வினோத்குமார் தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடி க்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்தப்படம். ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்ன வென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். ஏற்கனவே அவருடன் அவன் இவன் செய்திருக்கிறேன் இந்தப்படமும் சூப்பராக இருக்கும். இன்னும் 10 வருடம் கழித்து பார்க்கும் போதும் இதே நள ரசனையோடு இருக்கும். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன்.
மிருணாளினி ஆல்வேஸ் வெல்கம். நன்றாக நடித்திருக்கிறார். அடுத்தமுறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம்.
கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும் போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம்.
DOP RD.ராஜசேகர் சார் அசத்தியிருக்கிறார்.
சமனின் பாடல்களும் , சாம்.CS ரீ-ரிகார்ட்டிங்கும் மிரட்டல். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். 600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகபோகிறது. மிக பிரமாண்டமாக இப்படம் வெளியாகவுள்ளது நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம் இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.