உடன்பிறப்பே விமர்சனம்
2டி எண்டர்டெய்ண்மெண்ட் சார்பில் ஜோதிகா-சூர்யா தயாரிப்பில் உடன்பிறப்பே படத்தை இயக்கியிருக்கிறார் இரா.சரவணன்.
இதில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், சிஜா ரோஸ், ஆடுகளம் நரேன், சித்தார்த், நிவேதிதா சதீஷ், வேல்ராஜ், வேலராமமூர்த்தி, தீபா, நமோ நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-டி.இமான், ஒளிப்பதிவு-வேல்ராஜ், படத்தொகுப்பு-ரூபன், கலை-முஜிபூர் ரகுமான், ஒலி-டி.உதயகுமார், பாடல்கள்-யுகபாரதி, சிநேகன், சண்டை- சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், ஆடை-பூர்ணிமா ராமசாமி, தலைமை தயாரிப்பு மேற்பார்வை-செந்தில்குமார், இணை தயாரிப்பு- ராஜ்சேகர் கற்பூரபாண்டியன், மக்கள் தொடர்பு- யுவராஜ்.
பாசமிகு அண்ணன் தங்கை சசிகுமார்-ஜோதிகா. பள்ளி வாத்தியார் சமுத்திரகனியை மணந்து கொண்டு ஜோதிகா அண்ணன் வீட்டிலேயே வாழ்கிறார். சசிகுமார் பஞ்சாயத்து, அடிதடி என்று எதற்கெடு;த்தாலும் சண்டை போடுவது சமுத்திரகனிக்கு பிடிக்காமல் போகிறது.அதை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சசிகுமார் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததால் சமுத்திரகனி கடுப்பில் இருக்கிறார். சசிகுமாருக்கு ஒரு பையனும், ஜோதிகாவிற்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. சமுத்திரகனியின் மகன் சசிகுமாரிடம் பாசமாக இருப்பதால் எங்கே தன் மகன் அடிதடியில் இறங்கி விட போகிறான் என்று சமுத்திரகனி பயப்படுகிறார். இதற்கிடையில் திடீரென்று கிணற்றில் தவறி விழும் சமுத்திரகனியின் மகன், ஜோதிகாவின் மகன் இருவரையும் தன் உயிரை கொடுத்து காப்பாற்ற முயல்கிறார் ஜோதிகா. இதில் ஜோதிகாவின் மகன் இறக்க, அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சமுத்திரகனி ஜோதிகாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியேறுகிறார். இரு குடும்பத்தாருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிந்து போகிறார்கள். இறுதியில் அண்ணனும் தங்கை குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? பிள்ளைகளால் பிரிந்த குடும்பம், அவர்கள் மூலமாகவே இணைந்தார்களா? என்பதே பாசமிகு கதைக்களம்.
அண்ணன் வைரவனாக சசிகுமார் தங்கை பாசத்தால், அனைத்தையும் தாங்கிக்கொண்டு பெரிய மனிதராக வலம் வந்து நியாயத்திற்கும், சத்தியத்திற்கும் கட்டுப்பட்டவராக தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியசாலியாக வலம் வந்து மனதில் நிற்கிறார்.
தங்கை மாதங்கியாக ஜோதிகா அண்ணனிடம் அன்பு கொண்டவராக, அண்ணன் எதை செய்தாலும் அது நல்லதுக்கே என்று எண்ணும் மனம் கொண்டவராக, கணவனின் கண்டிப்புக்கும், வற்புறுத்தலுக்கும் அசைந்து விட்டு கொடுத்து போகும் மனைவியாக, அதே சமயம் அண்ணனுக்கு சிக்கல் வந்தால் அதை கணவனுக்கு தெரியாமல் சரி செய்வதில் சாதுர்யமாக செயல்படும் பாசமிகு தங்கையாக, மகளுக்கு நல்ல தாயாக, நடை, உடை, பாவனையில் அச்சு அசல் கிராமத்து பைங்கிளியாக ஜொலிக்கிறார்.
சமுத்திரகனி அளவெடுத்து பேசும் பேச்சு, கண்டிப்பு, கோபம் என்று நேர்மையின் மறுவடிவமாக எதையும் சட்டத்தால் சாதிக்கலாம் என்ற மனப்பான்மை கொண்டவராக, மனசாட்சிக்கு பயந்தவராக சிறப்பான கதாபாத்திரம்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சூரியின் காமெடி ரசிக்க வைக்கிறது.
அண்ணியாக சிஜாரோஸ் புன்முறுவலுடன் கூடிய இயல்பான நடிப்பு படத்திற்கு பலம்.
வில்லனாக கலையரசன், ஆடுகளம் நரேன், சித்தார்த், நிவேதிதா சதீஷ், வேல்ராஜ், வேலராமமூர்த்தி, தீபா, நமோ நாராயணன் படத்தின் கதைஒட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
கிராமத்து மெல்லிசை மனதை வருட அண்ணே யாரண்ணே என்று சசிக்குமார் வரும் போதெல்லாம் தனியாக ஒலிக்கும் பாடல், பின்னணி இசை கவர்ந்துள்ளது.
தஞ்சை மண்ணின் அழகையும், கிராமத்து வாழ்வியலையும் சிறப்பாக காட்சிக்கோணங்களால் கொடுத்து அசர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
படத்தொகுப்பு-ரூபன்,கலை-முஜிபூர் ரகுமான், சண்டை- சூப்பர் சுப்பராயன்,திலீப் சுப்பராயன் ஆகியோர் கச்சிதமாக செய்துள்ளனர்.
ஜோதிகாவின் ஐம்பதாவது படத்தை அவரின் தனித்திறமைக்கேற்ப அற்புதமான அண்ணன்-தங்கை பாசத்தை, குடும்ப செண்டிமெண்ட், காதல், அடிதடி கலந்து வெகு இயல்பான திரைக்கதையில் மனதில் ஆழமாக பதியும்படி திறம்பட இயக்கியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
மொத்தத்தில் 2டி எண்டர்டெய்ண்மெண்ட் சார்பில் ஜோதிகா-சூர்யா தயாரித்திருக்கும் உடன்பிறப்பே அனைவரும் பார்த்து பரவசப்பட கூடிய பாசப் போராட்டத்தில் அசத்தும் படம்.