‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (RRR) தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும் : ‘ஆர்ஆர்ஆர்’ முன் வெளியீட்டு விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

0
201

‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (RRR) தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும் : ‘ஆர்ஆர்ஆர்’ முன் வெளியீட்டு விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

ராஜமெளலி இயக்கி உள்ள படம் (RRR) ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. லைகா ப்ரொடக்ஷன்ஸ், டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. புஷ்பா படத்திற்கு பிறகு மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சி இது தான். மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 27 ம் தேதியும், ஐதராபாத்தில் ஜனவரி 30 ம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக லைகா அறிவித்திருந்தது. ஆனால் ஒமைக்ரைன் பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஐதராபாத்தில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை வர்த்தக மையத்தில் ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் சென்னையிலும் மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ராஜமெளலி, ராம்சரண், ஜுனியர் என்டிஆர், உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மதன் கார்க்கி, ஆர்.பி.செளத்ரி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆடல், பாடலுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது குழுவினருடன் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட நாட்டு நாட்டு பாடலுக்கு அதே போல் உடையணிந்து, அதே ஸ்டெப்களை போட்டு நடனமாடி அனைவரையும் அசர வைத்தார். இதனை ராஜமெளலி உள்ளிட்டோர் மிகவும் ரசித்தனர்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

“இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதற்கு காரணம் ராஜமௌலி மட்டும்தான். அவரது பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமௌலியிடம் சொன்னேன்.

என்னை நடனம் ஆட அழைத்தார்கள். சிவா வந்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு நடனம் வராது. சிலருக்கு நடனம் ஆடினால்தான் கழுத்து சுளுக்கும். இவர்கள் ஆடுவதை பார்த்தாலே எனக்கு கழுத்து சுளுக்கிக்கொண்டது. எனக்கு நடனம் சுத்தமாக வராது.

இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமௌலி கேட்டுக்கொண்டார். இப்போது RRR படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.

மேலும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், 2022 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்குகிறது முதல் மாதத்திலேயே ஆர் ஆர் ஆர் மற்றும் அஜித் நடித்துள்ள வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன, இது சிறப்பான ஆண்டாக அமையும் என தெரிவித்தார்.