இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கே திரையரங்கில் அனுமதி – அதிர்ச்சியில் திரையுலகம்!

0
402

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கே திரையரங்கில் அனுமதி – அதிர்ச்சியில் திரையுலகம்!

நாட்டில் பாதி பேர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், கேரள அரசின் அறிவிப்பு ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குகின்றன. சமீபத்தில் வெளியான சிவகுமாரின் சபதம், நோ டைம் டூ டை படங்களுக்கு கணிசமான அளவில் பார்வையாளர்கள் இருந்தனர். கேரளாவில் இன்னும் திரையரங்குகள் திறக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அக்டோபர் 25 முதல் திரையரங்குகளை திறக்க அவ்வரசு அனுமதித்துள்ளது. அதற்கு சில நிபந்தனைகளும் விதித்துள்ளது.

மற்ற மாநிலங்களைப் போல 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இரண்டாவது நிபந்தனைதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் என்ற கட்டுப்பாடே படத்தின் 25 முதல் 35 சதவீத வசூலை பாதிக்கும்.

இதில் கூடுதலாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றால், யாரும் திரையரங்குகளுக்கு வர மாட்டார்கள், திரையரங்குகளை திறப்பது சாத்தியமில்லாமல் போய்விடும் என திரையரங்கு உரிமையாளர்களும், திரையுலகினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாட்டில் பாதி பேர்கூட இன்னும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நிலையில் இப்படியொரு நிபந்தனை தேவை தானா? அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கேரளாவில் திரையரங்குகள் திறந்த பிறகே மோகன்லாலின் மரக்கார் – அரபிக்கடலின்டெ சிம்ஹம் உள்பட பல படங்களை வெளியிடுவது என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்தப் படங்களின் வெளியீடு கேரள அரசின் இரண்டாவது நிபந்தனையால் மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.