இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது
52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பானாஜி, நவம்பர் 21, 2021
கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள் இடம்பெறுகின்றன. 28ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.
துவக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங், மத்திய ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 75 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான மார்ட்டின், “எக்காலத்திலும் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரேயின் பெயரால் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடைய திரைப்படங்களைப் பார்க்கும்போது, அது ஒரு புதிய அனுபவமாக மாறும். பதேர் பாஞ்சாலியைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்தது” என்றார்.
“நான் என் மகளுக்கு சிறு வயதிலேயே பதேர் பாஞ்சாலியைக் காட்டினேன். உலகத்தையும் உலகெங்கிலும் உள்ள பிற கலாச்சாரங்களையும் எப்படி அவள் உணர்கிறாள் என்பதில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று மார்ட்டின் கூறினார்.
விருதைப் பெற்றதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு இந்திய திரைப்படத் துறைக்கு நன்றி தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டின் சிறந்த சினிமா சிந்தனையாளர்களில் ஒருவராக பலரால் கருதப்படும் மார்ட்டின், ஒரு ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆவார். குட்ஃபெல்லாஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், தி டிபார்ட்டட், ஷட்டர் ஐலேண்ட் மற்றும் தி வேர்ல்ட் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் போன்ற தலைசிறந்த படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார்.
இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் இஸ்டீவன் ஸாபோவுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.