இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசி : உலகில் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது பாட்டி
லண்டன், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுப்பணிகள் பல்வேறு உலக நாடுகளில் நடந்து வருகிறது. சோதனை முயற்சியில் சில நாடுகள் தடுப்பூசியை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்து அரசு முதன் முதலில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இங்கிலாந்து அரசு அறிவித்திருந்தது. இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை இங்கிலாந்து ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 90 வயதான மார்கரெட் கீனன் என்பவருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாட்டுக்கு வர 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் உள்ள மையங்களில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சில சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 90 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை பெற்ற முதல் நபராக ஆகியுள்ளார்.
வடக்கு அயர்லாந்தின் என்னிஸ்கில்லன் பகுதியைச் சேர்ந்த மார்கரெட் கீனன் என்ற 90 வயது மதிக்கத்தக்க பெண், முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளார். இவருக்கு தடுப்பூசி கோவென்ட்ரியில் இருக்கும் பல்கலைக்கழக மருத்துவமனையில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து மார்கரெட் கீனன் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்ட முதல் நபராக இருப்பதை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால் புதிய ஆண்டில் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க நான் செல்ல முடியும். என்னைப் பெரிதும் கவனித்துக்கொண்ட தேசிய சுகாதார ஊழியர்களுக்கு நான் நன்றிசொல்லி முடித்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
90-year-old Margaret Keenan is the first to receive the Pfizer/BioNTech vaccine, administered by Matron May Parsons, as UK's mass vaccination programme begins https://t.co/3eBGv3RUsU pic.twitter.com/ltWAL8uDmr
— BBC Breaking News (@BBCBreaking) December 8, 2020