அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் மகான் – வெளியீட்டு தேதி அறிவிப்பு!

0
112

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் மகான் – வெளியீட்டு தேதி அறிவிப்பு!

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் மகான் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அதன் வெளியீட்டு தேததியை தற்போது அறிவித்துள்ளனர்.

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கும் மகான் திரையரங்குக்கு பதில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்ற பேச்சு முன்பே இருந்தது. கார்த்திக் சுப்புராஜின் கடைசிப் படமான ஜகமே தந்திரம் ரசிகர்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சியே இதற்கு முக்கிய காரணம். ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியானதால் பிழைத்தது. இதுவே திரையரங்கில் வெளியாகியிருந்தால் தயாரிப்பாளர் தலையில் துண்டுக்குப் பதில் வேட்டியே விழுந்திருக்கும்.

மகான் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதே படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் எண்ணமாக இருந்தது. ஜகமே தந்திரத்தின் ரிசல்டுக்குப் பிறகும் அவர் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. அதேநேரம் விக்ரமுக்கு படத்தை திரையரங்கில் வெளியிடுவதில்தான் விருப்பம். அவரது மகன் துருவ் நடித்த முதல் படம் சரியாகப் போகவில்லை. இரண்டாவது படமும் ஓடிடியில் முடங்க வேண்டுமா என்ற நியாயமான கவலை. எனினும் பணம் போட்டவர்களின் முடிவுதானே இறுதியானது.

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி மகான் வெளியாகிறது. கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில் இது நல்ல முடிவு. மகானில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணிபோஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர்.