‘மனநலம் ஒரு முழுமையான அணுகு முறை’ சர்வதேச மாநாடு 2023 பிப்ரவரி 6 முதல் 8 வரை

0
374

‘மனநலம் ஒரு முழுமையான அணுகு முறை’ சர்வதேச மாநாடு 2023 பிப்ரவரி 6 முதல் 8 வரை

மனநலம் ஒரு முழுமையான அணுகுமுறை’ என்ற தலைப்பிலான மூன்று நாள் பன்னாட்டு மாநாடு ஒன்றை சென்னை சமூகப் பணிக் கல்லூரியின் உளவியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா 06-02-2022 அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். ராஜா சாமுவேல் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய மாநாட்டின் நோக்கத்தை துறைத்தலைவர் முனைவர் சுபஸ்ரீ வனமாலி அவர்கள் விளக்கிப் பேசினார்.-

தலைமை உரை ஆற்றிய தலைவர் திரு கே.ஏ. மாத்யூ இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் இந்த ஆண்டு சென்னை சமூகப் பணிக் கல்லூரியின் பவள விழா ஆண்டு என்பதைத் தெரிவித்து மாநாடு வெற்றியடைய தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாண்புமிகு பேராசிரியர் முனைவர் எஸ். கௌரி அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுத் தனது தொடக்க உரையை ஆற்றினார். அப்போது அவர் மனநலம் குன்றியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோடு, அவர்களைப் பராமரிப்பவர்கள் படும் சிரமங்களையும் தனது சொந்த அனுபவங்களுடன் விளக்கிப் பேசினார். மனநலக் குறைக்கு சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெறும் பழக்கம் இந்தியர்களிடையே இன்றும் குறைவான அளவிலேயே இருக்கிறது. இந்தத் தயக்க நிலை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையர் முனைவர் தாரேஜ் அகமது இ.ஆ.ப. சிறப்புரையாற்றினார். ஆரோக்கியமான வாழ்விற்குச் சமுதாய நலம் எவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், மக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவதில் மனநல வல்லுநர்களின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.

ஜூம் செயலியின் மூலமாக மாநாட்டில் இணைந்த பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் கல்விப் பிரிவுத் தலைவர் முனைவர் அசம்ப்தா அனியஸ் அவர்கள் கல்வியில் பாகுபாடு மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான திறன்களை எதிர்கொள்வதில் உள்ள சவால்களை விவரித்தார்.

கல்லூரியின் டீன் முனைவர் சுபாஷிணி அவர்கள் முனைவர் பிரிசில்லா சத்தியநாதன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய உளவியல் ஆரோக்கியத்திற்கான சிறப்பு மையம் குறித்தும், அது சென்னையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இளம்பருவத்தினரிடையே காணப்படுகின்ற மனநலப் பிரச்சினைகள் தொடர்பாகச் செயல்படப் போகிறது என்றும் பேசினார். திட்டத் தலைவர் முனைவர் ஹான்னா ஜான் நன்றியுரை வழங்கினார்.

உளவியல், மனநோய், மருத்துவம், கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கியப் பிரிவுகள் அனைத்திலும் புகழ்வாய்ந்த வல்லுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்கள். அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஜிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து தகுதி வாய்ந்த பேச்சாளர்கள் ஜூம் வழியாகப் பேசவிருக்கிறார்கள். இந்தப் பன்னாட்டு மாநாட்டில் சுமார் 500 மாணவர்கள், அறிஞர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொள்கிறார்கள், இந்தப் பன்னாட்டு மாநாட்டிற்கான முன் தயாரிப்பு மாநாட்டுப் பணிப்பட்டறை 5/2/2023 அன்று நடத்தப்பட்டது. அதில் பெரியார் உளவியல் துறைத் தலைவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கதிரவனின் СВТ பணிப்பட்டறையும், ஈஸ்ட்-வெஸ்ட் ஆலோசனை மையத்தைச் சேர்ந்த மேக்டலீன் ஜெயரத்தினத்தின் மனோதத்துவ நாடகமும் நடைபெற்றன.