அதிகம் விற்பனையாகும் குவாண்டம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது, கேலிபர்!
அடுத்த 6 மாதங்களில் மாநிலம் முழுவதும் ரூ. 100 கோடி முதலீட்டில், 150 ஷோரூம் மற்றும் சேவை மையங்களை அமைக்கத் திட்டம்!
சென்னை, ஜனவரி 30, 2023
தமிழ்நாட்டின் முன்னணி மின் வாகன (EV) தொழில்நுட்ப நிறுவனமாகிய கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் லிமிடெட் (Calliper Green Vehicles Limited), குவாண்டம் எனர்ஜி (Quantum Energy) நிறுவனத்தின் எலெக்ட்ரான் (Elektron), மிலன் (Milan), ப்ஜினெஸ் (Bziness) ஆகிய மூன்று அதிவேக மின்சார ஸ்கூட்டர்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விற்பனையை முடுக்கிவிட, அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய பெருநகரங்கள், நடுத்தர நகரங்களில் ரூ.100 கோடி முதலீட்டில் 150 ஷோரூம் மற்றும் சேவை மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, கேலிபர் நிறுவனம்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி முனைவர் என். பரசுராமன், தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மண்டல இணை இயக்குநர் திரு. என். இளங்கோவன் ஆகியோர் குவாண்டம் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தினர். இந்த நிகழ்வில் குசலவா குழும நிறுவனங்களின் (Kusalava Group of Companies) மேலாண் இயக்குநர் மற்றும் குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் திரு. சுக்கப்பள்ளி ராமகிருஷ்ண பிரசாத், கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குவாண்டம் எனர்ஜி என்பது ஹைதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்ட மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது மாநிலச் சந்தைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் இந்த ஆண்டு 6,000 குவாண்டம் மின் வாகனங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மின் ஸ்கூட்டர்கள், கொரியன் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. இவை சக்தி வாய்ந்தவை, திறன்மிக்கவை, செலவு குறைந்தவை. 1000W மோட்டார் சக்தியுடன், அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும் எலெக்ட்ரான் மற்றும் மிலன் ஸ்கூட்டர் வகைகள் பொது மக்களுக்கு பொருத்தமானவை. 1200W மோட்டார் சக்தி கொண்ட ப்ஜினெஸ், டெலிவரி வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இது வெவ்வேறு ஓட்டும் முறைகளுடன் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எலெக்ட்ரான் & மிலனுக்கு ரூ. 92,888 மற்றும் ஜின்கா ப்ஜினெஸுக்கு ரூ. 96,056 ஆகும்
அனைத்து மின் வாகனங்களிலும் மேம்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகள் உள்ளன. அவை 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். மாடலைப் பொறுத்து, ஒரு முழு வாகனத்தின் சார்ஜ் 80-120 கிமீ வரை நீடிக்கும். பல கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இதன் பேட்டரிகள் மிகவும் பாதுகாப்பானவை. இந்த ஸ்கூட்டர்கள் இரண்டு பேரை சுமந்து செல்லவும், உயரமான பகுதிகளில் செல்லவும் நல்ல திறனைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய ஸ்மார்ட் பி.எம்.எஸ். (Smart BMS) மூலம் இவை இயக்கப்படுகின்றன. இந்த மின் வாகனங்கள் இந்திய சாலைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன.
குவாண்டம் எனர்ஜி நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளாக வாகன உற்பத்தித் துறையில் இருக்கும் குசலவா குழுமத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனம் பெங்களூருவில் ஆர் & டி மையத்தையும், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உற்பத்தி வசதியையும் கொண்டுள்ளது. பல இந்திய மாநிலங்களின் மின் ஸ்கூட்டர் சந்தையில் குவாண்டம் கால் பதித்து வருகிறது. ஏற்கனவே கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகம் விற்பனையாகும் மின் வாகனங்களாக குவாண்டம் மின் வாகனங்கள் உள்ளன. பல வடிவமைப்பு, பயன்பாடு சார்ந்த காப்புரிமைகளையும் குவாண்டம் பதிவு செய்துள்ளது. 1500W மோட்டார் மூலம் இயங்கும் பிளாஸ்மாவை (Plasma) மார்ச் 2024-ல் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. பிளாஸ்மா உள்நாட்டு தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டது.
இது குறித்து குவாண்டம் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் திரு. சுக்கப்பள்ளி ராமகிருஷ்ண பிரசாத் கூறுகையில், “புகழ்பெற்ற மின் வாகன தொழில்நுட்ப நிறுவனமான கேலிபர் உடன் கூட்டுசேர்ந்து, எங்களின் அனைத்து மின் வாகன மாடல்களையும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். மலிவு விலையில், உயர் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களின் வாகனங்களுக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பால் ஊக்கம் பெற்று, எங்கள் உற்பத்தித் திறனை மாதத்திற்கு 5000 வாகனங்களாக சமீபத்தில் விரிவுபடுத்தியுள்ளோம். குவாண்டம் மின் வாகனங்கள் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, விரைவாக அவர்கள் மின் வாகனங்களுக்கு மாறுவதற்கான நம்பிக்கையைப் பெறுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கேலிபர் நிறுவனத்துடன் நீண்ட கால தொடர்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
புதிய தயாரிப்பின் அறிமுகம் குறித்து கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. மாணிக்கம் கூறுகையில், “குவாண்டம் எனர்ஜியின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை பங்குதாரராக இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் இரு சக்கர மின் வாகனங்கள் சந்தையில் தனித்துவமான வடிவமைப்பு, தயாரிப்பு தரத்தால் இந்நிறுவனம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் சமீபத்திய தயாரிப்புகளான அதிவேக ஸ்கூட்டர்கள் மேம்பட்ட கொரியன் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் அதே வேளையில், விரைவில் வெளியிடப்படவுள்ள பிளாஸ்மா சிறந்த இந்தியக் கண்டுபிடிப்பாகவும் இருக்கும். கேலிபர் மற்றும் குவாண்டம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் பொதுவானது என்னவென்றால், இந்தியாவில் பசுமை வாகனச் சந்தையை மறுவரையறை செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவது மற்றும் நிலையான போக்குவரத்திற்கு விரைவாக மாறுவதன் மூலம் நாடு வளமான பலன்களைப் பெற உதவுவதும் ஆகும்” என்றார்.
தற்போது, கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் நிறுவனம், வர்ஷா (Varsha), இன்வெண்டர் (Inventor), இன்னோவேட்டர் (Innovator), கிரியேட்டர் (Creator), புல் (Bull) ஆகிய சொந்த மின் இரு சக்கர வாகனங்களையும் மற்றும் கேலிபேர் ஈசிகோ (Calliper EzeeGo) இ-பைசைக்கிளையும் (e-bicycle) விற்பனை செய்து வருகிறது.