2000 சமையல்கலை வல்லுனர்கள் பங்கேற்கும் தென்னிந்திய செஃப் அசோசியேஷனின் 6 வது சமையல் சவால் சர்வதேச செஃப் அசோசியேசன் (WACS) ஒப்புதலுடன் செப்டம்பர் 15, 16, 17 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் 20 பிரிவுகளில் நடைபெற உள்ளதாக செஃப் தாமு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தி பார்க் நட்சத்திர விடுதியில் இது தொடர்பாக தென்னிந்திய செஃப் அசோசியேசன் SICA வின் தலைவர் செஃப் தாமு மற்றும் பொது செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இந்த சமையல் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.
2000 சமையல்கலை வல்லுனர்கள் பங்கேற்கும் இந்த போட்டியில், இந்தியாவில் உள்ள சமையல் நிபுணர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு தொழில்முறை தளத்தை நிறுவுதல், படைப்புத் திறமையை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.
தொழில்முறை போட்டியை அணுகும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் நோக்கில் லங்கா செஃப்ஸ் கில்ட் நிறுவனத்தின் மாஸ்டர் சமையல் பயிற்சியாளர் செஃப் டிமுது குமாரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த 4 சமையல் நிபுணர்களுடன் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொச்சின் ஆகிய 4 நகரங்களில் ஆகஸ்ட் மாதம் SICA ஏற்கனவே பேஸ்ட்ரி ஆர்ட் மற்றும் ஹாட் பிளேட் பிரசன்டேஷன் குறித்த பயிலரங்குகளை நடத்தியுள்ளது எனக் கூறிய அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் 200-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுனர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, தொழில் ரீதியாக போட்டியை அணுகுவதற்கான தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.
மேலும் சமையல் கலையின் சிறப்பை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்கனவே ஒருங்கிணைத்ததையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர். WACS அமைப்பின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச நடுவர் குழு வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள சமையல் சவால் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படுவார்கள் என்றும் செஃப் தாமு தெரிவித்தார். 25 க்கும் மேற்பட்ட சர்வதேச நடுவர்களுடன், கல்லூரி மாணவர்கள் முதல் சமையல் வல்லுனர்கள் வரை பல்வேறு பிரிவினர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஸ்கில் பரோட்டா, ஏசியன் பரோட்டா, லைவ் பரோட்டா மற்றும் மில்லட் பேஸ்ட் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற உள்ளன. அது போல ட்ரெஸ் கேக் போட்டியும் நடைபெற உள்ளது