இலவச சிறப்பு பயிற்சித் திட்டம்

0
159

இலவச சிறப்பு பயிற்சித் திட்டம்

சென்னை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், இந்திய அரசின்  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் சென்னையில் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது தனது 27-வது கட்ட உதவித்தொகையுடன் கூடிய இலவச சிறப்பு பயிற்சித் திட்டத்தை 2021 டிசம்பர் முதல் தேதியிலிருந்து 11 மாத காலத்திற்கு நடத்த உள்ளது.

இதற்கு தகுதியான எஸ்சி எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை, கணினி செயல்திறன், சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகியவற்றில் தங்களது திறமைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.  பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் இலவச  கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும்.

ப்ளஸ் டூ தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆர்வமுள்ள எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர்கள் இந்தப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.  2021 நவம்பர் 30-ம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் இலவச விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை (ஜெராக்ஸ்) குறிப்பிட்ட காலத்திற்குள், துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், 3-வது தளம், வேலைவாய்ப்பு அலுவலகம், 56 சாந்தோம் பிரதான சாலை, சென்னை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஆவணங்களை சரி பார்ப்பதற்கு வரும் போது எந்தவித பயணக் கட்டணமோ அல்லது வேறு எந்த படிகளோ வழங்கப்பட மாட்டாது என்று சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் ஜி கே ஸ்ரீ ராக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.