இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் தென்மண்டல அலுவலகம், சென்னையில் தொடக்கம்!

0
373

இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் தென்மண்டல அலுவலகம், சென்னையில் தொடக்கம்!

  • நிதி ஆலோசகர் திரு. பி. ராமகிருஷ்ணன் இயக்குனராகப் பொறுப்பேற்றார்!
  • ஆப்பிரிக்காவில் தொழில் புரிய விரும்பும் இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் செயல்படும் ஆப்பிரிக்க நிறுவனங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தை அதிகரிக்க தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் இந்த அலுவலகம் உறுதுணை புரியும்!
  • இந்த விழாவில் இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலாளர் திருமதி நக்மா மாலிக், இந்தியாவுக்கான எத்தியோப்பியா நாட்டுத் தூதர் முனைவர் திருமதி திஜிதா முலுகேதா இமாம் ஆகியோர் பங்கேற்றனர்! 

சென்னை, 21 ஜனவரி 2021

இந்தியாவுக்கும், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள 54 நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகத்தின் அளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இயங்கி வரும் சிறப்பு அமைப்பான – இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் (INDIA AFRICA TRADE COUNCIL) தென்மண்டல அலுவலகம் இன்று (21 ஜனவரி 2021) சென்னையில் தொடங்கப்பட்டது.

தமிழகத்தின் முன்னணி நிதி ஆலோசகரும், சென்னையில் “கார்ப்ரேட் கிளினிக் (Corporate Clinic)” என்ற நிதி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருபவருமான, திரு பி ராமகிருஷ்ணன், இந்தத் தென்மண்டல அலுவலகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் தொழில் புரிய விரும்பும் இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் செயல்படும் ஆப்பிரிக்க நிறுவனங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தை அதிகரிக்க தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் இந்த அலுவலகம் உறுதுணை புரியும்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளில் ஒருவரும், ஆப்பிரிக்கப் பகுதிக்கான, இந்தியாவின் தூதர் மற்றும் கூடுதல் செயலாளருமான திருமதி நக்மா மாலிக் (Mrs. Nagma Mallick) மற்றும் இந்தியாவுக்கான எத்தியோப்பியா நாட்டுத் தூதரான முனைவர் திருமதி திஜிதா முலுகேதா இமாம் (Dr. Tizita Mulugeta Yimam) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இந்த அலுவலகத்தைத் தொடங்கி வைத்தனர்.

பல வகையான வர்த்தக வாய்ப்புகள் கொண்ட நிலப்பகுதி என்பதால், ஆப்பிரிக்காவில் கால் பதிக்க இந்திய தொழில்முனைவோரிடையே பரவலான எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, ஆர்வமுள்ள இந்திய வணிகர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் உதவ, நாட்டின் முக்கிய நகரங்களில் 13 தனி அலுவலகங்களைத் தொடங்க இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலகங்கள் புது டெல்லியில் உள்ள பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் தூதரகங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கித் தர உறுதுணை புரியும்.

இந்த விழாவில் பங்கேற்ற இந்தியப் பொருளாதார வர்த்தக அமைப்பின் [Indian Economic Trade Organization (IETO)] தலைவர் முனைவர் ஆஸிஃப் இக்பால் (Dr Asif Iqbal) பேசுகையில், “பாரதப் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, நமது வர்த்தக நாடுகளின் முன்னுரிமைப் பட்டியலில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளுடனான நமது வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகள் இந்தக் கவுன்சிலின் மூலம் தொடர்ந்து நடைபெறும். தென்னிந்தியாவின் பல்வேறு சிறப்புப் பொருட்களை, ஆப்பிரிக்கச் சந்தைகளுக்கு எடுத்துச் சென்று, அந்நாட்டு மக்களைக் கவர விரும்பும் நிறுவனங்களுக்கும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புவோருக்கும் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இந்தக் கவுன்சில் உறுதுணை புரியும்” எனத் தெரிவித்தார்.

இந்தக் கவுன்சிலின் தென்மண்டலக் அலுவலகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்ற திரு. பி. ராமகிருஷ்ணன் இந்த விழாவில் பேசுகையில், “இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இடையேயான வலுவான உறவை ஏற்படுத்தி, அதை மேலும் வளர்ப்பதுதான் எங்களது நோக்கம். இதன்மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் கொட்டி கிடக்கும் சந்தை வாய்ப்புகளை தென்னிந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும்படி செய்து, அவற்றை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்வோம். குறிப்பாக, இந்தியாவில் இருந்து சென்ற மக்கள் அதிகம் வசிக்கும் – தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள கோமிசா (COMESA – Common Market for Eastern and Southern Africa) அமைப்பின் பிரதிநிதிகளாக உள்ள 19 நாடுகளில் அதிகக் கவனம் செலுத்தப்படும். இந்தியத் தொழில் முனைவோரை ஊக்குவிப்பித்தற்காக ஆப்பிரிக்க ஃபிரீ ட்ரேட் ஜோன் (Africa Free Trade Zone) திட்டம் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே, அங்குள்ள எல்லா வர்த்தக வாய்ப்புகளையும் அலசி ஆராய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பல்வேறு இந்திய நிறுவனங்கள் பங்கேற்ற வட்ட மேஜை மாநாடு ஒன்றும் நடைபெற்றது.

இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் உறுப்பினராக உள்ள தென்னிந்திய நிறுவனங்களின் சார்பில் 30 பேர் கொண்ட ஒரு வர்த்தகக் குழு, வரும் ஏப்ரல் மாதத்தில் – கோமிசா பகுதி எனக் குறிப்பிடப்படும் எத்தியோப்பியா (Ethiopia), ஜூபைடி (Djibouti), ஜிம்பாப்வே (Zimbabwe), போஸ்த்வானா (Botswana) மற்றும் நமிபியா (Namibia) போன்ற நாடுகளுக்குப் பயணிக்க உள்ளது. அப்போது, அந்தந்த நாடுகளில் சுகாதாரம், திறன்மேம்பாடு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களோடு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கீழ்க்கண்ட பட்டியலின்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சில் திட்டமிடுகிறது.

  1. இந்திய ஆப்பிரிக்க திரைப்பட ஆணையத்தை உருவாக்கி, திரு வாலி காஷ்வி (Mr. Wali Kashvi) என்பவர் மூலமாக தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்படங்களை ஆப்பிரிக்க நாடுகளில் படமாக்கும் வாய்ப்புகளை ஆராய்தல்.
  2. இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸின் 500 கார்களை ஜூபைடி நாட்டிற்காக வாங்க தேவையான கூட்டுறவுக்கும், அதற்கான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்தல்
  3. வெவ்வேறு நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள, ‘ஒவ்வொரு மாதமும் ஒரு நாடு’ என தொடர்ந்து வட்டமேஜை மாநாடுகள் ஏற்பாடு செய்தல். (அதற்கு புது டெல்லியில் உள்ள சம்மந்தப்பட்டட தூதரங்களின் உதவியைப் பெற்று ஆவண அனைத்தும் செய்யப்படும். மேலும், தூதரக அதிகாரிகளுக்கும், தொழில்முனைவோருக்கும் இடையே சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்)
  4. ஆப்பிரிக்க நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து கோலாரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆப்பிரிக்கா சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்குதல்.

பல்வேறு துறைகளிலும் இந்தியாவுடனான தமது உறவை வலுப்படுத்திக் கொள்வதில், ஆப்பிரிக்கா அதிக ஆர்வத்துடன் உள்ளது. இதற்காக கோமிசா (COMESA), எக்கோவாஸ் (ECOWAS), வாமூ (WAEMU), சாடிக் (SADC) மற்றும் சஹெல் (SAHEL) போன்ற அமைப்புகள் பங்கேற்கும் துறைகளில் அதிகக் கவனம் செலுத்தப்படும். ஆப்பிரிக்க நாடுகளின் கல்வி, திறன் வளர்ச்சி, சுகாதாரம், வேளாண்மை, போன்ற துறைகளின் திட்டங்களில் ஈடுபட முன்வரும் தொழிலதிபர்களுக்கு கடன் வசதி செய்து தரவும் இந்திய அரசு முன்வருகிறது. இதற்காக இரு நாட்டு அரசுகளின் தரப்பில் தொடர்ந்து பல்வேறு கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவில் பங்கேற்ற, இந்தியாவுக்கான எத்தியோப்பிய நாட்டுத் தூதர் முனைவர் திஜிதா முலுகேதா இமாம் பேசுகையில், “இந்தியாவுடனான எத்தியோப்பிய நாட்டின் உறவும், தொடர்புகளும் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்தவை. இவ்விரு நாடுகளின் சமூக கலாச்சார தொடர்புகளும், நூறாண்டு கடந்த அதன் வர்த்தகத் தொடர்களும் இவ்வுறவுக்கு வழிகாட்டுகின்றன. இதை மேலும் வலுவாக்கி அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் ஆர்வத்துடன் உள்ளோம். இதை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற நிலைக்கு உயர்த்தவும் நாம் முன்வரலாம். அதோடு, இருதரப்பு மற்றும் பிராந்திய மட்டங்களில் காணப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பயனுள்ள உரையாடலை தொடர்ந்து மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தின் போது, இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் துணைத் தலைவர் திரு கிரிஸ் பாலும் (Mr. Chris Pohl) உடன் இருந்தார்.

ALSO READ:

OPENING OF INDIA AFRICA TRADE COUNCIL IN INDIA