‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்!

0
491

‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்!

  • தியேட்டர்களில் உள்ளது போன்று, இனி விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கலாம்!
  • சந்தாதாரராக வேண்டிய அவசியம் இல்லை; ஒரு படம் பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ. 20 -லிருந்து ஆரம்பமாகிறது!
  • தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை தற்போது காணலாம்!
  • திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்த முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகள் வெளியிடலாம்! 

சென்னை, மார்ச் 2, 2021

திரைப்படம், குறும்படம், ஆவணப்படம், இணையத் தொடர் (Web Series) உள்ளிட்ட வீடியோ பொழுதுபோக்கு அம்சங்களை – திரையரங்குகளில் உள்ளது போன்று, விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் கொடுத்து பார்க்கும் வகையிலான, இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ (Pay-per-view OTT – Over The Top) தளமான ‘ஆன்வி.மூவி’ (ONVI.MOVIE) எனும் டிஜிட்டல் திரையரங்கம், மார்ச் 5, 2021 முதல் தொடங்கப்படுகிறது.

‘ஆன்வி.மீடியா’ (ONVI.MEDIA) நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ‘ஆன்வி.மூவி’ டிஜிட்டல் திரையரங்கைப் போன்று செயல்படும். இந்த ஓ.டி.டி. தளத்தில், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் ஒளிப்பரப்பாகும். பிற இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் வெளியாகவுள்ள படங்களையும் விரைவில் திரையிடவுள்ளது, ‘ஆன்வி.மூவி’. இது குறித்து சம்மந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பணியில் தற்போது இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ‘ஆன்வி.மூவி’யை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவி என எந்த டிஜிட்டல் திரையிலும் பார்த்து மகிழலாம்.

தற்போது அறிமுகமாகும் இந்த டிஜிட்டல் திரையரங்கம், முதல் 3 மாதங்களுக்கு, மாதந்தோறும் சுமார் 5 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆண்டு நிறைவில் இந்த நிறுவனம் தனது டிக்கெட் விற்பனை மூலம், சுமார் 100 கோடி ரூபாய் வரை ஈட்ட திட்டமிட்டுள்ளது. திரைப்படங்களைப் பார்ப்பதற்கான டிக்கெட் விலை 20 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்தக் கட்டணத்தை கூகுள் பே (Google Pay), போன்பி (PhonePe), உள்ளிட்ட – அங்கீகரிக்கப்பட்ட யூ.பி.ஐ. (UPI) கட்டணம் செலுத்தும் முறைகளிலும், கடன் அட்டை / ரொக்க அட்டை (Credit / Debit card), இணைய வங்கிப் பரிமாற்றம் (Net Banking) என எந்த வழியிலும் செலுத்தலாம்.

யுடியூப் (YouTube) மற்றும் பிற இணையதளச் சேனல்களில் உள்ள விளம்பரத் தொந்தரவுகள் ‘ஆன்வி.மூவி’ டிஜிட்டல் திரையரங்கில் இருக்காது. மேலும் பிற ஓ.டி,டி. தளங்களில் உள்ளது போன்று மாதாந்திர சந்தா கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் இதில் இருக்காது. மாறாக ‘ஆன்வி.மூவி’  தளமானது,  நேயர்களுக்கு தேவைப்படும் திரைப்படங்களுக்கான கட்டணத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு அவற்றை அனுப்பும் டிரான்சாக்ஷனல் வீடியோ ஆன் டிமாண்ட்  [Transactional Video On Demand – TVOD] வகையைச் சார்ந்ததாகும். மேலும் இவ்வாறு – பகிரப்படும் திரைப்படங்கள் டிஜிட்டல் திரையரங்கின் அனுபவத்தை நேயர்களுக்கு அதே தரத்தில் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:

‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021

ஆன்வி.மூவி’ எனும், புதிய ஓ.டி.டி. தளத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அதன் இயக்குனரான திருமதி ஜெயந்தி தேவராஜன், “இந்தியாவில் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள், பிற வகை காட்சித் தொகுப்புகளை வெளியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகளின் விருப்பத் தேர்வாக எங்களது தளம் விரைவில் மாறும். கட்டணம் செலுத்தி திரைப்படங்களைக் கேட்டுப் பெறும் (TVOD) வாய்ப்பு கொண்ட இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ தளம் எங்களது ‘ஆன்வி.மூவி’தான். முதல் 3 மாதங்களிலேயே, மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் எங்களது டிஜிட்டல் திரையரங்கில் திரைப்படங்களைக் கண்டு களிப்பார்கள். அடுத்த 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கிறோம்.

எங்கள் தளத்தை ‘உங்களது பிரைவேட் டிஜிட்டல் திரையரங்க வளாகம்’ (Your Private Digital Multiplex) என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம். டிஜிட்டல் வசதி கொண்ட திரையரங்கத்துக்குச் சென்று படம் பார்க்கும் அனுபவத்தை, எங்களது தளத்தின் வழியாக திரைப்படத்தைக் காணும் நேயரும் பெற வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில், பல திரையரங்குகளைக் கொண்ட வளாகத்தில், திரைப்பட போஸ்டர்களைப் பார்த்து, படத்தைத் தேர்வு செய்வது போல, எங்களது தளத்திலும் என்னென்ன திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், அதில் ஒன்றைத் தேர்வு செய்து பணம் செலுத்தி திரைப்படத்தைக் கண்டு களிக்கும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆன்வி.மூவி’ என்ற, இந்த நவீன தளத்தில் தங்களது படைப்பை வெளியிடும் ஒரு நபர் தனக்கான வருவாயை எப்படி பெறுவார் என்பது குறித்து விளக்கம் அளித்துப் பேசிய திருமதி ஜெயந்தி, “ஒரு திரைப்படத்தை அல்லது வேறு எந்த படைப்பானாலும், அதை எத்தனை பேர் விரும்பிக் கேட்டுப் பெறுகிறார்களோ, அவர்களிடம் மட்டும் கட்டணம் பெறும் முறையை ‘ஆன்வி.மூவி’ எளிமையாக்கியுள்ளது. விருப்பமான உணவை ஸ்விக்கி (Swiggy) மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்வது போல, பொழுதுபோக்குத் துறையில், விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பெறும் வசதியை எங்களது டிஜிட்டல் திரையரங்கம் அளிக்கிறது. இதற்கு, பொதுமக்களிடம் பெறுகிற டிக்கெட் கட்டணத்தில் 30% தொகையை எங்களது சேவைக் கட்டணமாக எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 70%-த்தை தயாரிப்பாளருக்கு / படைப்பாளிக்கு வழங்குகிறோம். அவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் பணம் பகிர்ந்து அளிக்கப்படும். எத்தனை பேர் தன் படைப்பை எங்களது தளம் வழியாகப் பார்த்தார்கள் என்ற தகவலை தனது இருப்பிடத்தில் இருந்தபடியே மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் மூலம் தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகள் தெரிந்துகொள்ள முடியும்” எனவும் தெரிவித்தார்.

திரைப்படப் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளை சர்வதேச அளவில் வெளியிட, ‘ஆன்வி.மூவி’ வழி செய்கிறது. இந்த ஓ.டி.டி. தளத்தில் 15 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை தங்களது திரைப்படத்தை அவர்கள் திரையிடலாம். பிறகு வேறு ஓ.டி.டி. தளத்துக்கு விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் பரிந்துரைத்துள்ள தரத்தில் படைப்புகள் இருக்கவேண்டும். குறைந்தபட்சம், 15 நிமிட கால அளவு கொண்டதாக இருக்க வேண்டும். ஓ.டி.டி. தளத்திற்கான வழிகாட்டு ஆணையத்தின் பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட படைப்புகளை மட்டுமே இந்தத் தளத்தில் வெளியிட இயலும்.

இந்தத் தளத்தில் ஒரு படைப்பை வெளியிடுவதால், அதன் தயாரிப்பாளர் மற்றும் பார்வையாளர் பெறக் கூடிய பலன் குறித்து பேசிய திருமதி ஜெயந்தி, “தற்போது இரண்டாம் கட்ட கோவிட் பரவல் பொதுமக்களை மீண்டும் அச்சுறுத்தி வருவதால் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது குறித்த அச்சம் பரவலாக உள்ளது. இந்தச் சூழலை திரையுலகினர், ரசிகர்கள் என இருதரப்பும் வெற்றிகரமாகக் கடக்க ‘ஆன்வி.மூவி’ உதவுகிறது. இதன்மூலம் படைப்பாளிகள் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க முடிவதுடன், அதில் வெளிப்படைத் தன்மையும் உறுதி செய்யப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி, ஒரு நேயர் தான் விரும்பிய திரைப்படத்தை, தனது வீட்டில் அமர்ந்து பார்க்கும் சொகுசையும் எங்களது தளம் வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ‘ஆன்வி.மூவி’ நிறுவனத்தின் கிரியேட்டிவ் பிரிவுத் தலைவர் திரு. விக்னேஷ் சின்னத்துரை, வணிகப் பிரிவுத் தலைவர் திரு. கணேஷ், கன்டென்ட் அக்குவசிஷன் (Content Acquisition) பிரிவுத் தலைவர் திரு. சபரி ஆகியோரும் உடன் இருந்தனர்.