அதிநவீன சாதனங்கள் கொண்ட ‘அரோமா ஸ்டுடியோ’ தமிழ் சினிமாவுக்கு அவசியமானது – இயக்குநர் பேரரசு பாராட்டு

0
145

அதிநவீன சாதனங்கள் கொண்ட ’அரோமா ஸ்டுடியோ’ தமிழ் சினிமாவுக்கு அவசியமானது – இயக்குநர் பேரரசு பாராட்டு

போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் என்று சொல்லக்கூடிய டப்பிங், சவுண்ட் மிக்ஸிங் போன்றவை திரைப்பட தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது, படப்பிடிப்பில் நடந்த தவறுகளை கூட பின்னணி வேலைகளின் போது சரி செய்துகொள்ளும் வசதி இருப்பதால், இந்த துறை மிக மிக முக்கியமானது. அதே சமயம், இந்த பணிகளுக்கான கட்டணம் என்பது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதிநவீன கருவிகள் கொண்ட ஸ்டுடியோக்களில் மிகப்பெரிய கட்டணம் வசூலிக்கப்படுவதால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கு பிறகு இதுபோன்ற பணிகளை முடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதே போல், குறைவான பட்ஜெட்டில் இந்த பணிகளை செய்து கொடுப்பவர்கள் தரம் அற்ற தொழில்நுட்பங்கள் மூலம் செய்வதால், படத்தின் தரம் குறையும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படி, அதிக பட்ஜெட் இருந்தால் மட்டுமே தரமான முறையில் பின்னணி வேலைகளை செய்ய முடியும் என்ற நிலை இருக்க, அந்த நிலையை மாற்றியமைக்க கோலிவுட்டில் உதயமாகியிருக்கிறது ‘அரோமோ ஸ்டுடியோ’. டப்பிங், 5.1 மிக்சிங், பாலி என அனைத்து பின்னணி பணிகளையும் குறைவான பட்ஜெட்டில் தரமான முறையில் செய்துகொடுக்கும் ‘அரோமா ஸ்டுடியோஸ்’-ன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, சரவண சக்தி, தயாரிப்பாளர் பன்னீர் செல்வம், நடிகர் குமரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு ‘அரோமா ஸ்டுடியோ’-வை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். சிறப்பான இந்த நாளில் சிறப்பான ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. இன்று தமிழ் சினிமாவில் திரைப்பட பணிகள் மட்டும் இன்றி குறும்படம், இணையத் தொடர், தொலைக்காட்சி தொடர் என ஏகப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் சினிமாத்துறை மிக நன்றாக வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு தருணத்தில் தரமான ஸ்டுடியோக்கள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட தரமான ஸ்டுடியோ தான் அரோமா ஸ்டுடியோ.

இன்று ரசிகர்களுக்கு சினிமாத்துறை பற்றி நிறைய விஷயங்கள் தெரிகிறது. ஏதோ படம் பார்த்தோம் ரசித்தோம், என்று இல்லாமல் படத்தில் இடம்பெறும் தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை ஆராய தொடங்கியிருக்கிறார்கள். அதனால், அந்த பணிகள் தரமானதாக இல்லை என்றால் ரசிகர்கள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள், அதை எளிதில் கண்டுபிடித்தும் விடுவார்கள். எனவே, அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சவுண்ட் மிக்ஸிங் போன்ற விஷயங்களை தரமாக செய்ய வேண்டும். அந்த பணியை அரோமா ஸ்டுடியோ மிக சிறப்பாக செய்யக்கூடியதாக இருக்கிறது. இங்கு அதிநவீன சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், இந்த ஸ்டுடியோவை ஆரம்பித்திக்கும் அருளுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்களுகு நீங்க நிர்ணயித்த கட்டணத்தை வாங்குங்க, ஆனால் சிறு படங்களுக்கு சலுகைகள் வழங்குங்க. இன்று திரைப்படம் மட்டும் இன்றி குறும்படங்களும் அதிகமாக வருகிறது. அந்த குறும்படங்களை வைத்து தான் பலர் வாய்ப்பும் தேடுகிறார்கள். எங்கள் காலத்தில் கதை சொல்லி வாய்ப்பு வாங்கினோம், ஆனால் இப்போது அந்த முறை இல்லை. குறும்படம் மூலமாக தான் வாய்ப்பு பெறுகிறார்கள், பெரிய அளவில் வெற்றியும் பெறுகிறார்கள். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்தை கூட இயக்குநர் பிரதீப் ரங்கநாத, குறும்படமாக தான் இயக்கியிருந்தார். அதை பார்த்து தான் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள், இப்போது அவர் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். எனவே குறும்படம் இயக்குபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர்கள் சங்கம் எப்போதும் அரோமா ஸ்டுடியோவுக்கு துணையாக இருக்கும், நீங்களும் இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு துணையாக இருங்க, சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

‘அரோமா ஸ்டுடியோ’ உரிமையாளரும், திரைப்பட இயக்குநருமான அருள் பேசுகையில், “நான் ஒரு இயக்குநராக தான் தமிழ் சினிமாவில் நுழைந்தேன், பிறகு சினிமா துறை சார்ந்த தொழிலில் ஈடுபட முடிவு செய்த போது தான் இந்த ஐடியா வந்தது. இதை ஒரு தொழிலாக செய்தாலும், முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே எதிர்பார்த்து செய்யவில்லை. படம் முடிக்க முடியாமல் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் இறுதி நேரத்தில் கஷ்ட்டப்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் இந்த தொழிலில் இறங்கினேன்.

பேரரசு சார் பேசும் போது 6 கோடி சிறிய பட்ஜெட் என்று சொன்னார், ஆனால் இங்கே 6 கோடி என்பது மிகப்பெரிய பட்ஜெட் தான். அஜித், விஜய் போன்றவர்களை வைத்து படம் எடுத்ததால் அவருக்கு 6 கோடி ரூபாய் என்பது சிறிய பட்ஜெட்டாக இருக்கலாம். ஆனால், இங்கு 20 லட்சம் ரூபாயில் படம் எடுப்பவர்களும், 50 லட்சம் ரூபாயில் படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு தரமான ஸ்டுடியோவாகவும் அரோமா இருக்கும்.

பெரிய படங்களை மட்டுமே போகஸ் பண்ணி இதை நாங்க நடத்தவில்லை, அனைத்து தரப்பினருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடங்கினோம். அதே சமயம், குறைவான பட்ஜெட் என்பதால் சாதாரண கருவிகளை பயன்படுத்தவில்லை. அதிநவீன கருவிகளை தான் பயன்படுத்தியிருக்கிறோம்.

சவுண்ட் மிக்ஸிங், டப்பிங், 5.1, பாலி ஆகிய பணிகளை தரமான முறையில் செய்து கொடுக்கிறோம். ‘பிசாசு 2’. ‘அயோத்தி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இங்கு தான் பாலி செய்தோம். இன்னும் பல படங்களின் பணிகள் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரிய படங்களுக்கு கட்டணம் உடனே வந்துவிடும் அது பிரச்சனை இல்லை, சிறிய படங்களுக்கு உடனடியாக கட்டணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுக்கு சலுகைகள் மட்டும் அல்ல, படத்தை முடிக்க உறுதுணையாக இருப்போம். அதன் பிறகு தான் பணம் எல்லாம். அதனால், அரோமா பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து தொடங்கப்படவில்லை, அதனால் அனைத்து விதமான சிறிய பட்ஜெட் படங்களும் இங்கு வரலாம். ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை அனைத்துவிதமான பட்ஜெட் படங்களுக்கும் ஒரே மாதிரியான பணிகளை இங்கே செய்து கொடுப்போம்.” என்றார்.

இயக்குநர் சரவண சக்தி பேசுகையில், “இயக்குநராக இருக்கும் அருள் இப்படி ஒரு தொழில்நுட்ப ஸ்டுடியோவை தொடங்கியிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அவர் இயக்குநர் என்பதால் இயக்குநர்களின் வலி தெரியும். அதனால், கஷ்ட்டப்படும் இயக்குநர்களுக்கு நிச்சயம் உதவி செய்வார். அதே சமயம் தரமாகவும் செய்து கொடுப்பார். அவருக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் பன்னீர் செல்வம் பேசுகையில், “இயக்குநர் அருள் அரோமா ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். தயாரிப்பாளர் தேர்தல் முடிந்து முரளி சாரின் அணி வெற்றி பெற்றிருக்கிறது. தலைவர் இங்கு வரவேண்டியது, ஆனால் இந்த நிகழ்ச்சியை அருள் திடீரென்று வைத்ததால் தலைவரால் வர முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் துணை அருளுக்கு எப்போதும் உண்டு. இன்று தொடங்கப்பட்டிருக்கும் அரோமா ஸ்டுடியோ பெரிய முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகரும், டப்பிங் யூனியனின் இணை செயலாளருமான குமரேசன் பேசுகையில், “முருகனின் வெற்றி மந்திரம் அரோகரா. அதில் முக்கால்வாசியை கொண்டிருக்கிறது இந்த அரோமா. அரோகரா வெற்றியான சொல், அரோமா அழகான சொல். அந்த சொல் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ பெரிய வெற்றியடைய வேண்டும்.

டப்பிங் யூனியன் இணை செயலாளர் என்பதால், இங்கு டப்பிங் பேச வரும் கலைஞரக்ள் டப்பிங் யூனியனில் உறுப்பினர்களாக இருக்கிறார்களா? என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், டப்பிங் யூனியனை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

அரோமா ஸ்டுடியோஸ் முகவரி:

எண் 17, பாவேந்தர் சாலை, ஸ்வர்ணாம்பிகை நகர், விருகம்பாக்கம்
சென்னை
(தேவி கருமாரி திரையரங்கத்தின் பின்பக்கம்)