ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் சர்வதேச வளாகத்தில்
3 புதிய பிரிவுகள் ரூ. 500 கோடிக்கும் மேலான முதலீட்டில் தொடக்கம்
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புளோட் கிளாஸ் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட்-கோபைன் -சிப்காட் நகர்புற வனம் ஆகிய வற்றை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் சர்வதேச வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் தொலை நோக்கு இலக்கான 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு, பசுமை சூழ் தமிழக உருவாக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி.
சென்னை, தமிழ்நாடு: மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புளோட் கிளாஸ் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட்-கோபைன் -சிப்காட் நகர்புற வனம் ஆகிய வற்றை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் சர்வதேச வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரு பெனோயிட் பாஸின், தலைைச் செயல் அதிகாரி, செயின் கோபைன், திரு பி. சந்தானம், தலைமைச் செயல் அதிகாரி, ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பிராந்தியம், செயின்ட் கோபைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீடு செய்து செயல்பட்டு வரும் செயின்ட்-கோபைன் நிறுவனம், தமிழக அரசின் தொலைநோக்கு இலக்கான 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையிலும், பசுமை சூழ் சூழலை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ. 500 கோடிக்கும் மேலான முதலீட்டில் இந்த வளாகத்தில் உருவாக்கப்பட்ட புதிய பிரிவுகள் மூலம் 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீட்டின் மூலம் சர்வதேச தரத்திலான இந்த வளாகத்தில் இந்நிறுவனம் மேற்கொண்ட முதலீடு ரூ. 3,750 கோடியாகும். ஸ்ரீபெரும்பூதூரில் அமைந்துள்ள இந்த சர்வதேச வளாகமானது இக்குழும நிறுவனங்களில் அதிகபட்ச முதலீடு மேற்கொள்ளப்பட்ட ஆலையாகத் திகழ்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சர்வதேச கண்ணாடி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு விவரங்கள்
புளோட் கிளாஸ் ஆலை
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 1998-ம் ஆண்டு புளோட் கிளாஸ் பிரிவு தொடக்கத்துக்கு அடிக்கல் நாட்டி அந்த வளாகத்தை செப்டம்பர் 2000-வது ஆண்டில் தொடங்கி வைத்து இந்தியாவில் செயின்ட் கோபைன் குழும வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார். இன்று இந்த ஆலையானது முழு கொள்ளளவை எட்டியதோடு இதன் உற்பத்தி 130%அதிகரித்துள்ளது. இந்த ஆலையில் பின்பற்றப்பட்ட பிரத்யேகமான வடிவமைப்பினால் மின் நுகர்வு 20% குறைவாக உள்ளது. இந்த புளோட் கிளாஸ் பிரிவானது அதிகபட்ச உற்பத்தி, நவீன தொழில்நுட்பம், பிரத்யேகமான வடிவமைப்பு 4.0 ஆகிய சிறப்பு தன்மைகளை உள்ளடக்கியது. இலகு ரக அதேசமயம் ஸ்திரமான கண்ணாடிகளை உருவாக்கும் நிறுவனத்தின் இலக்கை எட்டும் விதமாக இப்பிரிவு செயல்படுகிறது. நவீன கட்டமைப்புகளுக்கேற்ற கண்ணாடிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கேற்ற (மின்சார வாகனங்களுக்கானது) கண்ணாடிகள் மற்றும் சூரிய மின்னுற்பத்திக்கான கண்ணாடிகளை தயாரிக்கிறது. மேலும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலினின் இலக்கான 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் லட்சியத்தை எட்டும் விதமாக இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
முழுவதும் ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு
ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவானது உலகத் தரத்திலான கண்ணாடி காம்ப்ளெக்ஸில் உலகின் முதலாவது மற்றும் ஆசியாவில் மிகப் பெரிய முழுவதும் ஒருங்கிணைந்த வளாகம். இது 10,000 சதுரமீட்டர் பரப்பளவில் ஆண்டுக்கு 1,00,000 ஜன்னல்களை 2022 இறுதிக்குள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறையில் செயல்படும் பிரிவு. இது முழுவதும் மிகச் சிறந்த புத்தாக்க, ஆராய்ச்சி மற்றும் சோதனைக்குட்படுத்தப்பட்ட யுபிவிசி ஜன்னல் சார்ந்த பொருள்கள் குறிப்பாக எதிரொலி கேட்காத, சூரிய மற்றும் வெப்பம் கடத்தாக சவுகர்யமான மற்றும் பாதுகாப்பானவையாக தயாரிக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஜன்னல் தயாரிப்பு பிரிவானது தமிழக அரசின் வீட்டு வசதி உருவாக்கத் திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான தயாரிப்பை அளிக்கிறது.
செயின்ட் கோபைன் – சிப்காட் நகர்ப்புற வனம்
2050-ம் ஆண்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ய நிலைக்கு கொண்டுவரும் செயின்ட் கோபைன் இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறது. அதை எட்டும் வகையில் செயின்ட்-கோபைன் -சிப்காட் நகர்ப்புற வன உருவாக்கம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இக்குழும நிறுவனம் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுத்தியுள்ள முயற்சியாகும். நகர்ப்புற வனம் என்பது சுற்றுச் சூழலியல் பாதுகாப்பில் பல வழிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சுத்தமான காற்று, நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, மண் வளத்தை பெருக்குவது மற்றும் பறவைகளுக்கு புகலிடமாக இது அமையும்.
ஏறக்குறைய 60 ஆயிரம் மரங்கள் இங்குள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்டவை அரியவகை தாவரங்களாகும். இது 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் நகர்ப்புர வனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை அமைப்பதற்கு சிப்காட் உறுதுணையாக உள்ளது. இது அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இந்த நகர்ப்புற வன உருவாக்கத்தில் செயின்ட்-கோபைன் நிறுவனத்துக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுத்தியுள்ளதோடு தமிழக அரசின் பசுமை தமிழக இலக்கை எட்டுவதற்கும், மாநிலத்தின் பசுமை பகுதி அளவை 33% உயர்த்தவும் உதவியுள்ளது.
பெனோயிட் பாஸின், தலைமைச் செயல் அதிகாரி, கேம்பேனி டி’ செயின்ட் கோபைன், கூறியதாவது: இந்தியாவில் எங்கள் குழுமம் 25 ஆண்டுகளுக்கு முன்பாக முதலீடுகளைத் தொடங்கியது. இங்கு முதலீடு செய்ததில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் சமூக ரீதியிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒரு தொழில் குழுமமாக, மிகுந்த பொறுப்புடன் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்க 2050-ம் ஆண்டிற்குள் எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த புவியில் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழும் சூழலை உருவாக்குவதுதான் நோக்கம். அதிகபட்ச வெப்பம், கடும் குளிர் இவற்றைத் தாங்கி செயல்படும் வகையிலான கண்ணாடிகளைத் தயாரித்து அளிக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தொடர் ஆராய்ச்சிகள் மூலம் இலகு ரக அதேசயம் மறு சுழற்சி செய்யும் வகையிலான தயாரிப்புகளை நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் குறைவான கரியமில வாயு வெளியேற்றத்திலேயே பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தொழில் தொடங்கி செயல்படுத்தி வருவது திருப்திகரமாகவே உள்ளது. நீண்ட காலமாகவே அதிகபட்ச வளர்ச்சியை எட்டியுள்ளதோடு கட்டுமான தயாரிப்புகளை அளிப்பதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறோம். கட்டுமான பொருள்களை (கண்ணாடி மற்றும் கண்ணாடி சார்ந்த தயாரிப்பு, ஜிப்சம், மார்ட்டர், இன்சுலேஷன் மற்றும் கட்டுமான ரசாயனங்கள்) தயாரிக்கிறது. தற்போதைய நிலையில் இலகு ரக மற்றும் ஸ்திரமான கட்டுமான பொருள்களை அளிப்பதில் முன்னிலை நிறுவனமாக செயின்ட் கோபைன் திகழ்கிறது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தேவைக்கேற்ப முதலீடுகளை மேற்கொள்வது, உற்பத்தி பெருக்கம், ஆலை விரிவாக்கம், நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவது, புத்தாக்க சிந்தனைகளை பின்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்வதில் உறுதியாக உள்ளது. இன்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது, உலக தரத்திலான கண்ணாடி வளாக மையானது, இந்தியாவின் மீது குறிப்பாக தமிழகத்தின் மீது நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கையின் தொடர் வெளிப்பாடு என்று குறிப்பிட்டார்.
பி. சந்தானம், தலைமைச் செயல் அதிகாரி, செயின்ட்-கோபைன், ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பிராந்தியம், கூறியதாவது: இந்தியாவில் மிகப் பெருமளவில் நகரமயமாகும் மாநிலங்களில் முதலாவதாக தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாக வீடு கட்டுதல் கட்டுமானம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் அதிகமாக உள்ளது. இதன் மூலம் மிகப் பெருமளவிலான வாய்ப்புகள் உருவானது. இதனால் இலகு ரக மற்றும் ஸ்திரமான கட்டுமான பொருள்களை அளிப்பதில் முன்னிலை நிறுவனமாக உருவாகவும், மிகச் சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஸ்திரமான வளர்ச்சியை எட்டவும் வழியேற்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் 15 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு அதில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ. 4,700 கோடியாகும். தமிழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதின் அடிப்படையில் அதை தொடர்ந்து செயல்படுத்துவதிலும் நிறுவனம் தீவிரமாக உள்ளது. அதேபோல தமிழக அரசின் தொழில்துறை வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கும் உறுதுணையாக நிறுவனம் திகழ்கிறது என்றார்.
ஏ.ஆர். உன்னி கிருஷ்ணன், நிர்வாக இயக்குநர், செயின்ட்-கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் வர்த்தக பிரிவு கூறியதாவது:தட்டையான கண்ணாடி உற்பத்தியில் கடந்த 20 ஆண்டுகளாக செயின்ட் கோபைன் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்வதோடு புதிய தொழில்நுட்பங்களையும் பின்பற்றுகிறது. இன்று 5 ஆலைகளுடன் இந்தியாவின் தட்டை கண்ணாடி உற்பத்தியில் 50 சதவீத உற்பத்தி செய்து முன்னிலை வகிக்கிறது. 60% மேலான தட்டை கண்ணாடி முதலீடு தமிழகத்தில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ளது மிகவும் பிரத்யேகமான வளாகமாகும். இதுபோன்ற வளாகம் உலகில் வேறு எங்கும் கிடையாது. கண்ணாடி சார்ந்த அனைத்து தயாரிப்புகளும் ஒரே வளாகத்தில் உருவாக்கப்படுவது இங்கு மட்டுமே. கண்ணாடி, டின்டட் கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, சூரிய ஆற்றல் கண்ணாடி, லாக்வெர்டு கண்ணாடி, இன்சுலேட்டட் உறுதியான கண்ணாடி, மேற்பூச்சு உள்ள கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, தீப்பிடிக்காத, குண்டு துளைக்காத, வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையாலான கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வளாகத்திலிருந்து கண்ணாடி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதிப்பு கூட்டப்பட்ட 90 சதவீத கண்ணாடிகள் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. இப்போது புளோட் கிளாஸ் மற்றும் ஒருங்கிணைந்த ஜன்னல் உற்பத்தி பிரிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது ஆலையின் உற்பத்தித் திறன் அதிகரிப்புக்கு மேலும் உதவும். அத்துடன் சர்வதேச தரத்திலான தயாரிப்புகளை அளிக்கவும் வகை செய்யும். எங்கள் நிறுவனத்துடன் இணைந்து நகர்ப்புற வன உருவாக்கத்தில் சிப்காட் கைகோர்த்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது தமிழகத்தின் பசுமை சூழ் பரப்பளவை மேலும் அதிகரிக்க உதவுவதோடு, அரசு-தனியார் பங்களிப்பில் இதுபோன்று உருவாக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது என்றார்.