ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து

0
164

ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார்.

இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.

ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.

தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நாளை ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்.

பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு கோட்டைக்கு செல்கிறார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.

இந்த திட்டம் ஜூன் 3-ந்தேதி தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு சில நடைமுறைகள் உள்ளதால் இப்போதே கையெழுத்திட்டால்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்பதால் அதில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் (நகர பேருந்து) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது.

இது தவிர பல்வேறு முக்கிய அறிவிப்புகளிலும் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.