மனம் கொத்திப் பறவைகள் : ஷ்னைடர்ஸ் நிறுவனம் டிசைனிங் பிரிவு துணை மேலாளர் மதிவதனி

0
293

மனம் கொத்திப் பறவைகள் : ஷ்னைடர்ஸ் நிறுவனம் டிசைனிங் பிரிவு துணை மேலாளர் மதிவதனி

மீரான்முகமது முகநூல் பதிவு

165 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1836ம் ஆண்டு பிரான்சில் தொடங்கப்பட்ட பழம்பெரும் எலெக்டரிக் நிறுவனம் ஷ்னைடர்ஸ் (schneider electric). மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கான சாதனங்களை தயாரித்த மிகப்பெரிய நிறுவனம் இது. இன்றைக்கு உலகம் முழுக்க 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் சர்வதேச தொழில் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

மீரான்முகமது

துபாய் புஜ் கலிபா, மலேசிய டுவின் டவர் மாதிரியான பலமாடி கட்டிடங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மின் சாதனங்களை தயாரித்து, அதனை பொருத்தித் தரும் நிறுவனம் இது. ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனம் உலகில் ஊழியர் நலன் காக்கும் டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது (முதலிடம் கூகுள்). இந்த நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபம் 2.4 பில்லியன் ஈரோ. இந்தியாவில் இதன் கிளைகளில் மிகப்பெரியது பெங்களூரில் அமைந்திருக்கிறது.

இந்த நிறுவனம் பற்றி ஏன் இவ்வளவு நீட்டி முழக்கிச் சொல்ல வேண்டும் என்று இந்நேரம் நீங்கள் நெற்றி புருவத்தை உயர்த்தி இருப்பீர்கள். காரணம் இதுதான். இந்த நிறுவனத்தின் டிசைனிங் பிரிவில் மேலாளராக பதவி உயர்வு பெற்று அமர்ந்திருக்கிறார், என் மனம் கொத்திப் பறவை மதிவதனி.
இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்திருக்கும் மதிவதனி பெரிய கல்வி குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகிறவர். அம்மா குடும்பத் தலைவி. மிக சொற்ப வருமானம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.

மதிவதனி படித்தது எல்லாமே அரசுப் பள்ளியில்தான். பள்ளிப் படிப்பை முடித்ததும் அவளது தந்தைக்கு தான் சார்ந்திருக்கும் துறையில் மகளை கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஆசை. தன் துறையில் தான் தொட முடியாத உயரத்தை மகள் தொட வேண்டும் என்றே அவர் விரும்பினார். ஆனால் அதற்கு மதிவதனி ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் தந்தை எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். அதிலிருந்து மாற்றுப் பாதை ஒன்றை தேர்வு செய்தாள்.

சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் விஸ்காம் படிப்பில் சேர்த்து விடச் சொன்னாள் மதிவதனி. அப்பன்காரனும் கடனஉடன வாங்கி அந்த கல்லூரியில் சேர்த்தான். பெரும் போட்டி நிலவும் அந்தப் படிப்பில் தனது திறமையால், நேர்காணலில், தேர்வில் பெற்ற மதிப்பால் அவளுக்கு இடம் கிடைத்தது.

விஸ்காம் படித்தவள் ஒரு சினிமா கேமராவுமனாகவோ, இயக்குனராகவோ, அல்லது குறைந்த பட்சம் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவோதான் மகள் வருவாள் என்று கணித்தான் தந்தை. ஆனால் நடந்தது வேறு.
விஸ்காம் துறையில் மிகச் சிறிய பிரிவாக இருந்த டிசைனிங் துறையை அவள் தேர்ந்தெடுத்தாள். இயற்கையிலேயே அவளிடம் இருந்த கிரியேட்டிவ் சென்ஸ், படம் வரையும் திறமை ஆகியவை அவளை டிசைனிங் துறை நோக்கி நகர்த்தியது. ஆனால் இந்த துறை பற்றி தெரியாத தந்தை மகள் வேலைவாய்ப்பு மிக்க ஒரு துறையை தேர்வு செய்யாமல் எதையோ தேர்வு செய்திருக்கிறாளே என்று கவலை கொண்டான்.

அவள் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது காக்னிசென்ட் (cognizant) என்ற ஐடி நிறுவனம் காம்பெஸ் இண்டர்வியூ நடத்தியது. அந்த இண்டர்வியூவில் அது தேடியது தொகுப்பாளரையோ, கேமராவுமனையோ, இயக்குனரையோ அல்ல. ஒரு டிசைனரை. மதிவதனி தேர்வானாள். கல்லூரி படிப்பு முடிக்கவே பல மாதங்கள் இருந்த நிலையில் அவள் கையில் பல ஆயிரம் சம்பளத்துடன் கூடிய அப்பாயின்மெண்ட் ஆர்டர் இருந்தது.

படித்து முடித்ததும் காக்னிசெண்ட் நிறுவனத்தின் சென்னை கிளையில் பணியாற்றினாள். முதல் ஆண்டே ‘பெஸ்ட் எம்பாளி (best employee)’ என்ற விருதைப் பெற்றாள். அனுபவமும், சம்பளமும் படிப்படியாக உயர்ந்தது.
காக்னிசென்டில் பணியாற்றியபோது ஷ்னைடர்ஸ் நிறுவனத்தின் ப்ராஜக்டுகளை முடித்து கொடுக்கும் பொறுப்பு அவளுக்கு வழங்கப்பட்டது. அவள் முடித்துக் கொடுத்த ப்ராஜக்டுகள் அனைத்தும் ஷ்னைடர்ஸ் நிறுவனத்துக்கு பிடித்துப்போனது.

அதன்பிறகு அந்த நிறுவனம் யோசிக்கிறது. நமது ப்ராஜக்டையெல்லாம் மதிவதனிதான் செய்கிறார். ஏன் இன்னொரு கம்பெனி மூலம் அதைச் செய்ய வேண்டும். மதிவதனியை நம் நிறுவனத்திலேயே பணி அமர்த்திக் கொண்டால் என்ன என்று யோசித்தது. அவரை வேலைக்கு விரும்பி விரும்பி அழைத்தது 185 வருட பாரம்பரியம் கொண்ட நிறுவனம்.

மதிவதனி அவள் தந்தையை போல செண்டிமென்டானவள். படிக்கும்போதே வேலை தந்த நிறுவனம் காக்னிசென்ட், அனுபவத்தை வளர்த்துக்கொள்ள ஒரு பாடசாலைபோல இருந்த நிறுவனத்தை விட்டு விட்டு எப்படிச் செல்வது என்று தயங்கினாள்.

இதனால் ஷ்னைடர்ஸ் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்கும் நோக்கத்தில் தான் அப்போது வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு சம்பளமாக கேட்டாள். அந்த சம்பளத்தை தரமுடியாமல் அழைப்பை விட்டு விடும் என்று அவள் கருதினாள். ஆனால் அந்த நிறுவனம் மதிவதனி கேட்ட சம்பளத்துக்கு ஒத்துக் கொண்டது.

மதிவதனிக்கென்றே முதன் முறையாக ஷ்னைடர்ஸ் நிறுவனம் டிசைனிங் பிரிவை உருவாக்கி அதற்கு அவளை துணை மேலாளராக்கியது. தனக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளும் உரிமையையும் அவளுக்கு வழங்கியது. மதிவதனியின் டீம் தொடர்ந்து 3 வருடங்களாக அந்த நிறுவனத்தின் நன்மதிப்பை பெற்று இப்போது மேலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் மதிவதனி.

கலைக் கல்லூரியை ஏளனமான பார்க்கும் காலத்தில் அந்த கல்லூரியில் படித்து, ஒரு சர்வதேச நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வர முடிந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவள் “எங்கு படிக்க வேண்டும் என்பதை விட எதைப் படிக்க வேண்டும்” என்று தேர்வு செய்ததுதான். அதில் எப்படி பயணிக்க வேண்டும் என்று தீர்மானித்ததுதான்.

என் மனம் கொத்தி பறவையாக அவள் மாறியதற்கு அதுதான் முக்கிய காரணம். மதிவதனி நான் பெற்ற மகள் என்பதுகூட இரண்டாம்பட்சம்தான்.

நன்றி: மீரான்முகமது