புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி பினோத் குமாரை வரவேற்கும் இந்தியன் வங்கி
சென்னை, பிரபல பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி (CEO) என்ற இவ்வங்கியின் தலைமை பொறுப்பை திரு. பினோத் குமார் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார். வெவ்வேறு உயர்நிலை பதவிகளில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக வங்கிச் சேவையில் செழுமையான அனுபவத்தை இவர் கொண்டிருக்கிறார். 2022 நவம்பர் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் பேங்க் -ன் (PNB) –ன் செயலாக்க இயக்குனராக பணியாற்றிய இவர், கார்ப்பரேட் வங்கிச்சேவை, கருவூலப்பிரிவு, இன்டர்நேஷனல் வங்கிச் சேவை பிரிவு, ஃபைனான்ஸ் பிரிவு, தரவுப் பகுப்பாய்வு மற்றும் தரவு சேமிப்பகம் ஆகிய பிரிவுகளின் பொறுப்பை திறம்பட இவர் ஆற்றியவர்.
பஞ்சாப் நேஷனல் பேங்கில் நீண்டகாலம் சிறப்பாக பணியாற்றிய காலத்தில், தலைமை பொது மேலாளர் (கார்ப்பரேட் கிரெடிட்), மண்டல மேலாளர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார். துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்ஷியல் சென்டரில் தலைமை செயலாக்க அதிகாரியாக இவர் செயலாற்றி இருக்கிறார். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக தனது பணிக்காலம் முழுவதிலும் புத்தாக்கத்தையும், இயக்க ரீதியிலான திறனையும் முன்னெடுத்துச் செல்வதில் முனைப்புக்காட்டியிருக்கும் இவர், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பஞ்சாப் நேஷனல் பேங்க் – ன் சார்பாக PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ISARC (இந்தியா SME அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட்) ஆகியவற்றின் இயக்குனர்கள் குழுக்களில் நியமன இயக்குனராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
அறிவியல் துறை பட்டதாரியான திரு. குமார், NIBM கல்வி நிறுவனத்தில் வங்கி மற்றும் நிதி சேவையில் முதுகலை பட்டயப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்தவர். GARP (USA) – ஆல் சான்றளிக்கப்பட்ட ஒரு நிதிசார் இடர்வாய்ப்பு மேலாளர் (FRM) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கர்ஸ் – ன் சான்றளிக்கப்பட்ட அசோஸியேட் (CAIIB) என்ற சான்றாக்க கல்வித் தகுதிகளையும் இவர் கொண்டிருக்கிறார். கருவூல மூலதனம் மற்றும் இடர் மேலாண்மையிலும் டிப்ளமா படிப்பை முடித்திருக்கும் இவர், IIM பெங்களூருவில் தலைமைத்துவ திறன் மேம்பாடு செயல்திட்டத்தையும் நிறைவு செய்திருக்கிறார்.
இவரது தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ், சந்தை செயலிருப்பில் தனது அந்தஸ்தை மேலும் வலுவாக்கவும் மற்றும் வாடிக்கையாளர் நல்லுறவுகளை ஆழமாக்கவும் முனைப்புடன் இந்தியன் வங்கி தீவிரமாக செயல்படும். நாடெங்கிலும் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பிட்ட அமைவிடங்களில் உள்ள தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறப்பான நிதிசார் சேவைகளை வழங்குவதில் அதன் பொறுப்புறுதியை இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுத்தும் என்று நம்பப்படுகிறது.