நியாயமான கட்டணத்தில் சிகிச்சை வழங்க, புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியது, எக்விடாஸ்!
- உயர்தர புற்றுநோய் சிகிச்சையை பொருளாதார வசதி குறைந்த பிரிவினர் அணுகக்கூடிய வகையில், எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளை மற்றும் சிருங்கேரி சாரதா மடம் இணைந்து உருவாக்கியுள்ளன!
- கௌரிவாக்கத்தில் அமைந்துள்ள – 100 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையை மாண்புமிகு அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
சென்னை, நவ. 16, 2023
எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளையின் (Equitas Healthcare Foundation) சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி & கேன்சர் கேர் (Sringeri Sharada Equitas Hospital Multispecialty & Cancer Care) மருத்துவமனையை மாண்புமிகு தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் இன்று (நவ. 16, 2023) தொடங்கி வைத்தார். தாம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஆர். ராஜா இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சேவை செய்வதற்காக சென்னை, கௌரிவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தப் பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனை, எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் (Equitas Small Finance Bank), வங்கிக்கு அப்பாற்பட்ட சேவை முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, பொருளாதார வசதி குறைந்த பிரிவினருக்கு நியாயமான சேவைக் கட்டணத்தில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளை வழங்கும்.
சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை (Sringeri Sharada Equitas Hospital), கேன்சர் கம் மல்டி ஸ்பெஷாலிட்டியில் (Cancer cum Multispecialty) கவனம் செலுத்துகிறது. அறுவை சிகிச்சை புற்றுநோயியல் (Surgical Oncology), மருத்துவப் புற்றுநோயியல் (Medical Oncology), கதிர்வீச்சு புற்றுநோயியல் (Radiation Oncology), நோயெதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy), குழந்தைகளுக்கான இலக்கு சார்ந்த புற்றுநோய் சிகிச்சை (Paediatric Oncology Targeted Therapy), ஃபிசியோதெரபி (Physiotherapy), புற்றுநோய் மறுவாழ்வு சிகிச்சை (Cancer Rehabilitation), இரைப்பைக் குடலியல் மருத்துவம் – அறுவை சிகிச்சை (Medical and Surgical Gastroenterology), தீவிர கவனிப்பு (Critical Care), புற்றுநோய் வலி மேலாண்மை (Cancer Pain Management), நலவாழ்வு மற்றும் லிம்பெடிமா கிளினிக் (Wellness and Lymphedema Clinic) உள்ளிட்ட விரிவான புற்றுநோய் சிகிச்சைகளை வழங்குவதற்கான அதிநவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது.
அனைத்து சிகிச்சைகளும் மிகவும் அனுபவம் வாய்ந்த புற்றுநோயியல் நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிற மருத்துவ வல்லுநர்கள் குழுவால் வழங்கப்படும். சமுதாய அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சையை வழங்க இம்மருத்துவமனை நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.
இது குறித்து எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி & மேலாண் இயக்குனர் மற்றும் எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. பி. என். வாசுதேவன் கூறுகையில், “புற்றுநோய் என்பது குடும்பங்களில் உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோய். நியாயமான கட்டணத்தில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படாததை எங்கள் ஆரம்ப சுகாதார முகாம்கள் மூலம் கவனித்தோம். அந்த இடைவெளியைக் குறைப்பதற்கும், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை வழங்குவதற்கும் இந்த மருத்துவமனை ஒரு முன்மாதிரி முயற்சியாகும்” என்றார்.
மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம் கூறுகையில், “புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்க்கு சிகிச்சையை மேற்கொள்ள இந்தியாவில் அதிகம் செலவழிக்க வேண்டும். புற்றுநோய் சிகிச்சை எளிதில் அணுகக்கூடியதாக, பொருளாதார வசதி குறைந்த பிரிவினருக்கு நியாயமான கட்டணத்தில் வழங்கக்கூடியதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி எக்விடாஸ் மற்றும் சிருங்கேரி சாரதா மடத்தின் சேவை மனப்பான்மையைக் காட்டுகிறது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் தேவைப்படுபவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை உருவாக்கவுள்ளேன் ” என்றார்.
வங்கியின் சி.எஸ்.ஆர். முன்முயற்சிகளின் தலைவர் மற்றும் ஹெல்த்கேர் முன்முயற்சிகளின் திட்ட இயக்குநர் திரு. ஆற்காடு ஸ்ரவணகுமார் கூறுகையில், “இது எங்களுடைய மிகப்பெரிய, புனிதமான திட்டம் ஆகும். எங்கள் குழுவின் 7 வருட விடாமுயற்சி, சிருங்கேரி சாரதா மடத்தின் உதவி, எங்கள் வங்கியின் 5% நிதிப் பங்களிப்பு மற்றும் சில உன்னத ஆத்மாக்களின் நன்கொடைகள் மூலம் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நன்கொடையாகப் பெறப்பட்ட நிலம், கட்டிடம் மற்றும் உபகரணங்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளதால் முதலீட்டுச் செலவுகள் என்று எதுவும் தனியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அனைத்து நோயாளிகளுக்கும் உதவக்கூடிய நியாயமான கட்டணத்தில் சிகிச்சைகளை வழங்குவது சாத்தியமாகிறது. இங்கு சந்தைக் கட்டணத்தில் 30% முதல் 50% வரையிலேயே நோயாளிகளிடமிருந்து கட்டணம் பெறப்படும். உலகின் சிறந்த கதிர்வீச்சு இயந்திரங்களில் ஒன்றாகிய லீனியர் ஆக்சிலரேட்டர் மற்றும் பிராச்சி (Linear Accelerator and brachy) 2024-ஆம் ஆண்டின் மத்தியில் இங்கு செயல்படும் என்கிற தகவலைப் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
இந்த மருத்துவமனையானது, எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் சி.எஸ்.ஆர். திட்டமாகிய எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளை மற்றும் சிருங்கேரி சாரதா மடத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோயியல் சிகிச்சையைத் தவிர, மருத்துவமனையில் 24 மணி நேர நவீன ஆய்வகம், இமேஜிங் – புற்றுநோய் பரிசோதனை வசதி, மருந்தகம், மூன்று அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் ஐ.சி.யு. ஆகியவை உள்ளன. வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் மற்றும் நீரிழிவு கிளினிக்கையும் இது கொண்டுள்ளது. இங்கு வழக்கமான ஆரோக்கியம் மற்றும் சுகாதாரப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம்.
மருத்துவமனை குறித்த கூடுதல் தகவல்களுக்கு: https://www.equitashospital.org/