திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: திமுக தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 அறிக்கை

0
174

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: திமுக தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 அறிக்கை

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இந்த சூழலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் வைத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் முக்கியமானவை குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், “ திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும். கலைஞர் பெயரில் உணவகம் அமைக்கப்படும்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். பணியின் போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும். எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி முடித்து காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக பணி வழங்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும், ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். சிறுகுறு விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம் வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு. ரூ.5 குறைகப்படும். 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்படும். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்

டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும். மக்களிடம் வாங்கிய மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கிடைக்கும். நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதல் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும். லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும்” என்று கூறினார்.

நிறைவாக கலைஞர் கூறுவது போல என்று, “சொன்னதை செய்வோம். செய்வதை செல்வோம்” என்று கூறி தனது உரையினை முடித்தார்.