தமிழகத்தில் ஜூலை 23 முதல் 29 வரை ரஷ்ய கல்விக் கண்காட்சி!

0
209
Russian Centre of Science and Culture, in association with Study Abroad Educational Consultants, the authorised Indian Representative for Russian Universities, is organising Russian Education Fair 2022 in Chennai between 23rd and 24th July From left to right:  Mr. Denis Kovizhnykh, Volgograd state medical university  Mr. Timur Akhmetov, Kazan state medical university  Mr. Ravi Chandran, Study abroad educational consultants  Mr. Lagutin Segey Alekseevich, Consul, Consulate General of the Russian Federation in Chennai  Ms. Elena Sarapultseva, Medical institute of MEPhI  Ms. Ekaterina Shilova, Immanuel Kant Baltic federal University

தமிழகத்தில் ஜூலை 23 முதல் 29 வரை ரஷ்ய கல்விக் கண்காட்சி!

· மருத்துவம், பொறியியலுக்கு ஸ்பாட் அட்மிஷன்!

· ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 12 ரஷ்யப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் வருகை தருகிறார்கள்.

· சென்னையில் ஜூலை 23, 24, கோவையில் ஜூலை 26, மதுரையில் ஜூலை 28, திருச்சியில் ஜூலை 29 ஆகிய தேதிகளில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

சென்னை, 21, ஜூலை 2022

சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் (Russian Centre of Science and Culture), ரஷ்யப் பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனமான ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் (Study Abrad Educational Consultants) உடன் இணைந்து நடத்தும் ‘ரஷ்ய கல்விக் கண்காட்சி 2022’-ஐ தமிழகத்தில் ஜூலை 23-29-க்கு இடைப்பட்ட தேதிகளில் நடத்த உள்ளது.

முக்கிய ரஷ்ய மருத்துவ, தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியின் 20-ஆம் ஆண்டு நிகழ்வு, ஜூலை 23 முதல் 24 வரை சென்னையிலும் (ரஷ்ய கலாசார அறிவியல் மையம்), ஜூலை 26-ஆம் தேதி கோவையிலும் (ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட்), ஜூலை 28-ஆம் தேதி மதுரையிலும் (ஹோட்டல் தி மதுரை ரெசிடென்சி), ஜூலை 29-ஆம் தேதி திருச்சியிலும் (ஹோட்டல் ஃபெமினா), காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிகள், கண்காட்சி பற்றிய விவரங்களை அறிய மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9282 221 221 / 99401 99883.

இந்த செப்டம்பரில் தொடங்கும் 2022-ஆம் கல்வியாண்டில் இளங்கலை / முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தகுதியையும் உரிய சான்றுகளையும் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இக்கண்காட்சியின்போது ஸ்பாட் அட்மிஷனும் வழங்கப்படும்.

இந்திய மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் பிரபலமான படிப்பு மருத்துவம் ஆகும். 70-க்கும் மேற்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் எம்.டி. (M.D.) பட்டத்தை வழங்குகின்றன, இது இந்தியாவின் எம்.பி.பி.எஸ். (M.B.B.S.) படிப்புக்கு இணையானது. இந்தப் பல்கலைக்கழகங்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தால் (National Medical Commission) அங்கீகரிக்கப்பட்டவை, உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவப் பள்ளிகளுக்கான டைரக்டரியிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,500 – 4,000 இந்திய மாணவர்கள் ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேர்கிறார்கள். ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் தற்போது சுமார் 20,000 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள், +2 தேர்வில் – தொடர்புடைய முக்கிய பாடங்கள் / பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் (எஸ்.சி. / எஸ்.டி. மற்றும் ஒ.பி.சி. மாணவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% மட்டுமே), ரஷ்ய மருத்துவ இளங்கலை, முதுகலை பட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்வழி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற தகுதித் தேர்வுகள் எதுவும் எழுதத் தேவையில்லை. பல்கலைக்கழகம், படிக்கும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து, ஆங்கில வழிப் படிப்புகளுக்கான படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு 3,500 முதல் 6,000 அமெரிக்க டாலர் வரை செலவாகும்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு 100% இலவசக் கல்வியைப் பெறுவதற்கான உதவித்தொகைத் திட்டத்தை ரஷ்ய அரசு வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்களுக்கு 100 உதவித்தொகை வாய்ப்பு வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, சிறப்பு, மேம்பட்ட முதுகலை பட்டங்கள் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உதவித்தொகையின்கீழ் கற்றுத்தரப்படுகின்றன. தகுதிவாய்ந்த மாணவர்கள் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கண்காட்சி குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதரகத் துணைத் தூதர் திரு. லகுடின் செர்ஜி அலெக்ஸீவிச் (Mr. Lagutin Sergey Alekseevich) கூறுகையில், “உலக அளவில் உயர்கல்வித் துறைகளில் சிறந்ததாக ரஷ்ய உயர்கல்வித் துறை கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு, வலுவான அறிவியல் அடிப்படை, உயர்நிலைப் பயிற்சி ஆகியவற்றிற்கு ரஷ்யா பெயர்பெற்றது. மதிப்புமிக்க, உலகளாவிய அங்கீகாரம் பெற்ற, செலவு அதிகமில்லாத கல்வியைப் பெற ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ரஷ்யாவுக்கு வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய-ரஷ்ய உறவு எப்பொழுதும் வலுவாக இருப்பதால், ரஷ்யாவில் அவர்கள் சிறப்பு கவனம் பெறுகிறார்கள்.

ரஷ்யாவில் உயர்கல்விக்கான செலவு ஒப்பீட்டளவில் குறைவு, ஏனென்றால் ரஷ்ய அரசு அதிக மானியம் வழங்குகிறது. சர்வதேச விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஆதரவு மற்றும் தகவமைப்புத் திட்டங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களும் இந்திய மாணவர்களுக்கான பல சிறப்பு தகவமைப்புத் திட்டங்கள், ஆதரவு அமைப்புகள் மூலம் உதவிகளை வழங்குகின்றன” என்றார்.

ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. சி. ரவிச்சந்திரன் கூறுகையில், “வர்த்தக அடிப்படையிலும் அரசு உதவித்தொகை சார்ந்தும் சர்வதேச மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுவதற்கு ரஷ்யா விருப்பமான இடமாக மாறிவருகிறது. 200 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,00,000 வெளிநாட்டு மாணவர்கள் அந்நாட்டின் 600 அரசுப் பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், உலகக் கல்வித் தரவரிசையில் ரஷ்ய உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ரஷ்ய மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு உயர் தரவரிசைகளில் இடம்பெற்றுள்ளன. ரஷ்யா சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கியுள்ளது. கோவிட்-19-க்கு எதிரான ஸ்புட்னிக் வி என்கிற முதல் தடுப்பூசியை ரஷ்யாவே கண்டறிந்தது. உலகெங்கிலும் உள்ள பல பிரபல மருத்துவர்கள் ரஷ்யாவில் படித்தவர்களே. ரஷ்யாவில் கல்வி பயின்ற 75,000 மருத்துவர்கள் இந்தியாவில் மருத்துவச் சேவை ஆற்றிவருகின்றனர். அனைத்து ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்களும் இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

திரு. டெனிஸ் விக்டோரோவிச் கோவ்ரிஷ்னிக் (Mr. Denis Victorovich Kovrizhnykh), வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (Volgograd State Medical University) உதவி டீன், திரு. தைமூர் ரஸ்டெமோவிச் அக்மெடோவ் (Mr. Timur Rustemovich Akhmetov), கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (Kazan State Medical University) வெளிநாட்டு மாணவர் பிரிவு துணை டீன், திருமதி. சரபுல்ட்சேவா எலெனா (Ms. Sarapultseva Elena), இன்பே தேசிய அணு ஆராய்ச்சி பல்கலைக்கழக (மெஃபி) (Inpe National Research Nuclear University (Mephi)) பேராசிரியர், திருமதி. எகடெரினா செர்ஜீவ்னா ஷிலோவா (Ms. Ekaterina Sergeevna Shilova), இமானுவேல் கான்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழக (Immanuel Kant Baltic Federal University) சர்வதேச மாணவர்களுக்கான தலைமை நிபுணர் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள கல்விக் கண்காட்சியில் பின்வரும் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவுள்ளன: மாஸ்கோ மாநில உளவியல் மற்றும் கல்வி பல்கலைக்கழகம் (Moscow State University of Psychology & Education), மாஸ்கோ மாநில சிவில் பொறியியல் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி பல்கலைக்கழகம்) (Moscow State University of Civil Engineering, National Research University), மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Moscow Institute of Physics and Technology), உல்யனோவ்ஸ்க் மாநில தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Ulyanovsk State Technical University), யூரல் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Ural Federal University), பீட்டர் தி கிரேட் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் (Peter the Great St. Petersburg Polytechnic University), அஸ்ட்ராகான் மாநிலப் பல்கலைக்கழகம் (Astrakhan State University), ஓரன்பர்க் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Orenburg State Medical University), பெர்ம் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Perm State Medical University), மரி மாநிலப் பல்கலைக்கழகம் (Mari State University), வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Volgograd State Medical University), கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Kazan State Medical University), இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Immanuel Kant Baltic Federal University), மாஸ்கோ மாநில பிராந்திய பல்கலைக்கழகம் (Moscow State Regional University).

உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:

உக்ரைன் (Ukraine), டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) மக்கள் குடியரசுகளில் மருத்துவம், பொறியியலில் சமீப காலத்தில் உயர்கல்வியை முடிக்க முடியாத இந்திய மாணவர்கள், ரஷ்யாவில் தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் – இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் மார்ச் 2022 இல் ஒரு ஆணையையும் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.