சென்னை அயனாவரத்தில் 150 படுக்கை வசதிகள் கொண்ட சாந்தா தேவி ஜவகர்மால்ஜி சந்தன் இலவச கொரோனா மையத்தை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் பிளாட்டினம் டிரஸ்ட் மற்றும் தாதாவாதி ஸ்ரீ ஜின்குசல்சுரிஜி ஜின்சந்திரசுரிஜி டிரஸ்ட் ஆகியவை இணைந்து 150 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை சென்னை அயனாவரம் ஸ்ரீ ஜெயின் தாதாவாதி மகாவீர் பவனில் தொடங்கியுள்ளனர். இந்த கொரோனா மையத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலாநிதி வீராசாமி எம்.பி., தாயகம் கவி, எம்.எல்.ஏ மற்றும் சமூக ஆர்வலர் ஸ்ரீ பிரவீன்ஜி சந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முற்றிலும் இலவசமான இந்த கொரோனா மையத்தில் 24 மணி நேர மருத்துவ குழு, சத்தான தரமான உணவு, ஆம்புலன்ஸ் வசதி, இரத்த பரிசோதனை வசதி, சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலுடன் ஆக்ஸிஜன் வசதி, ஸ்கேன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் கொரோனா நோயாளிகள் +91 98410 98765 அல்லது +91 73052 63629 என்ற எண்களை தொடர்பு கொண்டு தங்களது சோதனை சான்று மற்றும் சி.டி. ஸ்கேன் அறிக்கையை மருத்துவர் பார்வைக்கு சமர்ப்பித்தால் மட்டும் போதுமானது.
இந்த கொரோனா மையத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை சாந்திதேவி ஜவஹர்மால்ஜி சந்தன் குடும்பத்தினரும், உணவு மற்றும் ஊட்டச்சத்து வசதிகளை ஆர்.சி.சி. மேக்னம் அறக்கட்டளையும் செய்து கொடுத்துள்ளன. ஆர்.சி.சி. பிளாட்டினம் டிரஸ்ட் கடந்த டிசம்பர் 2012 முதல் பானி என்ற சுத்தமான குடிநீர் திட்டத்தின் மூலம் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் சுத்தமான RO நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவியுள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்குமிடம், போர்வைகள், அத்தியாவசிய பொருட்கள், முதியோர் மற்றும் அனாதை இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றிற்கு மாண்டிசோரி கற்பித்தலுக்கான உபகரணங்கள் போன்ற அடிப்படை தேவைகளை ஆர்.சி.சி. பிளாட்டினம் டிரஸ்ட் செய்து கொடுத்துள்ளது.