சிறுதானியங்களின் பெருமையை மீண்டும் கொண்டுவருவது உணவு, ஊட்டச்சத்து, பொருளாதாரம் ஆகிய 3 துறைகளில் நாட்டை தற்சார்புடையதாக மாற்றும் :பியூஷ் கோயல்
புதுதில்லி, பிப்ரவரி 24, 2022
சிறுதானியங்கள் குறித்த முக்கியத்துவம் யோகா போல இந்தியாவின் வேர்களை மீண்டும் கொண்டு வரப்போவதாக உள்ளது என்று மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம், ஜவுளி, தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
“சிறுதானியங்களின் பெருமையை மீண்டும் கொண்டுவருவது உணவு, ஊட்டச்சத்து, பொருளாதாரம் ஆகிய 3 துறைகளில் நாட்டை தற்சார்புடையதாக மாற்றும்” என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.
வேளாண்துறையில் மத்திய பட்ஜெட் 2022-ன் ஆக்கப்பூர்வமான தாக்கம் என்பது குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமரின் உரையைத் தொடர்ந்து ‘திறன்மிக்க வேளாண்மை : சிறுதானியங்களின் பெருமையை மீண்டும் கொண்டுவரும் ; சமையல் எண்ணெயில் தற்சார்பை நோக்கி முன்னேறுகிறோம்’ என்ற பொருளில் திரு கோயல் உரையாற்றினார்.
சிறுதானியங்களின் ஏற்றுமதி இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற 4 மந்திரங்களை அவர் வழங்கினார். “1) மாறுபட்ட சாகுபடிக்கு கர்நாடகாவின் வெற்றிகரமான பழங்கள் மாதிரியை மாநிலங்கள் சிறுதானியங்கள் விஷயத்தில் செயல்படுத்தலாம். 2) தரத்தை உறுதிசெய்ய நவீன தொழில்நுட்பங்கள் கிடைப்பதற்கு வேளாண்துறை சார்ந்த புதிய தொழில்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தலாம். 3) குடும்பங்களில் சிறுதானியங்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பயன்கள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க இயக்கங்களைத் தொடங்கலாம். 4) இந்தியாவின் முத்திரையிட்ட சிறுதானியங்களை ஊக்கப்படுத்த சர்வதேச தொடர்பை ஏற்படுத்தலாம்” என்று தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் பேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளர் டாக்டர் டி மொகபத்ரா, உலகம் முழுவதும் 718 லட்சம் ஹெக்டேரில் 863 லட்சம் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் இந்தியாவில் 138 ஹெக்டேர் நிலப்பரப்பில் 173 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார்.