கொரோனா தடுப்பு பணிக்காக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ.1.25 கோடி நிதியுதவி
வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்காக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி திரட்டும் முயற்சியை சில தினங்களுக்கு முன் தொடங்கினார். இதுதொடர்பான அறிக்கையில், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது.
எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். அதனால், பொதுமக்களும் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு” வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர்.
தற்போது வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் எம். வி. முத்துராமலிங்கம் அவர்களும், அறக்கட்டளையின் இயக்குநர்கள் எம்.வி. ஸ்ரீராம், மற்றும் எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர்களும் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான காசோலையைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடம், 2021 மே 19 அன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்கள்.
தொற்றுநோயை எதிர்த்துத் திறம்பட போராடும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தமிழக முதலமைச்சருடன் இணைந்து செயல்பட வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த முயற்சியை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.