கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

0
105

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்தன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள் தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் பறை சாற்றுவதாக அமைந்துள்ளன.

இதுவரையில் நடந்துள்ள 7 கட்ட அகழாய்வுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 8ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3ஆம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் இரண்டாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மாளிகைமேடு நிகழ்வில், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.