கல்வித்துறையில் சிறந்து விளங்கும் இந்துஸ்தான் கல்விக்குழுமம், டாக்டர் கே.சி.ஜி வர்கீஸ் எக்ஸலன்ஸ் விருதுகளை 32 ஆளுமைகளுக்கு வழங்கி சிறப்பித்தது

0
160
கல்வித்துறையில் சிறந்து விளங்கும் இந்துஸ்தான் கல்விக்குழுமம், டாக்டர் கே.சி.ஜி வர்கீஸ் எக்ஸலன்ஸ் விருதுகளை 32 ஆளுமைகளுக்கு வழங்கி சிறப்பித்தது.
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர் கே.சி.ஜி. வர்கீஸ் எக்ஸலன்ஸ் விருது விழாவின் 4 வது பாதிப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தி இந்து குழும இயக்குனர், பத்திரிகையாளர் ராம் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், விருது பெற்றவர்கள் நன்கு அறியப்பட்டவர் என்று கூறியதுடன் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த விருது விழாவில் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தி, ஜெர்மனியின் கன்சல் ஜெனரல் மைக்கேலா குச்லர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், இந்துஸ்தான் கல்விக்குழும தலைவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், நிறுவன தலைவர் எலிசபெத் வர்கீஸ், துணை தலைவர்கள் சூசன் வர்கீஸ், அசோக் வர்கீஸ், செயல் இயக்குனர் அபி சாம், கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் அன்னீ ஜேக்கப் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வாழ்நாள் சாதனையாளர், கல்வி, ஆராய்ச்சி, பெருநிறுவனம், சமூக மேம்பாடு, யூத் ஐகான், விளையாட்டு, சிறந்த முன்னாள் மாணவர்கள் என 8 பிரிவுகளில் 32 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, பி.எஸ்.சுரானா, சர்வதேச வழக்கறிஞர் முத்துநாயகம், நல்லி குப்புசாமி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் ராஜீவ் அஹுஜா, ஐ.ஐ.டி.எம் முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோருக்கு கல்வித்துறையில் சிறந்து விளங்கியதற்கான விருதுகள் வழங்கப்பட்டன.
ஆய்வாளர் ஜி.பாலு, என்.ஐ.ஓ.டி. யின் இயக்குனர் ஜி.ஏ.ராமதாஸ் உள்ளிட்டோருக்கு ஆராய்ச்சிக்கான விருதும், அஜித் ஐசக், எஸ்.ஆர்.சபாபாதி உள்ளிட்டோருக்கு பெருநிறுவன விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஏ.எஸ்.வெங்கடேஷ், ஜார்ஜி ஆபிரகாம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களுக்கு சமூக மேம்பாட்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னணி பாடகி உத்தாரா உன்னிகிருஷ்ணன், பிரசித்தி சிங், யோகா குரு ப்ரிஷா ஆகியோருக்கு யூத் ஐகான் விருதுகளும், தேசிய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரைக்கு விளையாட்டுக்கான விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த முன்னாள் மாணவருக்கான விருதுகள் இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சேவை இயக்குனர் விக்ரம் டி முருகராஜ், ஜெனரல் மோட்டார்ஸின் முன்னாள் மூத்த நிர்வாகி சர்வ ராஜநாயகம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது தமிழர் ராஜசேகர் பச்சை உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது விழாவில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.